தனியார் தொழிற்சாலையில் வேலைசெய்த ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த இளைஞர் மரணத்திற்கு நீதி வேண்டி 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மோகன் (29). இவர் தூத்துக்குடி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் பூ பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிற்சாலையில் எலக்ட்ரிஷன் ஆக கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 23ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் திருநெல்வேலியில் உள்ள தொழிலாளர் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது மோகன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இறந்த மோகனின் குடும்பத்திற்கு அவர் பணியாற்றிய தனியார் நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


