பேம்பாரில் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழுமம் கட்டிடப் பணிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
வேம்பாரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழுமம் கட்டிடத்திற்கான பணிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : தூத்துக்குடி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் பனைத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதலையும், மதிப்பு கூட்டப்பட்ட பனைப் பொருட்களின் உற்பத்திக்காகவும், வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளுக்கேற்ப அவர்களது உற்பத்தி திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு “வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழுமம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குழும் பொது வசதி மையத்தில் ஏற்றுமதி தரத்திலான கருப்பட்டி, பனங்கிழங்கு பவுடர், பணங்கற்கண்டு ஆகியவற்றிற்கான உற்பத்திக்கூடங்கள், உணவுப்பொருள் தரக்கட்டுப்பாட்டிற்கான (NABL) அங்கிகாரம் பெற்ற ஆய்வுக்கூடம், பனை சார்ந்த கைவினைப்பொருட்கள் உற்பத்திக்கான பயிற்சிக்கூடம், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கான விற்பனைக்கூடம் ஆகியவற்றை அமைப்பதற்காக குறுங்குழும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்த திட்ட மதிப்பீட்டில் 95% தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டும், மீதமுள்ள 5% வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழும் சங்கத்தால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொது வசதி மையம் அமைவதால் வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 120 குறு மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பும், ஆண்டிற்கு 10 கோடி வருவாயும் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் நேரடி ஏற்றுமதி வருவாயும் தற்போதைய அளவிலிருந்து 2 மடங்கு அதிகரிக்கும்.
குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நவீன இயந்திரங்களுடன் கூடிய வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் உற்பத்திக்காக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், சூரங்குடியில் பொது வசதி மையம் கட்டுவதற்காக இன்றையதினம் அடிக்கல் நடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் (பொ) செந்தில்வேல் முருகன், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், ரஞ்சித், விளாத்திகுளம் வட்டாட்சியர், குழும உறுப்பினர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


