திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரான முருகர், வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை திரளான பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தன.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தேவசேனா அம்மனுடன் 108 மகாதேவர் சந்நிதியில் எழுந்தருளினார். அங்கு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு, கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


