தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
கொடி நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒரு பயனாளிக்கு திருமண நிதியுதவியாக 8 கிராம் தங்க நாணயமும், 3 பயனாளிகளுக்கு மகளை ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கான தொகுப்பு மானியமும், 17 பேருக்கு கல்வி உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு பக்கவாத நிவாரண நிதியுதவியும், ஒரு பயனாளிக்கு மனவளர்ச்சி குன்றியோர் நிதியுதவி, ஒரு பயனாளிக்கு வீட்டுவரி மீளப் பெறுவதற்கான நிதியுதவி, 11 பேருக்கு கண்கண்ணாடி மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கி பேசினார்.
அப்போது, நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு இன்னுயிரை ஈந்த முப்படை வீரர்கள், காயம் அடைந்த வீரர்கள், அவர்களை சார்ந்தோருக்கு நன்றி பாராட்ட ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7-ந் தேதி படைவீரர் கொடிநாள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அன்னைய நாளில் தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில் கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதியை படைவீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024-25-ம் ஆண்டு கொடி நாள் நிதி வசூலாக ரூ.1 கோடியே 10 லட்சத்து 99 ஆயிரத்து 467 மற்றும் மாநகராட்சி மூலம் ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்து 515 வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற பாதுகாப்பு மற்றும் அர்ப்பணிப்பு பணிகள், சேவைகள் நாட்டினுடைய மாபெரும் பணியாகும்.
இந்திய பெருங்கடல் மற்றும் நமது நாட்டினுடைய முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையையும், தியாகத்தையும் நினைவில் கொண்டு போற்றிட வேண்டும். நமது நாட்டுப் பற்றை வெளிப்படுத்திட இது போன்ற தருணங்கள் நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


