கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில், பங்குனிப் பெருந்திருவிழா வருகிற 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில், புகழ்பெற்ற பங்குனிப் பெருந்திருவிழாவிற்கான கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவிழா முன்னேற்பாடாக நேற்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்குத் திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி மற்றும் விளா பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மூலவர் பூவனநாத சுவாமி மற்றும் செண்பகவல்லி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டன.
சுவாமி சன்னதி முன்பு கால் நாட்டிற்கான புனிதக் கம்பத்திற்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மேளதாளங்கள் முழங்க, மாட வீதிகள் வழியாகக் கம்பம் எடுத்து வரப்பட்டது. இறுதியாகக் கோவில் முன்பாகப் பக்திப் பரவசத்துடன் கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் அதிகாரப்பூர்வமாகக் கொடியேற்றத்துடன் பங்குனிப் பெருந்திருவிழா தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள்.
தேரோட்டம்: திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 14-ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு கண்கவர் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. பங்குனிப் பெருந்திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்


