108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9வதும், குருவுக்கு அதிபதியானதுமான ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் மூலவர் ஆதிநாதர். தாயார் ஆதிநாயகிவல்லி குருகூர்வல்லி என 2 நாச்சியார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படும் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விகாசம் அன்று திருஅவதாரம் செய்தார். இங்கு அமைந்துள்ள புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் தியானம் இருந்த நம்மாழ்வார் ஞானம் பெற்ற திருத்தலம்.
மதுரகவி ஆழ்வாரால் கோவில் உள்ளே அமைந்துள்ள புளியமரத்தடியில் தனி சன்னதி ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வைகாசித் திருவிசாகத்தில் திருநட்சத்திர திரு அவதார திருவிழா 10 தினங்கள் நடைபெறுகின்றது.
இதையட்டி நேற்று மாலை திருமுளைச்சாற்று ஸ்ரீ சூரத்தாழ்வான் சன்னதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து விருச்சிக லக்னத்தில் விழா தொடங்கியது.
அதன் பின்னர் இன்று காலை மிதுன லக்னத்தில் கொடியேற்றம் சிறப்பாக நடந்தது. இதையட்டி காலையில் கும்ப பூஜை நடைபெற்றது. பின்னர் நகர்வலம் வந்த கொடிப்பட்டம் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் மற்றும் ஆச்சாரியர்கள் பிரபந்த பாராயணம் செய்தனார். திருவிழா நாட்களில் தினம்தோறும் மாலை சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது.


