செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு பெற்றது. இந்த வாரச்சந்தைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத், சாத்தான்குளம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை போன்ற பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இந்த சந்தைக்கு வியாபாரம் செய்ய வருகை தருவார்கள்.
அதே போல் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சந்தையில் தங்கள் தேவைக்கேற்ப பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த சந்தையில் காய்கறி, பழங்கள், மீன், கருவாடு, உணவுப்பொருட்கள், மளிகை சாமான்கள், கோழி, ஆடுகள் என அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சந்தை கடந்த வருடம் சீரமைக்கப்பட்டது. அதன் காரணமாக சந்தைக்கு வரும் வியாபாரிகள் எண்ணிக்கையும், பொதுமக்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் செய்துங்கநல்லூரில் உள்ள திருநெல்வேலி & திருச்செந்தூர் சாலையின் இருபுறமும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து சிறு சிறு விபத்துக்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் பயிற்சி டிஎஸ்பி சியாமளா தேவி தலைமையிலான போலிசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி சந்தைக்குள் கொண்டு சென்றனர். மேலும் தொடர்ந்து இதுபோல் வெளியில் கடை போடாமல் இருப்பதற்காக போலிசார் தொடர்ந்து சாலையில் ரோந்துப்பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்


