தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் உள்ள 24 சார்பதிவாளர் அலுவலகங்களும் இணைக்கப்பட்டு ஒரே தூத்துக்குடி பதிவு மாவட்டமாக செயல்பட வேண்டுமா? என்பது குறித்து கருத்து கேட்கும் கூட்டம் வருகிற 8ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு “தமிழக முதல்வரின் ஆணையின் படியும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் ஆணையின் படியும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் எளிதாக பட்டா மாற்றம் செய்வதற்கும் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகவும் ஒரே வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் அந்த வருவாய் மாவட்டத்திலேயே உள்ள பதிவு மாவட்டத்தில் இணைப்பதற்கும், மற்றும் ஒரே வருவாய் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் அந்த வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலேயே இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஆணையினை செயல்படுத்தும் விதமாக கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் தற்போது 1.தூத்துக்குடி 1 எண் இணை சார்பதிவகம், 2.தூத்துக்குடி 2 எண் இணை சார்பதிவகம், 3.தூத்துக்குடி மேலூர், 4. கீழுர், 5.புதுக்கோட்டை, 6.ஓட்டப்பிடாரம், 7.விளாத்திகுளம், 8.புதூர் 9.திருச்செந்தூர் 10.உடன்குடி, 11.காயல்பட்டிணம் 12.ஏரல், 13.பெருங்குளம் 14.எட்டையபுரம் 15.கோவில்பட்டி, 16.கயத்தார், 17.கழுகுமலை, 18.கடம்பூர், 19.முறப்பநாடு, 20.ஶ்ரீவைகுண்டம், 21.ஆழ்வார்திருநகரி, 22.நாசரேத், 23.கொம்மடிக்கோட்டை, 24.சாத்தான்குளம் என 24 சார்பதிவாளர் அலுவலகங்கள் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது.
இவற்றில் 1.தூத்துக்குடி 1 எண் இணை சார்பதிவகம், 2.தூத்துக்குடி 2 எண் இணை சார்பதிவகம், 3.தூத்துக்குடி மேலூர், 4. கீழுர், 5.புதுக்கோட்டை, 6.ஓட்டப்பிடாரம், 7.விளாத்திகுளம், 8.புதூர் 9.திருச்செந்தூர் 10.உடன்குடி, 11.காயல்பட்டிணம் 12.ஏரல், 13.பெருங்குளம் என 13 சார்பதிவாளர் அலுவலகங்கள் தூத்துக்குடி பதிவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டும், மீதமுள்ள 1.எட்டையபுரம் 2.கோவில்பட்டி, 3.கயத்தார், 4.கழுகுமலை, 5.கடம்பூர், 6.முறப்பநாடு, 7.ஶ்ரீவைகுண்டம், 8.ஆழ்வார்திருநகரி, 9.நாசரேத், 10.கொம்மடிக்கோட்டை, 11.சாத்தான்குளம் ஆகிய 11 சார்பதிவாளர் அலுவலகங்கள் பாளையங்கோட்டை பதிவு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இத்துடன் தூத்துக்குடி வருவாய் மாவட்டம், ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட 6 வருவாய் கிராமங்களான 1.அக்கநாயக்கன் பட்டி, 2.கலப்பைப்பட்டி, 3.கீழக்கோட்டை, 4.கொடியன் குளம். 5.கோவிந்தாபுரம், 6.மருதன்வாழ்வு நாரைக்கிணறு ஆகிய 6 கிராமங்கள் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சார்பதிவகத்திலும் தற்பொழுது இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எனவே மேற்கண்ட அரசாணையின் படி ஒரு வருவாய் மாவட்டத்தில் உள்ள, ஒரே வருவாய் வட்டத்திற்குள் அமைந்த வருவாய் கிராமங்களை ஒரே சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளதால்,
திருநெல்வேலி வருவாய் மாவட்ட எல்கைக்குள்பட்ட கங்கை கொண்டான் சார்பதிவக எல்லைக்குள் இணைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி வருவாய் மாவட்ட 1.அக்கநாயக்கன்பட்டி 2.கலப்பைப்பட்டி, 3.கீழக்கோட்டை, 4.கொடியன்குளம். 5.கோவிந்தாபுரம், 6.மருதன்வாழ்வு நாரைக்கிணறு என்ற 6 கிராமங்களையும், தூத்துக்குடி வருவாய் மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டத்திற்குள் அமைந்த ஓட்டப்பிடாரம் சார்பதிவகத்துடன் இணைக்கவும்
அதே போன்று தூத்துக்குடி வருவாய் மாவட்டத்திற்குட்பட்டு தற்போது பாளையங்கோட்டை பதிவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் 11 சார்பதிவாளர் அலுவலகங்களை தூத்துக்குடி பதிவு மாவட்டத்திலேயே இணைக்கும் நிலை எழுந்துள்ளது. இவ்வாறு மேற்கண்ட பாளையங்கோட்டை எல்லைக்குட்பட்ட 11 சார்பதிவாளர் அலுவலகங்கள் தூத்துக்குடி பதிவு மாவட்டத்தில் இணைக்கப்படும் போது, ஏற்கெனவே உள்ள 13 சார்பதிவாளர் அலுவலகங்களுடன் இந்த 11 சார்பதிவாளர் அலுவலகங்களும் இணைந்து 24 சார்பதிவாளர் அலுவலகத்துடன் மிகப்பெரிய பதிவு மாவட்டமாக இருக்கும்.
எனவே நிருவாக வசதிக்காகவும், பொது மக்களின் வசதிகளையும் கருத்தில் கொண்டும் தற்பொழுது தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களில் புவியியல் அடிப்படையில், மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள 1.கோவில்பட்டி, 2.எட்டையபுரம், 3.விளாத்திகுளம், 4.ஓட்டப்பிடாரம், 5.கயத்தார் என்ற 5 வருவாய் வட்டத்திற்குள் அமைந்துள்ள 1.எட்டையபுரம், 2.கயத்தார், 3.விளாத்திகுளம், 4.புதூர், 5.கழுகுமலை, 6.கடம்பூர், 7.ஓட்டப்பிடாரம் ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களை இணைத்தும் அத்துடன் கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தை இரண்டாகப்பிரித்து கோவில்பட்டி 1 எண் இணை சார்பதிவகம் மற்றும் 2 எண் இணை சார்பதிவகம் என மொத்தம் 9 சார்பதிவாளர் அலுவலகங்களை இணைத்து கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பதிவு மாவட்டத்தையும்,
மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள 1.தூத்துக்குடி 2.திருச்செந்தூர் 3.ஶ்ரீவைகுண்டம், 4.சாத்தான்குளம், 5.ஏரல் என்ற 5 வருவாய் வட்டத்திற்குள் அமைந்துள்ள 1. தூத்துக்குடி 1 எண் இணை சார்பதிவகம், 2 .தூத்துக்குடி 2 எண் இணை சார்பதிவகம், 3.கீழுர், 4.மேலூர், 5.புதுக்கோட்டை, 6.காயல்பட்டணம், 7.ஏரல், 8.திருச்செந்தூர், 9.உடன்குடி, 10.பெருங்குளம், 11.நாசரேத், 12.ஶ்ரீவைகுண்டம், 13.ஆழ்வார்திருநகரி, 14.கொம்மடிக்கோட்டை, 15.சாத்தான்குளம், 16.முறப்பநாடு ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களை இணைத்து தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு தூத்துக்குடி பதிவு மாவட்டமாக செயல்பட பதிவு மாவட்ட எல்லைகள் மறுசீரமைப்பு செய்ய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை ஒரே வருவாய் மாவட்டம் மற்றும் ஒரே வருவாய் வட்டத்திற்குள் அமையுமாறு தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி என்ற இரு பதிவு மாவட்டத்தையும் உருவாக்கி பதிவு மாவட்ட எல்லைகள் மறு சீரமைப்பு செய்யவும் தற்போது திருநெல்வேலி பதிவு மாவட்டத்திற்குட்பட்ட கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள தூத்துக்குடி வருவாய் மாவட்டத்திலுள்ள 6 கிராமங்களை பிரித்து தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கவும் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, மேற்கண்டவாறு தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் உள்ள 24 சார்பதிவாளர் அலுவலகங்களும் இணைக்கப்பட்டு ஒரே தூத்துக்குடி பதிவு மாவட்டமாக செயல்பட வேண்டுமா, அல்லது தூத்துக்குடி பதிவு மாவட்டம் மற்றும் கோவில்பட்டி பதிவு மாவட்டம் என இரண்டு பதிவு மாவட்டங்களாக செயல்பட வேண்டுமா, என்பது குறித்து பொதுமக்களிடையே கருத்து கேட்கும் கூட்டமானது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.04.2022 அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்ட பதிவு மாவட்டங்கள் சீரமைப்பு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


