சாத்தான்குளம் அருகே தோட்டத்தை அபகரிக்க போலியாக ஆவணம் தயாரித்து தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணன், தம்பி உட்பட 4பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த செய்யது ரபிக் மனைவி தில்ஷத்பேகம் (54) என்பவர் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்ககுடியை சேர்ந்த அகஸ்டின் ஜெபராஜ் என்பவரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு பத்தரை ஏக்கர் நிலம் வாங்கி அதில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த இடம் தங்களுக்கு பாத்தியப்பட்டது என கூறி அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்த செல்லையா மகன் துரை (எ)சந்திரன் தான் அகஸ்டினிடம் பத்திர பதிவு செய்ததாக போலியாக ஆவணம் தயார் செய்து தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் தில்ஷத்பேகத்திடம் பிரச்சினை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் தில்ஷத்பேகம் அவர்களது தோட்டத்திற்கு முன்பு தனது கணவருடன் நின்றபோது அங்கு வந்த செல்லையா மகன்கள் அருணாச்சலம், துரை என்ற சந்திரன் மற்றும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் ராஜகோபால், தாமரை மொழியை சேர்ந்த மாசானம் மகன் கருப்பசாமி ஆகியோர் நிலம் தொடர்பாக கணவன், மனைவியை அவதூறாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. .
இதுகுறித்து தில்ஷத்பேகம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் எபநேசர் 4பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி விசாரித்து அருணாச்சலம், துரை என்ற சந்திரன், ராஜகோபால் கருப்பசாமி ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்.


