
குலசேகரன்பட்டினம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதியதில் நெல்லையைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி அருகே ஆவுடையாள்புரத்தை சேர்ந்த குருமூர்த்தி (21), ரஞ்சித் (18), பாரத் (18), ஆகியோர் மாலை அணிந்து கோவிலுக்கு வந்தனர். திருவிழா முடிந்து ஒரே பைக்கில் நேற்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குருமூர்த்தி பைக்கை ஓட்டியுள்ளார்.
மணப்பாடு செல்லும் சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே, நாகர்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ் மீது பைக் மோதியது. மூவரும் துாக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே குருமூர்த்தி, ரஞ்சித் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பாரத், திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.