தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 தொடக்க விழா இன்று மாலை நடந்தது. பழைய நீதிமன்றம் முன்புள்ள கட்டிடத்தில் இந்த தொடக்கவிழா நடந்தது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், எஸ்.எஸ்.சுந்தர், தாரணி மற்றும் இளந்திரையன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நீதிமன்றத்தினை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது. அதன் பின்னர் நீதிபதிகள் பழைய நீதிமன்ற கட்டிடத்தினை பார்வையிட்டனர்.
அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நீதிமன்ற தொடக்க விழா நடந்தது. கலந்து கொண்ட நீதிபதிகளை ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
அதன்பின்னர் நீதிபதி தாரணி பேசுகையில், ஒரு பெயில் எடுக்கும் மனுவிற்கு மல்லையாவிற்கும் சரி, மாடசாமிக்கும் சரி ஒரே சட்டம் தான். ஆனால் கட்டணம் வாங்குவது ஒரே போல் கிடையாது. அந்த ஒரு நல்ல தன்மை வேறு எந்த தொழிலிலும் கிடையாது. மாடசாமியை மனதில் வைத்து அவருக்கு குறைவான கட்டணமும், மல்லையாவிற்கு அவருக்கு ஏற்றவாறு கட்டணமும் வசூலிப்போம். இது வழக்கறிஞர் தொழிலுக்கு மட்டுமே உண்டானது. வழக்கறிஞர்கள் செய்யும் ஒரு சில விஷயங்களில் குறைபாடுகள் உள்ளது. வாகனங்களில் வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். வாகனங்களுக்கு சரியான பேப்பரை வைத்துக் கொள்வதில்லை. இது பொதுமக்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கும் போது முதலில் வழக்கில் சம்பந்தப்பட்டவர் வருகிறார். தொடர்ந்து அவரின் வாரிசு வருகிறார். அதனை தொடர்ந்து வாரிசின் வாரிசு தான் வருகிறார். வழக்கு முடிவில்லாமல் செல்கிறது. அந்த நிலை மாற வேண்டும். 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் அரசியல் வாதிகளையும், ரவுடிகளையும் தேடிச் செல்லும் நிலை உள்ளது. அதனை மாற்ற வழக்கறிஞர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். வழக்கு நடத்துவது மட்டும் வழக்கறிஞரின் பணி இல்லை. அதற்கு தீர்வு கண்டு கொடுப்பதே ஒரு வழக்கறிஞரின் கடமை ஆகும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசுகையில், இந்த ஸ்ரீவைகுண்டம் பகுதி மிகவும் பழமையான பகுதி இந்த பகுதியில் தான் ஆதிச்சநல்லூர் உள்ளது. மேலும் இந்த ஆதிச்சநல்லூரில் 2006 ல் நடந்த அகழாய்வின் அறிக்கையில் பலவிதமான வரலாற்றுத் தகவல்கள் வந்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி கோவிந்தராஜ் பேசுகையில், வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு காலம் மிக முக்கியம். முடிந்தவரை வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்களை நடத்தலாம். மேலும் அரசியல் வாதிகளிடமோ, கட்டப்பஞ்சாயத்திற்கோ செல்லாமல் நமது நீதிமன்ற கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சநல்லூர் வழக்கு எண் புத்தகத்தை நீதிபதிகளுக்கு அவர் வழங்கினார். புத்தகம் குறித்து நீதிபதிகள் எழுத்தாளரிடம் கேட்டறிந்தனர்.


