கருங்குளம் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்த பலத்த மழையால் சின்னார்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஶ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக கருங்குளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்தது.
ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதையும் மழை வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டது.
சின்னார்குளம் கிராமத்தில் இரண்டு வீடுகள் மழை வெள்ள நீரால் சேதமடைந்து இடிந்து விழுந்தது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் யாரும் வரவில்லை என்ற புகார் எழுந்தது.
இதையடுத்து வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் பொது மக்களை மீட்டு ராமானுஜம் புதூர் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ஶ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சின்னார்குளம் கிராமத்தில் வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது சொந்த நிதியில் ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ நிவாரணத் தொகை வழங்கினார்.
பின்னர் வீடு வீடாக சென்று மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி மழைநீரை வடியவைபதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ராமானுஜம் புதூர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
இந்த ஆய்வில் தூத்துக்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கிய லீலா, செல்வி, சேரகுளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அல்லி அரசன், எம்எல்ஏ நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், வட்டார காங்கிரஸ் தலைவர்புங்கன், பஞ்சாயத்து தலைவர்கள் செந்தில் நாயகி, ரங்கன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து செயலர்கள் சங்கத் தலைவர் சுரேஷ், விஏஓ ரமேஷ், கிளர்க் பாரதி, மாவட்ட தலைவர் கால்வாய் சிவசுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சித்தார்த்தன், வட்டார காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் வனிதா ஸ்டாலின், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


