 
                பாலியல் உணர்ச்சியே உயிரினங்களின் தொடர் நிலைப்பிற்கான மூலம்.புவியை உயிர்க் கோளமாக, உயிரினங்களின் அசைவில் வைத்திருக்கும் ஓர் அற்புத சக்தி.ஒவ்வொரு உயிரிகளுக்குள்ளும் நிறைந்திருக்கும் இப்பாலியல் உணர்ச்சியே தலைமுறை தலைமுறையாய் அவை தொடர்ந்து உயிர்வாழ்வதற்கான அடிப்படைக் காரணம்.
இவ்வுணர்வு படைப்பின்போதே படைப்பாளனால், கடவுளால் ,இயற்கையால் அருளப்பட்ட மாபெரும் கொடை .எந்த உணர்ச்சியும் அளவில் அதிகரிக்கும் போது அதன் தன்மையை இழந்து தவறானதாகக் கருதப்பட்டு விடுகிறது. இந்த பாலியல் உணர்ச்சியும் நெறிப்படுத்தப்படக்கூடிய ஒன்றே.
இளம் வயதினர்,குறிப்பாக ‘டீன் ஏஜ்’ எனப்படும் 13 வயதிலிருந்து 20 வயதுடையவர்கள் இப்பாலுணர்வால் கட்டுண்டு கிடப்பர். ஆனால் இப்பருவம் தான் மிக முக்கியமான கற்றல் பருவம்.பள்ளி மற்றும் கல்லூரி பருவம்.இலட்சியத்தின் துவக்கப் பருவமும்கூட…!
எனவே அவர்களைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விதத்தில் வழி நடத்தினால் மட்டுமே அவர்களால் தங்கள் இலட்சியப் பாதையைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ற கல்வித் தகுதியைப் பெற்றுத் தங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் .
இயல்பான அவர்களது அவ்வயதின் செயல்களையும், மாறுதல்களையும் ஏற்கும் மனநிலை விடலைப் பருவத்தினரின் குடும்பச் சூழலில் இருக்க வேண்டும்.
அதீத பாலியல் உணர்ச்சிகளால் காதலில் விழுவதும், எதிர்பாலரின் கவனத்தை ஈர்ப்பதுமே இப்பருவத்தினரின் தீராத அக்கறையாக இருக்கும்.அத்தகைய செயல்களிலேயே கவனத்தைச் செலுத்தி நேரத்தை மட்டுமல்ல தங்களது கடமைகளையும் மறந்து விடுகின்றனர்.
சிலர் காதலிப்பதும், காதலில் வெற்றி பெறுவதுமே தங்களது வாழ்வின் இலட்சியமாக நினைத்துக் கொண்டு வாழ முற்படுவர்.
அதிகபடியான அழகுணர்ச்சியால் தங்களைத் தாங்களே அழகுபடுத்தும் செயலில் மிகத் தீவிரமாக இறங்குவர்.
இவற்றையெல்லாம் பெருங்குற்றமாகக் கருதி அவர்களைப் புறக்கணிப்பதோ அண்டை வீட்டார் மற்றும் பிற உறவினர்களிடம் கூறி அவர்களைக் கேலி செய்வதோதான் பெருங்குற்றம்.இந்நிலை இன்றும் நிறைய குடும்பங்களில் இருந்துவருவது மிகவும் கீழ்த்தரமான அறியாமைதான் என்பேன்.
ஒருவரது இயல்பான உணர்வுகளை அவமதிப்பது என்பது அவர்களை மனமடிவாக்குவதோடு இளம் வயதிலேயே தன்மீதான மதிப்பை
அறியாமல் போக நேரிடுகிறது.இந்நிலை பின்னர் தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து சரியாக அவர்களை வழிநடத்த வேண்டும்.
அவர்களது இயல்போடு அவர்களை ஏற்றுக் கொள்வதும், “இதெல்லாம் தவறில்லை ஆனால் உனக்கென்றுள்ள இலட்சியத்தை நிறைவேற்ற
முயற்சி செய்,அது தான் உனக்கு நிரந்தரமான அழகை தரும்”. என்பன போன்ற அறிவுரைகளை அடிக்கடி கூறி அவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டியது பெற்றோர்களின் முழுக் கடமை. இப்பருவம் மிகவும்
உணர்ச்சி பூர்வமானது. பெற்றோர்களும் இந்தப் பருவத்தைக் கடந்து வந்தவர்களே.
இதை அவர்கள் கடக்கும் வரை மிகவும் கவனமாக அவர்களைக் கையாள வேண்டும். அவர்களை இயல்பான முறையில் நெறிப்படுத்த வேண்டும்.சரியான பாலியல் அறிவை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
இளைஞர்கள் புரிந்து கொள்ளும் விதங்களில் அறிவியல் பூர்வமாக எழுதப்பட்ட பாலியல் புத்தகங்களை அவர்கள் வாசிக்கும்படி வாங்கிக் கொடுப்பது அவசியம். அல்லது ஊடகங்களில் முறைகேடான , பாலியல் உறவுகளைப் பார்த்து உண்மைக்கு மாறான பாலியல் அறிவைதான் உள்ளத்தில் பதித்து வைத்திருப்பார்கள்
அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் ,வெளிப்படையான பேச்சு, இயல்பான சமூக பிரச்சனைகள் பற்றின உரையாடல், போதிய அன்பை வழங்குதல், நட்புடன் அவர்கள் எதிர்பார்க்கும் காதல் விசயங்களை வெளிப்படையாக பேசுதல் போன்ற உளவியல் ரீதியான அணுகுமுறைகளால் தான் அவர்களைப் பக்குவப்படுத்த முடியும்.
இந்தக் கட்டற்ற பாலியல் உணர்வினால் இலட்சியத்தைக் கண்டு கொள்ளாமல் விழுந்து போனவர்கள் அதிகம். அதற்குக் நமது நாட்டில் இன்னும் பாலியல் உணர்வுகளைப் பற்றின அறிவை வயதுவந்த நம் பிள்ளைகளுக்கு இயல்பான ஒரு விசயமாக எடுத்துரைக்க பெற்றோர்கள் தயங்குவது தான் முதன்மையான காரணம்.
அனைவருக்கும் ஏற்படும் கோபம், மகிழ்ச்சி போன்ற ஒரு சாதாரண உணர்ச்சி தான் இந்த பாலியல் உணர்ச்சியும் என்ற தெளிவு இன்றைய பெற்றோர்களிடமும் ஏன் பெரும்பாலான ஆசிரியர்களிடமும் கூட இல்லாமல் இருப்பது தான் வேடிக்கையான விசயம்.
பெரும்பாலும் வளரிளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் உணர்ச்சிகளினால் அவர்களிடம் உண்டாகும் நடத்தை மாற்றங்களைப் பெரும் குற்றங்களாகப் பார்ப்பதும், அவர்களது பாலியல் உணர்ச்சிகளைத் தவறான ஒன்றாக பார்ப்பதும், ஒதுக்குவதும் அறியாமையின் உச்சம்.
இதனால் தான் அப்பருவத்தினருள் பெரும்பாலானோர் தன்னையொத்த நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பெற்றோரைப் புறக்கணிக்கின்றனர்.தனது உணர்ச்சிகளும், எண்ணங்களும் உதாசீனப்படுத்தப்படும் இடத்தில் மகிழ்ந்திருக்க யாரும் விரும்புவதில்லை.எனவே அவர்கள் வீட்டிற்குத் தெரியாமல் பாலியல் தொடர்புகளில் ஈடுபடுவதற்கான காரணமாகவும் அமைந்து விடுகிறது.
வளர்ந்த குழந்தைகள் தங்களுக்குள் எழும் பாலியல் விவகாரங்களைக் குறித்து ஏற்படும் சந்தேகங்களைப் பெற்றோர்களுடன் தெளிவாகக் கேட்டறியும் அளவிற்குப் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். அந்த அளவிற்கு பெற்றோர்களது பேச்சும், செயல்பாடும் மிக எதார்த்தமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
எனது தோழிக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். அவர்களைப்பற்றின விசயங்களை என்னோடு அவள் பகிர்ந்து கொண்டாள்.
“இருவரும் மேல்நிலைக் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர்.அதில் ஒருவனது செயல்பாடு என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத அளவு கேவலமாக இருக்கிறது ,எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று அழுதாள்.எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. “என்னவாகி விட்டது?” என்றேன். இவன் இரவில் சுயமாக பாலியல் இன்பம் ( Self sex)செய்து கொள்கிறான். நான் பலமுறை கவனித்து விட்டேன் .இவன் இந்த வயதில் இப்படி இருக்கிறானே
என்னவாகுமோ தெரியவில்லை” என்று கூறி தனது அழுகையைத் தொடர்ந்தாள்.
நான் சற்று மௌனமாக இருந்துவிட்டு பிறகு …”இதற்கு ஏன் இந்த அழுகை?” என்றேன் . கோபமாக என்னை ஏறிட்டுப் பார்த்தவள் “எவ்வளவு பெரிய பாவம் இது?” என்றாள் அப்பாவித்தனமாக.
“அப்படியானால் இப்போதே உன் மகனுக்கு ஒரு திருமணத்தை செய்து வை” என்றேன் சிரித்தபடியே.
இது சாதாரண உடல் முதிர்ச்சியினால் ஏற்படும் விசயம் தான். இது தவறில்லை. பெரும்பாலான பெண் பிள்ளைகளும் தன்னைத் தானே திருப்திபடுத்திக் கொண்டு தான் திருமணம் ஆகும் வரை காத்திருக்கிறார்கள். காலையில் முந்தினநாள் உணவு செரிமானத்தை கழிவரையில் கழிப்பதில்லையா நாம்? அது போலத் தான் இதுவும். இது அவர்களது முறைகேடான பாலியல் உறவை தவிர்க்கும், என்று கூறினேன்.
அமைதியானாள்.
முறையான ஆலோசனைகள் அளிக்கப்பட்டு இன்று அவன் உயர்ந்த வேலையிலும் அருமையான திருமண வாழ்க்கையிலும் மகிழ்ந்து கொண்டிருக்கிறான் .
இன்றைய ஊடகங்களில் வெளிப்படையான பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் திரைப்படக் காட்சிகள், பாடல்கள், நிகழ்ச்சிகள், கதைகள், போன்றவை சர்வசாதாரணமாக இடம் பெறுகின்றன. அவற்றை நாகரீக வளர்ச்சியாக ஏற்று இரசிக்கும் நம்மவர்கள் பாலியல் கல்வியை அளிப்பதில் மட்டும் தயக்கம் காட்டுகிறார்கள்.
பாலியல் சார்ந்த தெளிவான அறிவை நமது பிள்ளைகளுக்கு வழங்கினால் இத்தகைய காட்சிகள் அவர்கள் மனதில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற அறிவை நம் சமூகம் இன்னும் பெறாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம்.
இதுபோன்ற விசயங்களைப் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு வெளிப்படையாகக் கூறும் அளவிற்கு நமது சமூகத்தில் இன்னும் போதிய விழிப்புநிலை மனப்பான்மைகள் வளரவில்லை.
ஆண்பிள்ளைகளுக்குத் தகப்பனும் பெண்பிள்ளைகளுக்கு தாயும் இதுபோன்ற அவர்களது மனதிலுள்ள சந்தேகங்களை நீக்குவதற்கான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாலியல் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடும் முயற்சிகளுள் ஒன்று தான் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு. இன்று பல இளைஞர்கள் இதற்காகவே வயது வேறுபாடுகளைக் கூட கணக்கில் வைக்காமல் ஏதோ ஒரு பெண்ணின் தொடர்பு கிடைத்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி கொண்டு தங்களது இத்தகைய பாலியல் தேவையை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.இதனால் ஏற்படும் சிக்கல்கள் கொஞ்சமல்ல..!
இதையே தங்களது வாழ்க்கையின் இலட்சியமாகவும் நினைத்துக் கொண்டு வாழ்வை வீணடிக்கிறார்கள்.அல்லது தாங்கள் தேர்ந்தெடுத்த இலட்சியத்தை இதற்காகவே பலியாக்கி வாழ்க்கையில் சூனியமாகி விடுகிறார்கள். இன்றைய இளைஞர்களின் இந்நிலையை மாற்றுவதில் குடும்பமும், பள்ளிச் சூழல்களும் பாடத்திட்டங்களும் திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும்.
பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு விடையளிக்கும் சிறு சிறு அளவிலான நூல்களை எழுதி அவற்றை மாணாக்கர்களைக் கட்டாயமாகப் படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் பாலியல் உணர்ச்சிப்பெருக்கால் ஏற்படும் இலட்சியத் தடைகள் மாறும்.

 
                     
                     
                     
                    

