தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2, 2ஏ-ல் உள்ள பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. தூத்துக்குடியில் 51 மையங்களில் 15 ஆயிரத்து 295 பேரும், கோவில்பட்டியில் 32 மையங்களில் 9 ஆயிரத்து 104 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 6 மையங்களில் 1,638 பேரும், திருச்செந்தூரில் 16 மையங்களில் 4 ஆயிரத்து 747 பேரும் ஆக மொத்தம் 105 மையங்களில் 30 ஆயிரத்து 784 பேர் தேர்வு எழுதினர்.
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த தேர்வுக்காக 22 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 12 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டது. தேர்வு கூடத்துக்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், கைக்கடிகாரம், புத்தகங்கள், போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.


