சிறுபான்மையின அமைப்புகளின் நிதி ஆதாரத்தை முடக்கும் வகையில் கொண்டு வரப்படும் சட்டத் திருத்தங்களை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:”சிறுபான்மையின சமூகங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வெளிநாட்டு நிதியை முடக்கும் நோக்கோடும், நியாயமற்ற வகையிலும் ‘வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை’ (FCRA Amendment) ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரவிருக்கிறது.”
இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மதங்களுக்கும் சம உரிமையை உறுதியளித்துள்ளது.அந்த அடிப்படை உரிமையைச் சிதைக்கும் எந்தவொரு முயற்சியையும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் இந்தச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
மேலும், கோவையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரம், சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் வலிமை சேர்ப்பதாக அமையும் என்றும் அவர் தனது பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


