தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நல உதவிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (02.05.2022) நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தமிழக இணைய கல்விக்கழகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என “குறளோவியம்” என்ற பெயரில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 365 மாணவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 6 மாணவர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத் தொகையும் சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து பணியிடையே காலம் சென்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழக அரசு உத்தவிற்கிணங்க கலை பண்பாட்டு துறை சார்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 17 முதல் 35 வயது வரையில் உள்ள மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டியில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 15 நபர்களுக்கு காசோலைகள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் ஆணையின்படி நரிக்குறவர் இன மக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் ஒரு நபருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் லேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


