மா. ஆண்டோ பீட்டர் ஏப்ரல் 26, 1967 – சூலை 12, 2012 தமிழக எழுத்தாளரும் மென்பொருள் உருவாக்குனரும் ஆவார். இவர் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினராகவும், கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, ஆறுமுகநேரி எனும் ஊரில் பிறந்தவர். கணினி மென்பொருள் துறையில் 3 ஆண்டு பட்டயப்படிப்பையும், கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், மேலாண்மையியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கும் இவர் சென்னையில் சாஃப்ட்வியூ எனும் பெயரில் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தவர். இதன் மூலம் தமிழ் மென்பொருள் தயாரித்தல், கணினி, இணையம், பல்லூடகம், எழுத்து வரைகலை, அசைவூட்டம், காட்சி சார் தொடர்பு போன்ற கணினி சார்ந்த துறைகளுக்கு தமிழில் பயிற்சியும் அளித்து வந்தார்.
கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்து விதமான படைப்புகளையும் இணையதளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான “தமிழ் சினிமா” எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர். தமிழ்நாட்டில் இணைய இதழ்கள் குறித்த அறிமுகமில்லாத நிலையில், 31-01-1997 ல் தொடங்கப்பட்ட தமிழ் சினிமா இதழுக்கு அச்சிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் அதிக அளவு விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட இதழ் தமிழ் சினிமா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் கணினியியல் தொழில்நுட்பம் தொடர்பான நூல்களைத் தமிழில் எழுதி வருகிறார்.
கணித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளராகவும் இருந்தவர். இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இவர் வகித்த மேலும் சில பொறுப்புகள்;
தமிழ் மென்பொருள் மானியக் குழு உறுப்பினர் – தமிழ்நாடு அரசு
தமிழ் விசைப்பலகைகள் சீர்திருத்தக் குழு உறுப்பினர் – தமிழ்நாடு அரசு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குழு உறுப்பினர் – தமிழ்நாடு அரசு
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மின்நூலகக் குழு உறுப்பினர் – இந்திய அரசு
12 வது ஐந்தாண்டுத் திட்டக் குழுவின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர் – தமிழ்நாடு அரசு
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழியியல் துறையின் பாடத்திட்டக்குழு உறுப்பினர்.
16 பிட் ஒருங்குறி தமிழ் சீர்திருத்தக் குழு உறுப்பினர்
டாக்டர். உ.வே.சா நூல்நிலைய ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளர் (ஏப்ரல் 2012 முதல்)
உத்தமம் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்.
இவர் எழுதிய “தமிழும் கணிப்பொறியும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது – 2007,ஸ்ரீராம் நிறுவனத்தின் “பாரதி இலக்கியச் செல்வர் விருது” – 2010,தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் “பெரியார் விருது” – 2012.
இவர் சென்னையில் ஜீலை 12, 2012 அன்று மாரடைப்பால் காலமானார்.


