 
                பரமன்குறிச்சியில் மக்களுக்கு ஆபத்தாக உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சி தோட்டத்தார்விளையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆபத்தான நிலையில் ரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த வழியில் செல்லும் பள்ளி குழந்தைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனை இடமாற்றம் செய்யக் கோரி பலமுறை மனுக்கொடுத்தும், போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரமன்குறிச்சி கிளை சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பி. பூமயில் ஒன்றிய செயலாளர் ப.கந்தசாமி, மூத்த உறுப்பினர் எம். மகாராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜி. சக்திவேல் கிளை உறுப்பினர்கள் ஆறுமுகசிவசங்கர், மாணிக்கம், கனகராஜ், மணிகண்டன், சரோஜாதேவி, மற்றும் ஊர்த்தலைவர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் இன்னோஸ் குமார், மகளிர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள், 12 ஆண்கள் உட்பட 23 பேரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
                            
                        
	                    
 
                     
                     
                     
                    

