தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கடன் தொகையை விரைந்து வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேப்பலோடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். கடன் விண்ணப்பம் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை கடன் வழங்கப்படவில்லை.
இது குறித்து கூட்டுறவு சங்கச் செயலாளரிடம் கேட்டபோது, “மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் மனு நிலுவையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளனார். இக்குழுக்களில் உள்ள பெண்கள் அனைவரும் சுயதொழில் செய்து வருபவர்கள். கடன் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் அவர்களின் தொழில் முடங்கி, வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
சுயதொழிலை நம்பியுள்ள பெண்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய பரிந்துரை செய்து, தங்களுக்குத் தேவையான கடன் தொகையை விரைந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மல்லிகை, மலர் மற்றும் கடல்கன்னி ஆகிய சுயஉதவிக் குழுக்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.


