“ஏட்டையய்யா நான் போவட்டுமா?”
பெரிய நாடார் ஏட்டையாவிடம் கேட்டார்.
“போவும் வே. போயி தொலையும்”. எரிச்சலாய் ஏட்டு கூறினார்.
பெரிய நாடார் விட்டால் போதும் என்று ஓடி விட்டார். நல்லவேளை பொடி பார்த்த பார்வை கள்ளு மணம் ஏட்டையாவுக்கு தெரியவில்லை. தெரியவில்லையா அல்லது போனால் போவுது என்று விட்டாரோ தெரியவில்லை.
அந்த காலத்தில் போலிஸ் என்றால் அவ்வளவு பயம். போலிசார்கள் கள்ளு குடித்தவர்களை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிச்சென்று விடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் கள்ளு பானையோடு வியாபாரிகளை பிடிச்சா, கள்ளு பானையை தலையில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு போவாங்க. மானம் போய் விடும். இதனால் பலர் பயந்தே கள்ளு வியாபாரம் செய்ய மாட்டார்கள்.
இது ஒரு புறம் கள்ளச் சாராயம் காய்தால் கேட்கவே வேண்டாம். காட்டுக்குள்ள உடைகாட்டுக்குள்ளே ஊறல் போட்டு வைத்து இருப்பார்கள். அதைக் கண்டு பிடித்து, அவர்கள் போட்டு வைத்த ஊறல்களை யெல்லாம் அழித்து விடுவார்கள். அதன் பின் சாரய பானையை தலையில் ஏற்றி ஊர்வலமாக கூட்டி வருவார்கள். இந்த தண்டனையே பலருக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.
எனவே போலிசை பார்த்தாலே போதும், கள்ளச்சாராயம் காய்க்கிறவங்க ஓடி ஒளியுவாங்க. அந்த காலத்தில் தாலியை வித்து சாராயம் குடிக்கும் குடிமகன்களை அரசே திருத்த பல ஏற்பாடுகளை செய்தது. அது காமராஜர் காலம். பொற்காலம்.
இன்றைக்கு அரசே கடையை திறந்து விட்டு இருக்கிறது. கடையில் விற்பனையை அதிகரிக்க அனைத்து திட்டங்களும் தீட்டுறாங்க. குடிக்கிறவங்களை ஊக்கம் கொடுக்கிறாங்க. அதனால் குடிக்கு அடிமையாகி அவர்கள் விபத்துக்குள்ளாகி, வீட்டுக்கு பணம் கொடுக்காமல் வீட்டில் உள்ளவர்களை வாட்டி வதைக்கிறார்கள். சிலர் எதிரே வருபர்கள் மீது மோதி அப்பாவி மக்கள் குடும்பத்தினை தெருவுக்கே கொண்டு வந்து விடுவார்கள்.
மக்களுக்கு அசௌக்கரியமுன்னு தெரிஞ்சே மது கடையை திறந்து விட்டு இருக்கிறாங்கள். மது ஒழிப்பை கொண்டு வருவோம் என ஓட்டை வாங்கிவிட்டு கடைசியில் அரசு வருமானமே அதில் தான் இருக்கிறது என்று தொடர்ந்து அரசே மது கடையை நடத்துகிறது. பிறகு எங்கே போலிசுக்கு பயம் இருக்கும்.
சந்திரன் இதையெல்லாம் பார்த்து ரொம்ப நொந்து போய் விட்டான். அவனுக்கு மும்பை மாநிலம் கலச்சாரங்கள் ரொம்ப பெரியதாக தெரிந்தது. அங்கு மது கலச்சாரம் இல்லை. லஞ்சம் பெரியதாக இல்லை. யாரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லை. உதவி புரியும் மனம் நிறைய இருந்தது. லஞ்சம் ஏழை மக்களை வாட்டி வதைக்க வில்லை. ஆனால் இங்கு அரசு வேலைக்கு லட்ச கணக்காக பணம் பறிக்கும் கும்பல் , இறந்த வீட்டில் பணம் பறிக்கும் கும்பல் என கும்பல் கும்பலாக சந்திரனுக்கு புதிதாக இருந்தது.
மும்பையில் கூட இதே போன்ற லஞ்சம் வாங்கும் குணம் நலங்களையே மும்பைக்கு கொண்டு சென்றவர்கள் நமது மண்ணை சேர்ந்த தமிழர்கள் தான். ரயில் டிக்கெட் எடுக்க, கடைகளுக்கு உரிமம் எடுக்க பல ஏஜெண்டுகள் உண்டு. அதில் பெரும்பான்மையானவர்கள் தற்போது தமிழர்கள்தான் உள்ளனர். ஆனால் அதற்கு முன்பு மும்பை உருவான ஆரம்ப காலத்தில் நமது தமிழர்கள் கொண்டு சென்ற கலாச்சாரம் இன்றும் அந்த தேசத்தில் உயிரோட்டமாக விளங்குகிறது. தமிழ் மணத்தினையும் மிகச்சிறப்பாக மும்பை வாழ் இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். மாராட்டியம் மட்டுமல்ல இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள். ஏன் வெளிநாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள் கூட நமது தமிழர்களின் நல்ல பண்பாட்டை பின்பற்றுகிறார்கள். ஆனால் இன்றோ நம்மவர்கள் அனைத்திலும் இருந்து பின்வாங்கி கொண்டல்லவா இருக்கிறார்கள். ஒரு சாதாரண இழவு வீட்டில் இவர்களது பண்பை பார்த்து பரிதவிக்க வேண்டியது அல்லவா? உள்ளது.
கிராமத்தில் ஓட்டுக்கு துட்டு வாங்குபவர்களை பற்றி வாசு தாத்தா கூறியிருக்கிறார்.
“ஏலே இந்த பயலுவ எலக்சன் வந்தா நாக்கை தொங்க போட்டுட்டு அலையிறானுவ. ஒருதன் கிட்ட காசு வாங்கினா பராவாயில்லைடே. வந்தவன் போனவன் அம்புட்டு பேருக்கிட்டேயும் காசுவாங்கிறானுவ. அதுக்கப்புறம் 5 வருடமும் அவன் கிட்ட கப்பம் கட்டிறானுவ. தீர்வை ரசீதுக்கு லஞ்சம், வீட்டு அப்புரூவலுக்கு லஞ்சம். தலைவன் கிட்டே கேட்டா. அண்ணாச்சி நீரும் கண்டுகிடாதேயும். 30 லட்சம் செலவழிச்சி ஜெயிச்சிருக்கேன். போட்ட துட்டை எடுக்க வேண்டாமாவே. என கேட்கிறான். உண்மைதானே. முதலில கை நீட்டாம இருந்தா அவனுவ கிட்டு கை கட்ட வேண்டியது இருக்காதுலாடே.”
சந்திரன் நினைத்துப்பார்க்கிறான்.
இதே நிலை நீடித்தால் நமது நாட்டில் எல்லாமே அழிந்து போய் விடுமே. உறவுகள் சீர் கெட்டு போய் விடுமே. தமிழ் பண்பாடு எங்கேயோ போய் விடுமே. மொத்தத்துல எல்லாமே அழிஞ்சி போயிடுமே.
சந்திரன் மணம் படபடத்தது.
இந்த வேளையில்தான் முத்துகிளி போன் வந்தது, “அய்யா, மும்பை காரி வந்துட்டா. நீங்க ஆக வேண்டிய காரியத்தை செய்யுங்க” என்றாள்.
“சரியம்மா” என ரத்னம் போனை வைக்கவும், கல்கோரி கணக்கு பிள்ளை ஆசாரி பேசினார். “அய்யா நம்ம ஜே.சி.பி காரங்க குழி தோண்டிட்டாங்கய்யா” என்றார்.
சரிய்யா என்றோம். எப்படியோ மணி 12 ஆகி விட்டது.
சரியாக 12.30 மணிக்கு வேன் வந்து சேர்ந்தது. அவர்களுக்கு தேவையான சரக்கையும் வாங்கிகொண்டு, சாவு வீட்டுக்கு தேவையான பொருள்களையும் வாங்கி கொண்டு வந்து சேர்ந்தனர்.
ஒருவழியாக பிண ஊர்தியில் லிங்க நாடார் பாடியை ஏற்றினார்கள். பெரிய சாமியாடி டிரைவர் அருகில் ஏறினார். முக்கியமான இடத்தில் எல்லாம் முட்டை பலி கொடுக்க வேண்டும். அந்த வேலையை அவர் செய்ய ஆரம்பித்தார்.
வீட்டில் இருந்து சுடுகாட்டுக்குபோகும் வரையிலும் கடுகை போட்டுக்கொண்டே போக வேண்டுமாம். ஒரு வேளை இறந்தவர் ஆவி அந்த கடுகை பொருக்கி கெர்ண்டே வீடு தேடி வருவதற்குள் விடிந்து விடுமாம். எனவே அந்த ஆவியால் வீட்டுக்கு வர இயலாதாம் . இப்படியரு சடங்கை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
அதற்காகவும் கடுகை வாங்கி பத்திரமாக வைத்திருந்தார். பிண ஊர்தி கிளம்பியது. நன்றாக தண்ணீர் அடித்த நான்கு நடுவயது நபர்கள் லிங்க நாடார் உடல் வைத்திருந்த பெட்டியை சுற்றி அமர்ந்தார்கள்.
முதலில் கார் கிளம்ப, தொடர்ந்து வேன் பின் தொடர, பிண ஊர்தி கிளம்பியது.
ரத்னம் போன் செய்தார், “45 நிமிடத்திலே அங்கே வந்திருவோம். இன்னும் அரை மணி நேரம் கழித்து அத்தை பிள்ளைகளுவ எல்லாத்தையும் கூட்டிட்டு ரோட்டுக்கு வந்திருங்க. ஊர் முக்கில வச்சி எல்லாருக்கும் முகத்தை காட்டிட்டு , அப்படியே சுடுகாட்டுக்குகொண்டு போயிருவோம்”. என்றார்.
முத்துகிளியும் “சரி” என்றாள்.
வரிசையாக கார் கிளம்பியது.
ஒருவருக்கு ஒருவர் பேசவே இல்லை. அமைதியாக இருந்தார்கள்.
45 நிமிடம் கடந்து.
ஊர் எல்கைக்குள் பிண ஊர்தி வந்தது.
முட்டி மோதிக்கொண்டு உறவினர்கள் கூட்டம் வந்தது.
பிண ஊர்தியில் இருந்து பெட்டியை கீழே இறக்கி வைத்து திறந்தார்கள்.
சொர்ணகிளி, மற்றும் அவரின் மகள்கள் எல்லோரும் அலறியபடி அவர் மீது விழுந்தனர்.
“ஐயோ அப்பா இப்படி என்னை விட்டுட்டு போயிட்டியிளே” என அலறினர்.
அந்த இடமே கலட்டா நிறைந்த இடமாக மாறிவிட்டது. பெரிய போர்களம் போல இருந்தது. எங்கும் அழுகுரல்.
ரத்னத்துக்கு கண்ணீர் வந்தது.
“எப்பா போதும்பா தூக்குங்கப்பா” என கூறினார்.
ஊர் வாலிபர்கள் உடனே பெட்டியை தூக்கி மீண்டும் பிண ஊர்திக்குள் வைக்க வண்டி கிளம்பியது.
கொள்ளி வைக்க வேண்டிய சிறுவனை காரில் ஏற்றிக்கொள்ள அனைவரையும் ஒதுக்கி விட்டு வேகமாக கார் சுடுகாட்டை நோக்கி கிளம்பியது.
சுடுகாட்டில் ஜே.சி.பியால் வெட்டப்பட்ட குழியில் வைத்து லிங்க நாடாருக்கு சடங்கு நடந்தது.
பேரனுக்கு மொட்டை போட்டார்கள். அதன் பின் அனைவரும் குழி அருகில் வந்தார்கள்.
“பட்டம் கட்டுங்கய்யா” என குடிமகன் முருகன் சத்தம் கொடுக்க வந்தவர் காசு போட்டனர்
அடுத்து பேரன் கொள்ளி கலயம் உடைக்க லிங்க நாடார் உடலை சுற்றி மூன்று முறை சுத்தி வந்தான். ஒவ்வொரு முறையும் கொள்ளி கலையத்தில் முருகன் ஓட்டை போட அந்த தண்ணீர் லிங்க நாடார் முகத்தில் விழுந்தது. பின்னால் வந்தவர் கொள்ளி கலய தண்ணீரை கையில் பிடித்து லிங்க நாடார் மீது தெளித்தார்.
இறுதியில் மண்ணுக்குள் மண் ஆனார் லிங்க நாடார்.
ஒரு ஜீவன் அடங்கி விட்டது.
ஒரு உழைப்பாளி அமரனார்.
இனி அந்த குடும்பத்தில் லிங்க நாடார் என்ற ஒருவர் இல்லை. தன் மகள்கள் பேரன் பேத்திகள் வருவார்கள் என பனையேறி கருப்பட்டியை பானையும் ஊற்ற உழைத்தவர் உறங்கி விட்டார்.
சொர்ணகிளிக்கு எல்லாமே அவராக இருந்தவர் போய் விட்டார். இன்றோ வேருமையாகி விட்டார். .
சுடுகாட்டில் ஒரு ஓரத்தில் ஒரு திட்டில் அமர்ந்து கட்ட தளத்து மொய்யை நோட்டில் எழுதி கொண்டிருந்தார் நாட்டாமை. ஒவ்வொருவராக சென்று ஊர் பெயரையும் தன் பெயரையும் சொல்லி மொய் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
“சரிடே. எல்லா பனையேறியையும் கொண்டு புதைக்கோம். எல்லாம் செய்றோம் ஆனால் பனையில இருந்து விழுந்தா இந்த அரசு ஏதுவும் நமக்கு தருதா. நல்லா யோசனை பண்ணி பாருங்க. நாம பேராடி இருக்கணும். பிணத்தை வாங்காமல் அங்கே வைச்சி போராடி இருக்கணும். அப்போ தான் நம்ம கோரிக்கை அரசுக்கு தெரியும்.”
“என்னைக்குதான் உடலை மூலதானமா வைச்சு உழைக்கிற பனையேறிக்கு அரசு உதவி கொடுக்க போவுது. விடக்கூடாதுடே” என பலர் குரல்கொடுத்தனர்.
“போங்கடே உங்களுக்கு வேலையே கிடையாது. இப்படித்தான் பண்டாரங்கள் சேர்ந்து மடம் கட்டின கதைபோல சுடுகாட்டுல வச்சி பேசுவீய. அப்புறம் வீட்டுக்கு போனவுடனே மறந்து போயிருவீய” என்றார் பெரியவர் ஒருவர்.
சந்திரன் யோசித்தான். சாலை விபத்தில் இறந்தால் காவல் நிலையம் மூலமாக 1 லட்சம் பணம் கொடுக்கிறாங்க. ஆனால் இதுவும் ஒரு விபத்து தானே. இந்த விபத்தில் இறந்த நிச்சயம் பணம் உண்டு தானே. நிச்சயம் ஏட்டையாவிடம் கூறி அதற்கு முயற்சி செய்வோம் என்று நினைத்தான். அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.இந்த மக்களுக்கு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று எண்ணினான்.
ஆனால் அது நடந்ததா?.
அது நடந்ததோ இல்லையோ. சந்திரன் மும்பை செல்லும் பயணம் தாமதமானது. எனவே அவன் தொடர்ந்து இங்கேயே பயணிக்க ஆரம்பித்தான்.
லிங்க நாடாருக்கு இரண்டாம் நாள் குழி மொழுவும் சடங்கு, கல் கரைக்கும் சடங்கு. மூன்றாம் நாள் சடங்கு நட்ந்தது. மூன்றாம் நாளே 16 வது நாள் சடங்கையும் முடித்தார்கள்.
“யய்யா, பொம்பளை புள்ளைய ரொம்ப நாளா இருக்க முடியாது. அவளுவ அவளுவ புருசனுவ பலசரக்கு கடை வைச்சிருக்கானுவ. இவனுவ 16 நாள் இங்கே இருந்தா, அங்க இன்னொருத்தன் பக்கத்தில கடை வச்சிபுடுவான். மூனாம் நாளே எல்லாத்தையும் முடித்து அனுப்பிருவோம்” என்றார் ரத்னம்.
உண்மைதான். பனை தொழில் இனி வேண்டாம் என ஊரை விட்டு போனவர்கள் எல்லோரும் பலசரக்கு கடைதான் வைத்தார். வெளியூரில் அண்ணாச்சி கடை தான் பிரபலம். நாடார்கள் மட்டுமல்ல திருநெல்வேலியில் இருந்து செல்லும் மற்றவர்களும் திருநெல்வேலி அண்ணாச்சி கடை என்றே வைத்தார்கள்.
அந்த அளவுக்கு நாடார்கள் பிரபலம் ஆனார்கள். நம்பிக்கை நாணயம், இவர்கள் மூலதனம். உடலை மூலதனமாக வைத்தவர் அங்கே நம்பிக்கையையும் நாணயத்தினையும் மூலதனமாக கொண்டு வெற்றி கண்டனர்.
கோயில் கொடைக்கு மட்டும்தான் ஊருக்கு மத்த நாள்முழுவதும் கடைதான். காலை 4 மணிக்கு எழுந்து காய்கறி கடைக்கு சென்று விட்டு, இரவு 11 மணி வரை விழித்து இருந்து கடை வியாபாரம் பார்த்து விட்டு உழைப்போ உழைப்பு என கடை நடத்தினார்கள். தினமும் 5 மணி நேரம் தான் தூக்கம். அந்த உழைப்புதான் அனைவரையும் முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தது.
ஆகவே தான் ஊரில் 16வது நாள் நிகழ்ச்சியெல்லாம் மூன்றாம் நாளே முடிந்தது. மூன்றாம் நாள் சாயங்காலமே ரயில் பிடித்து அனைவரும் கிளம்பினர். தனியாள் ஆனார் சொர்ணகிளி.
சொர்ணகிளிக்கு ஆறுதல் முத்துகிளிதான். முத்துகிளி இல்லாத சமயத்தில் சந்திரன் வருவான்.
ஒவ்வொரு நாளும் அந்த குடும்பத்துக்கு தேவையான உதவிகளை சந்திரன் செய்து கொண்டே இருந்தான். முத்துகிளிக்கு ஒரு மகன் இருந்தால் எப்படி இருப்பானோ அதுபோலவே ஓடியாடி வேலை செய்தான்.
ஏட்டையாவிடம் போய் அமர்ந்து விபத்து என மேலிடத்துக்கு எழுதி அதற்கான ஏற்பாடுகளை செய்ய கூறினான்.
“ஏடே இதுவரைக்கு சாலை விபத்தில இறந்தவியளுக்கு தான் கவுர்மெண்ட பணம் கொடுத்து இருக்கிடே. நீ அழுத்தி பேசுதேயின்னு நான் அனுப்புறேன். ஆனால் வந்தது வரலையின்னு எங்கிட்ட அவிலாதி சொல்லக்கூடாது” என்றார்.
“சரி சார். நீங்க அனுப்புங்க. மயிரை கட்டி மலையை இழுக்கோம். வந்தா மலை போன மயிரு” என்றான்.
“சரி டே. நீயும் இங்க வந்து இந்த பயலுவ கிட்ட சேந்து பேச படிச்சிட்டே”. என்று சிரித்தார் ஏட்டையா.
சந்திரன் வெளியே வந்தான். வேறு யாரு மூலமாவது இவங்களுக்கு உதவி கிடைக்குமா? யோசித்தான்.
வாசு தாத்தா தான் சொன்னார். “ஏடே நம்ம தட்சணமாற நாடார் சங்கத்தில ஒரு மனுவை கொடுத்து வைப்போமே. அங்க எங்க அக்கா பேரன் வாட்சுமேனா இருக்கான். ஒரு எட்டு பாத்திட்டு வருவோமே”. என்றார்.
இருவரும் திருநெல்வேலிக்கு மறு நாள் காலையில் கிளம்பினார்கள்.
“ஏடே பெட்ரோல் விக்கிற விலையில, பெட்ரோல் போட உங்கிட்டேயும் வழியில்ல. நீ. தான் இங்க சோவாற ஆரம்பிச்சிட்டியே. பேசமா பஸ்ஸில போயிட்டு வருவோம்”. என்றார்.
சந்திரனும் “சரி” என்று தலையசைத்தான்.
செவ்வாய் கிழமை சங்கத்தில தலைவர், செயலாளர், பொருளாளர் எல்லோரும் இருந்தார்கள். வாட்சுமேன் வந்து தலைவரிடம், “அய்யா இவிய எங்க சொந்த காரவியத்தான்” என அறிமுக படுத்தி விட்டு கீழே சென்று விட்டார்.
மனுவை பெற்றுகொண்ட தலைவர், மேலாளரை கூப்பிட்டார். “யப்பா நாளைக்கு இவியளுக்கு 25 ஆயிரம் செக் எழுதி வச்சிரு”. என கூறிவிட்டு வாசு தாத்தாவை பார்த்தார்.
“பெரியவரே. அந்த அம்மாவை கூப்பிட்டுட்டு நாளைக்கு காலையில 11 மணிக்கு வாங்க எங்க பங்கா 25 ஆயிரம் நிவாரணம் கொடுத்துருவோம்” என்றார்.
“சரி அய்யா, கோடி புண்ணியம் உங்களுக்கு. கவுர்மெண்ட காரனுவ தான் பனையேறியள ஓதுக்கிட்டு இருக்கானுவ. நீங்க இப்படி உதவளோன்னா. இவியளுக்கு யாரு இருக்கா. என்று பெருமூச்சி விட்டார்.
“பெரியவரை, இந்த சங்கம் ஆரம்பிச்சதே நம்ம சாதி காரவியளுக்குத்தான். வியாபாரம் பண்ணிட்டு, பாதுகாப்பு இல்லாம இருந்தவியளுக்கு 1990 லே 1 ரூபாய் செலவில பாய் தலைவாணி கொடுத்து திருநெல்வேலியில தங்க வச்சது நம்ம சங்கம்தான். இப்பவும் காலேஜ் பள்ளிகூடம் நடத்திட்டு வாறோம். சென்னையில நம்ம மக்கள் தங்க வசதி, மும்பையில் பள்ளிகூடம் என மக்கள் சேவையை தான் மகேசன் சேவையின்னு செஞ்சி கிட்டு இருக்கோம்”. என்றார் செயலாளர்.
நான் கேள்வி பட்டுருக்கேன். இன்னைக்குத்தான் நேருல பாக்கேன் என சொல்லி விட்டு வாசு கிளம்பினார். எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு சந்திரனும் பின்தொடர்ந்தான்.
ஒரு பக்கம் எதுக்கு எடுத்தாலும் காசு கேட்ட மக்களை பார்த்த சந்திரனுக்கு சங்கத்து காரங்களை பார்த்த போது பெருமையாக இருந்தது.
நியாயம் சாகவில்லை. உண்மை சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறது.
வாட்சுமேன் தம்பியிடம் வழி அனுப்பி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
மறு நாள்.
காரில் சொர்ண கிளியை கூப்பிட்டு கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். சொர்ண கிளிக்கு பேச்சு துணைக்கு முத்துகிளியும் உடன் வந்தார். வாசுதாத்தா உடன் ஏறிக்கொள்ள சந்திரன் காரை கிளப்பினார்.
சங்கத்தில் வந்து பணத்தினை பெற்று கொண்டனர். தலைவர் பணத்தினை செக்காக வழங்கினார். போட்டோ எடுத்துக்கொண்டனர். மறுநாள் தினத்தந்தியில் படம் வரும் என மேலாளர் கூறினார்.
எல்லோருக்கும் நன்றி கூறி விட்டு கிளம்பினார்கள்.
“யய்யா, நல்ல ஹோட்டலா பார்த்து நிப்பாட்டு, எல்லோரும் சாப்பிட்டு போவும்” சொர்ணகிளி சொல்ல, “ ஏடே ஜானகி ராமன் ஹோட்டலை ரொம்ப பேமசா சொல்லுவாளே, அங்க போவும் டே”
“தாத்தா அங்க ரேட் ஓவரா இருக்கும் வேண்டாம்” என்றாள் முத்துகிளி.
“இந்த மாதிரி எதுக்காவது வந்தா தான் பெரிய ஹோட்டலுல சாப்பிடலாம். அதை கெடுத்து புடுவா போல முத்துகிளி. நீ என்னடே சொல்லுத” என சந்திரனிடம் கேட்டார் வாசு.
“தாத்தா சித்தி ரொம்ப நொந்து போய் இருக்காவ. ஏதாவது சின்ன ஹோட்டலை பாப்போம்”. சந்திரன்.
“சரித்தான் சாடிக்கு ஏத்த மூடி.பொம்பளைய சொன்ன தட்டவா போற. சரி. போற வழியில புரோட்டோ சால்னா சாப்பிடுவோம். அப்படியே அந்த வைர மாளிகை பக்கம் போவும்” வாசு விடவில்லை.
“அங்கேயும் வேண்டாம் தாத்தா.ரேட் ரொம்ப போடுவாவிய. சின்ன ஹோட்டலா போவும் தாத்தா” முத்துகிளி தடுத்தார்.
“முத்துகிளி. பேசாம தாத்தாசொன்ன ஹோட்டலுக்கு போவும். 25 ஆயிரம் வாங்கியிருக்கோம். ஆயிரம் ரூபாய் செலவழியுமா போட்டும். இது கிடைக்காட்டி என்ன செய்வோம். சந்திரனுக்கும் பெட்ரோல் ஆயிரம் ரூபாய்க்கு போடனும். அந்த பய எதுக்கெடுத்தாலும் ஓடி வாரன் அவனுக்கு எதுவும் செய்யல”
சந்திரன் இதற்கு பதில் ஏதாவது முத்துகிளி சொல்லுவாள் என நினைத்தான். ஆனால் அவள் பதில் எதுவும் பேசவில்லை.
என்ன பெண் இவள். அவளுக்காவே இங்கே காத்து கிடக்கிறான். அவள் வேண்டும் என்றே இந்த குடும்பத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிறான். அவள் உறவுகளை இவன் உறவாக மாற்றி கொண்டான். உயிரை பணயம் வைத்து அவளை காப்பாற்றி இருக்கிறான். ஆனால் இந்த பெண் அவன் காதலை புரிந்து கொள்ளவே இல்லையே.
சந்திரன் மனதுக்குள் யோசித்தான். “சரி. என்னை பற்றி சித்தி கூறும் போது சரி. தான் அவிய பாவம் என ஒரு வார்த்தை கூறலாமே. எதுவும் சொல்ல வில்லையே. இவள் என்ன வகையான பெண்”.
சந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
கார் வைரமாளிகை நோக்கி செல்லவில்லை. ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஏ.ஒன் புரோட்டோ கடைக்கு சென்று காரை நிறுத்தினான்.
உள்ளே சென்றார்கள். வாசுவுக்கு ஏமாற்றம் தான். ஜானகி ராமன் ஹோட்டலும் இல்லை. வைரமாளிகையும் இல்லை. இங்க சாப்பிடத்தான் செய்துங்கநல்லூர் பாஸ் கடையில புரோட்டா சாப்பிடலாமே என்று நினைத்தார்.
அதே வேளையில் சந்திரனை பார்க்க வாசுவுக்கு எரிச்சலாய் இருந்தது. “இந்த பய முத்துகிளிக்கு நூல் போடுறான். அவள் பிடிகொடுக்க மாட்டுக்கா” என்பதை நன்றாக புரிந்து கொண்டார். அப்படியே முத்துகிளி சந்திரனை காதலித்தாள். அதற்கு எதிர்ப்பு நடவடிக்கை வாசு தாத்தாதான்.
காரணம். சந்திரன் சுத்த நாடார் இல்லை. ஒரு கலப்பு இனம். அதுக்கு ஒரு நாளும் இவர் ஒத்துக்கொள்ள மாட்டார். எல்லோரும் அமைதியாக புரோட்டோ சால்னா சாப்பிட்டார்கள்.
வீடு வரை அமைதியாகவே வந்து சேர்ந்தார்கள்.
அவர்களை வீட்டில் விட்டு , அருகில் உள்ள நகரத்துக்கு சந்திரன் திரும்பி விட்டான்.
மறுநாள் எழுந்தவுடன் சிந்தனையில் ஈடுபட்டான். பனையில் இருந்து விழுந்தவர்களுக்கு அரசு உதவி என்னென்ன கிடைக்கும். யாரிடம் கேட்டகலாம். எப்படி உதவி பெறலாம். சொர்ணகிளி சித்தி குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
வாசு தாத்தாவிடம் போன் செய்தான். “தாத்தா அரசு உதவிபற்றி தெரிந்து கொள்ள யாரிடம் பேச வேண்டும். இங்க யாரும் அப்படி இருக்காவலா?”
வாசு தாத்தா யோசனை செய்தார். “மாமரத்து வீட்டு காரங்க பாளையங்கோட்டையில இருக்காவிய. அவியத்தான் நம்ம ஊருல கொஞ்சம் படிச்சவிய. அவிய வீட்டுல இரண்டு பேரு அண்ணம் தம்பி பாளையங்கோட்டையில இருந்தாவிய , அவிய பிள்ளையளும் நல்ல வேலையில இருக்காவ.அவிய கிட்ட போனா விவரம் சொல்லுவாவ”
தாத்தா யாரவது ஒருத்தர் பேரை சொல்லுங்க நான் போயி பாக்கேன்.
“நமக்கு வேண்டப்பட்டவரு ஒருத்தரு ரிட்டரையடு ஆகி கே.டி.சி நகருல மகன் வீட்டோட இருக்காவ. படிச்ச ஆளு. எப்ப பாத்தாலும் புத்தகம் வாங்கி படிச்சிக்கிட்டே இருப்பாவ. பேரு வரதன். அவிய அட்ரஸ் தாரேன் . வேணுமுன்னா அவியள போயி பாரு. அவிய ஐடியா சொல்லுவாவ.” வாசு தாத்தா கூறியதை கேட்டுக்கொண்டான் சந்திரன்.
பெரியவர் வரதன் விலாசத்தினை வாங்கி கொண்டு. மறு நாள் அங்கே செல்லவேண்டும் என்று முடிவு செய்தான்.
******
காலை சூரியன் இன்று என்னவோ சுட்டெரித்தது.
என்ன கோபமோ தெரியவில்லை சூரியனுக்கு.
கோபாலகிருஷ்ணன் வாக்கிங் போய் விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
65 வது நிரம்பியவர். ஆனால் வயதை கூற முடியாது. நரையை வைத்து அவரது வயதை கணக்கிட முடியாது. அந்த அளவுக்கு தனது உடலை நோயற்று வைத்திருப்பார். தினமும் வாக்கிங் போகவும் தயங்க மாட்டார்.
பொய்யான உலகத்தில் பொய் திறை போட்டு மூடி , மீசைக்கு கருமையிட்டு உலகத்தினை ஏமாற்ற விரும்பாதவர் கோபாலகிருஷ்ணன். ஆகவே அவருக்கு நிகர் அவரே.
வீட்டுக்குள் வந்தார். மனைவி தெய்வானை சூடாக காப்பி கொண்டு கொடுத்தார்.
“சுகர் பிரி போட்டு இருக்கேன்”. என்றார் தெய்வானை.
முறைத்தார் கோபால கிருஷ்ணன். “சீனி போடு இல்லாட்டி, வித்தவுடன் சுகருன்னு சொல்லி விச காப்பியை தா. அது எதுக்கு பொய்யா ஒரு சுகர் பிரி”.
“சீனி இல்லாட்டி நீங்க குடிக்க மாட்டிங்க. சீனி போட்டா சுகர் ஏறிடும்”.
“எனக்கு சுகரும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது. நீ சொன்னா கேட்கவா போறே”
“எனக்கென்னவோ பயமாக இருக்கு. நீங்க இப்படியே இருங்க”
தெய்வானை சொல்லுக்காக தலையசைத்தார். காப்பியை குடித்தார். சுவையாகத்தான் இருந்தது.
இன்று ஏனோ தெரியவில்லை . மனம் கனத்தது.
காலண்டரை பார்த்தார். நண்பர் வரதனை பார்க்க வேண்டிய நாள். வரச்சொல்லியிருந்தார்.
வரதன் தனது வயதுக்கு நிகரனாவர். தாசில்தார் அலுவலகத்தில் பியூனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நல்ல வாசிப்பு காரர். எப்போதும் புத்தகம் படிப்பார். புத்தக கண்காட்சி என்றால் ஓடிப்போய் ஆயித்துக்கு மேல் பணத்தனை செலவழித்து புத்தகம் வாங்கு வார். சுமார் 2000 புத்தகம் சேர்த்து வைத்திருந்தார்.
ஒரு சமயம் வரதன் வீட்டுக்கு கோபாலகிருஷ்ணன் போயிருந்தார். புத்தகத்தினை வரிசையாக அடுக்கி வைத்து பாதுகாத்துக்கொண்டிருந்தார் வரதன்.
“என்ன வரதன் வேலை பயங்கரமாக நடக்குது”.
“என்ன செய்ய கோபாலா. என்னை விட புத்தகத்தினை கரையான் வேகமா படிக்கு. அதனால அதுகூட போட்டி போட்டு படிச்சிக்கிட்டு இருக்கேன்”.
கோபாலகிருஷ்ணனுக்கு சிரிப்பு வந்தது.
“என்னடா சொல்லுத. கரையான் புத்தகம் படிக்குதா?”
“ஆமாம் என்னை விட கரையான் வேகமா படிக்குது, நானாவது படிக்க மட்டும்தான் செய்றேன். கரையான் கரைச்சு குடிச்சிருது”.
கரையான் புத்தகத்தினை அரிப்பதை வேடிக்கையாக சொன்னார் வரதன்.
“சரி வரதா. இப்படியே புத்தகத்தனை பாதுகாத்து கொண்டே இருக்கிற. உன் காலத்துக்கு பொறவு உன் பிள்ளைங்க பாதுகாக்குமா?”
கோபாலகிருஷ்ணன் பேச்சை கேட்டு அமைதியாகி விட்டார் வரதன். பதிலே இல்லை. கண்களில் லேசாக நீர்கசிவு.
சரி. இனிமேல் அவரிடம் அதிகமாக பேசக்கூடாது என்று கிளம்பினார் கோபாலகிருஷ்ணன். தனது மனைவி இறந்த பிறகு வரதன் இப்படித்தான். தீடீரென்று சிரிப்பார். சில நேரம் கண்களில் நீர் கசிவு.
ஆனால் அது எதற்கு ஏன் என்று முழுமையாக தகவல் தெரியவில்லை.
இதற்கிடையில் கோபாலகிருஷ்ணன் தன் மகள் வீட்டுக்கு வந்திருந்தார். மகளுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் குழந்தைகளை பார்ப்பதற்காக தொடர்ந்து மூன்று மாதம் இங்கே அமர்ந்து விட்டார். மனைவி தெய்வானையும் உடன் வந்து தனக்க சுகர் பிரி போட்டு வராத நோயை வந்தது போலவே காட்டிக்கொண்டிருந்தார்.
சில நேரம் வரதனிடம் இருந்து போன் வரும் மணிக்கணக்காக பேசுவார். “என்னப்பா நீ அதிகமாக படிக்கியா?, கரையான் அதிகமாக படிக்குதா?” என்று கேட்டால் சிரிப்பார். “விடுவனோ. என் கிட்டே கரையானால முடியாது .அதனால கரையானை சோலி முடிக்கவே ஸ்பெஷல் டானிக் வாங்கி வைச்சிருக்கேன். அதை போட்டு ஸ்பிரே பண்ணிட்டா கரையான் குளோஸ். ஆனால் நான் தான் 10 நாள் வீட்டுக்குள்ள போக முடியாது. எனக்கு மயக்கம் வர்ற மாதிரி ஸ்மல் எடுக்கு”. என்றார்.
“கோபாலகிருஷ்ணா. சீக்கிரம் வா. இந்த நூலகத்தை என்னால காப்பாத்த முடியுமா தெரியலை. ஏதாவது நூலகத்தில சேர்க்கணும். எனக்கு நீ தான் உதவி பண்ணணும்”.
“சரி கண்டிப்பா வாரேன்”.
“உடலுக்கு ரொம்ப முடியலை. வயிற்று வலி தாங்க முடியலை. உயிர் போகுது. இதயம் ரொம்ப மோசமா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டார். எப்ப என்ன ஆகுமோ?”.
“சேய். பயப்படாதே நீ செய்ய வேண்டிய காரியம் நிறைய இருக்கு. நான் நேரில வாறேன். உங்கிட்ட பேசுறேன்”.
காலங்கள் கடந்தது.
ஒரு நாள் மகள் சொன்னாள், “அப்பா உங்களுக்கு ஒரு கடிதம் வந்து இருக்கு. வந்து 10 நாள் இருக்கும் போல , அட்ரஸ் தெரியாம போஸ்ட் மேன் சுத்திட்டு இன்னைக்குதான் வந்து தந்து இருக்கார்”.
“ என்ன லட்டரோ தெரியலையே”.
பின் பக்கத்தினை பார்த்தார். வரதன் தான் அனுப்பி யிருந்தார்.
உள்ளே எடுத்தார். படிக்க ஆரம்பித்தார். “கோபாலகிருஷ்ணா என் நூலகத்தில இருக்கிற புக்கை பத்திரமாக எந்த நூலகத்திலையாவது கொண்டு போய் வையி. சீக்கிரம் வா.” என்று எழுதியிருந்தார்.
“என்னடா லூசு மனுசனா?”.
போனை எடுத்தார். வரதனுக்கு போன் போட்டார் சுவிட்ச் ஆப் என்று இருந்தது.
என்ன ஆச்சு கோபாலகிருஷ்ணனுக்கு மனதுக்குள் ஏதோ செய்தது.
மகளிடம் கூறினார். “எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இவன் கடிதம் எழுதியிருக்கிறதை பார்க்கும் போது ஏதோ நடந்தது போல தெரியுது. நான் உடனே ஊருக்கு போகனும்”
மகளிடம் கூறி விட்டு ஊருக்கு வண்டி ஏறினார்.
ரயில் நிலையத்தில் இருந்து நேராக ஆட்டோ பிடித்து வரதன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டின் முன்னால் சாமியானா பந்தல் போட்டு இருந்தது. அருகில் கண்ணீர் அஞ்சலி வால்போஸ்டருக்குள் வரதன் இருந்தார்.
அதிர்ந்தார் கோபாலகிருஷ்ணன். வரதன் போய் விட்டாரா?
உள்ளே அவர் மகன் வரவேற்றான்.
“என்னய்யா அப்பாவுக்கு என்ன ஆச்சி”.
“என்னத்த சொல்ல. புத்தகத்தை பாதுகாக்க வைத்திருந்த ரோக்கரை குடிச்சிட்டு செத்து போயிட்டாரு”.
“என்ன?”
“ஆமாம் ஸார். வெளியே தலைகாட்ட முடியல. எதுக்கு தற்கொலை செஞ்சாரு. எதுக்கு தற்கொலை செஞ்சாருன்னு எல்லாரும் நம்மள போட்டு திட்டுறாங்க. மனுசன் சாவும் போதும் நம்மள நிம்மதி இல்லாம ஆக்கிட்டு போயிட்டாரு”.
“இல்லை. அவருக்கு வயிற்று வலி அதிகமா இருந்துச்சு. அதனால ஒரு வேளை. வயிற்கு வலி தாங்க முடியாம மருந்தை குடிச்சி இருப்பாரோ?”
“இருந்தாலும் புத்தகத்தை கரையான் அரிக்குதுன்னு ரோக்கர் மருந்தை வாங்கி வைச்சிகிட்டு, தானே குடிச்சிட்டு செத்துபோயிட்டாரே?”.
அமைதியாக இருந்தார் கோபாலகிருஷ்ணன்.
“எனக்கே எரிச்சலையாகி போயிட்டு. எல்லாம் இந்த புத்தகத்தால வந்த வினை. இன்னைக்கு முதல் கட்டடமாக பழைய பேப்பர் கடை காரனை வரவழைச்சி. அவரு வைச்சிருந்த புத்தகத்தை புறாவும் எடைக்கு போட்டுட்டேன்”.
அதிர்ந்தார் கோபாலகிருஷ்ணன், “என்ன தம்பி சொல்ற”.
“ஆமாம் சார். அந்த புக் இல்லாம இருந்திருந்தா வாடகைக்காவது அந்த ரூம்பை கொடுத்து இருக்கலாம். ஒரே கரையான் தொந்தரவு. அந்த ரூமே வம்பா போய் விடும். ஒரு விசயம் தெரியுமா? உயிரோட இருக்கும் போதே நல்லது கெட்டதுக்கு ஒரு பண்டம் எங்களுக்கு வாங்கி தர மாட்டார். புத்தகம் வாங்கி வாங்கி குவிச்சார். கடைசியில அந்த ரூம்பை மண்ணா ஆக்கினது தான் மிச்சம்”.
வெறுப்புடன் பேசினார் மகன்.
கோபாலகிருஷ்ணன் எழுந்தார்.
“தம்பி எந்த கடையில எடைக்கு போட்டிங்க”
“அது எதுக்கு சார்”
இல்லை கேட்டேன்.
வேண்டா வெறுப்பாக ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துக்கொடுத்தார்.
வேகமாக வெளியே வந்தவர், அந்தநேரம் பார்த்து அங்கே சந்திரன் காரில் வந்து சேர்ந்தார். “ஸார் வரதன் சாருக்கு என்ன ஆச்சி”.
“தம்பி யாரு”.
“என் பெயர் சந்திரன். நான் அவர்க்கிட்டே ஒரு உதவி கேட்க வந்தேன்”.
“இப்போ நாம அவருக்கு ஒரு உதவி செய்யணும். அவர் தெய்வமா மதிச்ச 2000 புத்தகத்தை வாங்கி ஏதாவது நூலகத்துக்கு ஒப்படைக்கணும்”.
சந்திரனுக்கு புரிந்தது. “நான் என்ன செய்யணும் சார்.” “இந்த விலாசத்துக்கு போகணும்”.
“சரி சார்” சந்திரன் காரை கிளப்பினான்.
10 நிமிடத்தில் பழைய புத்தக கடைக்கு போய் சேர்ந்தார்கள்.
கடைக்காரரிடம் பதட்டமாக ஓடினார் , “ஸார் வரதன் ஸார் வீட்டில இருந்து எடுத்த புத்தகம் என்னாச்சி”.
சிரித்தார் கடைக்காரர். “ஸார் அத்தனை புத்தகமும் சூப்பர் புத்தகம் சார். வேனை விட்டு இறக்கவே முடியவில்லை. அப்படியே புத்தம்புதுசா அழுக்கே இல்லாம இருந்தது அதான் நேரே அரவை மிஷினுக்கு அனுப்பிட்டேன்”.
“என்ன சொல்றீங்க”.
“ஆமாம் ஸார்”.
கோபாலகிருஷ்ணன் இதயமே நின்று விடும் போல இருந்தது. வரதன் சொல்லும்போதே, “கோபால் சாண்டில்யன் புத்தகம் வேணுமா? நான் தாரேன் வேறுயாருக்கிட்டேயும் இருக்காது. சாத்தான்குளம் ராகவன் எழுதுன புத்தகம் எல்லாமே எங்கிட்ட இருக்குது. கண்ணதாசனின் அர்த்த முள்ள இந்து மதம் அத்தனை புத்தகமும் என் கிட்டே இருக்கு. வேறே யாரும் இது மாதிரி சேர்த்து வைச்சிருப்பாங்களா? தெரியாது. ஆனான் நான் வச்சிருக்கேன்.”
வரதன் பேசும்போது என்னை போன்ற அறிவாளி இந்த உலகத்தில் யாருமே கிடையாது என்று பேசுவார்.
அதுபோலவே எல்லோருக்கும் உதவுவார். கிராமத்தில் இருந்து யார் உதவிக்கு வந்தாலும் செய்வார். குறிப்பாக மகளிர் நலத்திட்டம், முதியோர் உதவிதொகை, அரசு உதவி பெறுவது என யார் வந்தாலும் உதவுவார். ஓய்வு பெற்ற பிறகு அரசு அதிகாரிகளிடம் கூட்டி சென்று உதவுவார். மனு எழுதி கொடுப்பார்.
தற்போது ஆன்லைன் போன்ற விசயம் வரும்போதுகூட, நெட் சென்டருக்கு கூட்டி சென்று உதவுவார். அவ்வளவு நல்லது செய்தவருக்கு நோய் கொடுமை உயிரை மாய்த்து விட்டது. அவருடைய ஒரே ஒரு ஆசை புத்தகங்களை பத்திரப் படுத்துவது அது மட்டும் நிறைவேறாமல் போய் விடுமோ?.
வரதன், “கோபால சப்போஸ் என் உயிர் போயிட்டாலும் என் புத்தகத்தை மட்டும் எப்படியாவது காப்பாற்றி நல்ல லைப்ரேரியில சேர்த்து விடு”
வரதன் அப்போது சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. அவர் புத்தகத்தைகாப்பாற்றாமல் விட்டு விடுவோமோ, அவருக்கு பயம் தொத்திக்கொண்டது.
கோபாலகிருஷ்ணன் கேட்டார். “அய்யா அரவை மிஷின் எங்கே இருக்கு?”.
“இப்போ மணி என்ன?”
“10 மணி. அய்யோ அரைக்க ஆரம்பிச்சு இருப்பாங்களே” கடை ஓனர் அலட்சியமாக கூறினார்.
கோபாலகிருஷ்ணனுக்கு இதயமே நின்று விட்டது. என்ன செய்யப்போகிறோம்.
புத்தகம் ரிடிங் போச்சு. புத்தகம் பாதுகாப்பு போச்சு. ஒரு நல்ல நூலகர் அவர் சேர்த்து வைசச் புத்தகம், அவர் இறந்து புதைக்கப்பட்ட குழி மூடி காய்ந்து விடும் முன்பே அரவை மிஷினுக்கு போய் விட்டது.
வரதன் எங்கோ இருந்து கத்துவது போல இருந்தது. “நண்பா காப்பாத்து என் புத்தகத்தை காப்பாத்து”.
கோபால கிருஷ்ணன் பதறினார்.
“நான் உடனே போகிறேன்”.
வெளியே ஒடி வந்தார். தொடர்ந்து சந்திரன் காரில ஏறினார். முதலாளி கொடுத்த அட்ரஸை வைத்துக்கொண்டு காரை கிளப்ப சொன்னார்.
சந்திரனுக்கு புரிந்தது வரதனிடம் உதவி கேட்க வந்தேன். இப்போது அவர் புத்தகத்தினை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
சந்துபொந்துகளுக்கு இடையே கார் வேகமாக சென்றது. கோபாலகிருஷ்ணன் அவரசத்தினை புரிந்த சந்திரன் காரை வேகமான ஓட்டினான்.
அரவை மிஷினில் போட்டு இருப்பார்களோ. அய்யா புத்தகம் முழுவதும் என்னவாயிருக்கும். இருவர் மனமும் அடித்தது.
மனம் படபடவென்று அடித்தது.
சரியாக 15 நிமிடம் கழித்து அந்த இடத்தினை தொட்டனர்.
அந்த கம்பேனி மிகப்பெரிதாக இருந்தது.
வாட்சுமேன் உள்ளே விட மறுத்தார்.
எனவே ஆட்டோவை வெளியே விட்டு விட்டு ஓடினார்.
உயிரை பறிகொடுத்தவர் போலவே ஓடினார்.
ஏதோ ரத்த உறவு விபத்தில் சிக்கி கொண்டது அதை காப்பாற்ற வேண்டு ம் என்ற எண்ணத்தில் ஓடினார்.
புத்தகம் தானே. அதற்கு உயிரா இருக்க போகிறது. என்று எண்ணியவர்கள் ஏராளம். ஆனால் இந்த புத்தகத்தினை அழிவில் இருந்து மீட்க வேண்டும். வரதனுக்குகொடுத்த வாக்கை காப்பாத்த வேண்டும் வேகமாக ஓடினார்.
வாட்சுமேன், “என்ன அய்யா என்ன அவசரம்”.
முதலாளியை பார்க்க வேண்டும்.
“இல்லையய்யா. அவர் அரவை முடிய தண்டியும் வெளியே வரமாட்டார்”.
“அய்யோ அரவை மிஷினை நிறுத்தவேண்டும்”.
“அது முடியாது அய்யா. முதல் தடவை மிஷின் ஓடி முடிந்து விட்டது”.
கோபாலகிருஷ்ணன் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.
“வரதன் சேர்த்து வைத்த வீடு வேண்டும். அவர் உழைப்பில் வளர்த்த அனைத்தும் வேண்டும். ஆனால் அவர் உயிராய் நினைத்த புத்தகத்தினை தெருவில் விட்டு விட்டார்களே. பாவிகள். என்ன செய்ய”.
தீடீரென்று ஆக்கிரோசமாய் எழுந்தார். அரவை மிஷின் உள்ளே இருந்த இடத்தினை நோக்கி ஓடினார். ஆனால் வாட்சுமேனை தடுத்தார். அவரை தட்டி விட்டு விட்டு அரவை மிஷின் நோக்கி ஓடினார்.
“அய்யா. ஓடாதீர்கள்” என வாட்சுமேன் ஓட இருவரும் ஒருவரை ஒருவர் விரட்டியபடியே ஓடினர்.
அவர்கள் பின்னால் சந்திரனும் ஒட ஆரம்பித்தான்.
மூன்றுபேரும் ஓடி வருவதை முதலாளி கமராவில் பார்த்து விட்டுவெளியே வந்தார்.
கோபாலகிருஷ்ணனுக்கு மூச்சி வாங்கியது. வயதுக்கு மீறிய ஓட்டம்.
“அய்யா மிஷினை நிறுத்துங்க.மிஷினை நிறுத்துங்க. புத்தகத்தை காப்பாத்துங்க”.
முதலாளி அருகில் சென்று விட்டார்.
தொடர்ந்து மூச்சு வாங்க ஆரம்பித்தது. என்ன செய்வது என்று அறி£மலேயே மூச்சு வாங்கிய கோபாலகிருஷ்ணன் அப்படியே மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.
மயங்கிய நிலையில் விழுந்த அவரை தாங்கி பிடித்தான் சந்திரன்.
உடனே மிஷின் நிறுத்தப்பட்டது.
கோபாலகிருஷ்ணன் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. 10 நிமிடம் , ஹார்ட் அட்டாக்கா இருக்குமோ. பயந்தே விட்டார் முதலாளி.
ஆனால் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தார். “அய்யோ புத்தகத்தினை காப்பாத்துங்க” .
முதலாளிக்கு புரியவில்லை.
கோபாலகிருஷ்ணன்அவரை பார்த்தார்.
முதலாளிக்கு 25 வயது தான் இருக்கும். “தம்பி தம்பி புத்தகம் புத்தகம்”.
வரதன் ஆவியே இவர் உடலுக்கு புகுந்து பேசுவது போலவே இருந்தது.
“என்னய்யா சொல்றீங்க”.
“அரவை மிஷினை நிறுத்தச்சொல்லுங்க. புத்தகத்தை காப்பாத்துங்க”.
“அய்யா உங்க பிரச்சனை என்ன விவரமாக சொல்லுங்க”.
“என் நண்பன் வரதன் வீட்டில 2 ஆயிரம் புத்தகம் இருந்தது. எல்லாபுத்தகமுமே சிறப்பானது. அதை எடைக்கு போட்டுட்டாங்க. அந்த புத்தகம் வேணும். தம்பி பிளிஸ் அரவை மிஷினுக்கு அனுப்பிடாதீங்க”
முதலாளிக்கு எல்லாமே புரிந்தது.
சிரித்தார்.
அய்யா என் அப்பா எனக்க 20 வயது இருக்கும்போது இந்த தொழிலை என் கையில் கொடுத்து விட்டு இறந்து போய் விட்டார். அவர் என்னிடம் சொன்னது நல்ல புத்தகம் நல்ல நண்பர்கள். அதனால் நல்ல புத்தகம் எதுவும வந்தால் அதை பிரிந்து பழைய புத்தக கடை நண்பர்களுக்கு விற்பனைக்கு அனுப்பு. உனக்கு நல்ல லாபம் கிடைத்தால் அதை நூலகத்துக்கு அனுப்பு என்பார்.
அதுபோலவே இந்த புத்தகத்தனை பார்த்தேன். 2000 ஆயிரம் புத்தகம் ஒரு சேர்த்து வைத்திருக்கிறார்.அனைத்தும் அருமையான புத்தகம். இதை சேர்க்க இந்த மனிதன் என்ன பாடு பட்டு இருப்பான்.
லோடு மேனிடம் கேட்டார்,அவர் பையன் இதை எடைக்கு போட்டார் என்று கூறினார். அப்போதே புரிந்துகொண்டேன். இந்த புத்தக்தை சேமித்த மகான் மிகப்பெரியவர். அவர் அருமை கும்பத்துக்கு தெரியவில்லை என புரிந்து கொண்டேன். எனவே அவர் புத்தகத்தை காப்பாற்ற வேண்டும் என்று அதை எல்லாமே தனியாக வைத்திருக்கிறேன்.
புத்தகத்தை பார்த்தவுடன் அதை ஒடிப்போய் கட்டி பிடித்துக்கொண்டார்கோபாலகிருஷ்ணன்.
வரதா உன் புத்தகத்தை காப்பாற்றி விட்டேன். என கதறி விட்டார்.
சந்திரன் மெய் மறந்து நின்றான். தான் ஒரு உதவி கேட்டு வந்தால், அவர் இல்லை. அவர் இல்லையென்றாலும் அவர் ஆசையை பூர்த்தி செய்ய ஒரு அணிலாய் இருந்து விட்டேன் . மகிழ்ச்சியாக இருந்தது.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


