தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் 10,000 பனை மர விதைகள் நடும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் பனை மர விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு பனை விதைகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்ந்து தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பனை மர விதைகளை நட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், இந்த துப்பாக்கி சுடும் தளம் 96 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதன் எல்லை ஓரங்களில் 10,000 பனை மர விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இன்று நடைபெற்று வருகிறது. பனை மரம் வளர்ப்பது பல வகைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பனை மரங்களை மணற்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வளர்ப்பதன் மூலம் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும், ஏனென்றால் ஆணி வேரை விட பக்கவாட்டில் செல்லக்கூடிய சல்லி வேர்கள் அதிகம். இதனால் மண் வளம் மற்றும் நீர் வளம் அதிகரிக்கும். ஒரு காலத்தில் பனை மரங்கள் அதிகம் இருந்தது, அவற்றை வெட்டி விட்டனர். இப்போதுதான் அதன் பயன்களை அறிந்து லட்சக்கணக்கான பனை மர விதைகளை நட்டு பனை மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும், தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் இன்னும் ஓரிரு ஆண்டுகள் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், எல்லோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையாக கொரோனா தொற்றிலிருந்து விடுபட முடியும். அதே போன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசததில் 10,000 பனை விதைகளை பெற்று இதற்கு ஏற்பாடு செய்த தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பேசினார்.
இந்த பனை மர விதை நடும் விழாவிற்கு தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் நன்றியுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், செல்வராஜ், சொக்கலிங்கம், லிவிங்ஸ்டன், சக்திவேல் மற்றும் தலைமை காவலர் ராஜா உள்ளிட்ட ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.


