நெல்லை, மார்ச்.26 பாளை வ.உ.சி. மை தானத்தில் 5வது பொருநை நெல்லை புத்தக திருவிழா கடந்த 17ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை காண தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் வந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
மேலும் மாணவ மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் தினந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல லட்சம் ரூபாய்
மதிப்புடைய புத்தகங்களும் விற்பனையாகி உள்ளன. கண்காட்சியின் 9ம் நாளான நேற்றும் காலை முதலே கண்காட்சியை காண கூட்டம் அலைமோதியது. மானூர் அரசு பள்ளி, வடக்கன்குளம் தனியார் பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் திரண்டு வந்திருந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாது மாணவ மாணவிகள் வரிசையாக சென்று கண்காட்சியை பார்வையிட்டதோடு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன்பெற்றனர்.
மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் சாப்ட்வேர் துறையில் உயர் பதவியில் பணியாற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் பங்கேற்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது சாப்ட்வேர் நிறுவனங்களில் சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர் விளக்கினார். இதேபோல சிலம்ப கலை நிபுணர் அருணாசலம் மற்றும் பழனிராஜா ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரை யாடி ஆலோசனைகளை வழங்கினர்.


