தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் நினைவு மணிமண்டபம் அமைந்துள்ளது. சுந்தர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் தளபதியாக இருந்தார். இந்த மண்டபத்தில் வெள்ளையத்தேவனின் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு வருடம்தோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வல்லநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வெள்ளையத்தேவனின் வாரிசுகளும் வெள்ளையத்தேவனின் முழு திருவுருவ சிலையை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2020 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு வெள்ளையத்தேவனுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பெரிய மீசையுடன், உறுதிய வாளுடன் குதிரை மீது அமர்ந்து வரும்படியான சிலை ரூ.39.75 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணி சென்னையில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் முழு உருவ சிலை வல்லநாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் இன்று சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 253 வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. வல்லநாட்டில் உள்ள மணி மண்டபத்தில் அவரது முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முழு உருவச் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதிராஜேந்திரன்,கருங்குளம் பி டி ஓ க்கள் செல்வி, பாக்கியம்லீலா, கருங்குளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சுரேஷ் காந்தி, இசக்கி பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், முன்னாள் சேர்மன் சுடலை பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பாலசரஸ்வதி நயினார், ஒன்றிய துணைச் செயலாளர் பழனி குமாரசாமி, முறவை முருகன், முதல் சுதந்திர போராட்ட வீரர் வாரிசுதாரர்கள் குடும்பமாக கலந்து கொண்டனர். பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் வெள்ளைச்சாமி, உதவி செயற்பொறியாளர் முருகம்மாள், முக்கிய பிரமுகர் உமரிசங்கர், சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் அவர்களின் வாரிசுதாரர்கள் மாரிமுத்து, சின்னத்தாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.


