ஸ்ரீவைகுண்டம் அருகே சொத்து தகராறில் தம்பியை சிலிண்டர் மற்றும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், வடக்கு பண்டிதர் தெருவைச் சேர்ந்தவர் பலவேசம் மனைவி லட்சுமி (58). இவருக்கு காசிராஜன், லட்சுமண பெருமாள் (35), சக்திபாலன் (32) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் காசிராஜனும் லட்சுமண பெருமாளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். சக்திபாலன் மட்டும் திருமணமாகாமல் தனது தாயார் லட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.
லட்சுமண பெருமாள் குடிபோதையில் அடிக்கடி தனது தாய் லட்சுமியிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி லட்சுமண பெருமாள் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது லட்சுமியும் அவரது கணவர் பலவேசமும் வெளியே சென்றபோது லட்சுமண பெருமாளும், சக்திபாலனும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். பின்னர் லட்சுமண பெருமாள் தனது தம்பி சக்திபாலன் வீட்டில் அடிபட்டு கிடப்பதாக தனது தாய் லட்சுமியிடம் கூறியதன் அடிப்படையில் சக்திபாலனை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சொத்து தகராறில் லட்சுமணபெருமாள் சக்திபாலனை வீட்டிலிருந்த சிலிண்டர் மற்றும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தற்போதுதான் தாயார் லட்சுமிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் நேற்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து லட்சுமண பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


