தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், உதவித் தொகை பெற மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் “தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200, தோ்ச்சியுற்றோருக்கு மாதம் ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 என 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை அவரவா் ஆதாா் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
விண்ணப்பதாரா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடா்ந்து பதிவை புதுப்பித்தவராகவும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குள் இருக்க வேண்டும். அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


