தூத்துக்குடி மாவட்டத்தில் 20 அரசு பள்ளிகள் உட்பட 66 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18509 மாணவர்கள் மற்றும் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 341 மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை புரியாமல் இருந்து துணைத் தேர்வுக்கு வருகை புரிந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 05 ஆக மொத்தம் 346 மாணவர்கள் என இறுதியாக தேர்ச்சி பெற்ற 18,855 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ”கல்லூரிக்கனவு” நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது..
இதில் ஒரு சிறப்பு முயற்சியாக ”பெரிதினும் பெரிது கேள்” என்ற ஒவ்வொரு மாணவருக்குமான தனித்துவமான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் மாணவர்களின் திறனுக்கு ஏற்ற சிறந்த வாய்ப்புகளை பெற வழிகாட்டுதல்களை வழங்கி அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதாகும்.
இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 206 பள்ளிகளை (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்) நேரடியாக அணுகி, அங்கு படிக்கும் மாணவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, எந்த பாடப்பிரிவில் மற்றும் எந்தக் கல்லூரியில் சேர முடியும் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. இந்த பணிக்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் ஒவ்வொரு பள்ளியையும் நேரடியாக தொடர்பு கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எளிதாக புரியும் வகையில் ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.
இந்த சிறப்பான முன்னெடுப்பின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற 18,855 மாணவர்களில், 18,734 (99.35%) மாணவர்கள் உயர்கல்வி/தொழிற்கல்விக்கு விண்ணப்பித்தனர், உயர்கல்வியின் விகிதத்தை உயர்த்துவது மட்டும் நோக்கமாக கொள்ளாமல், ஒவ்வொரு மாணவருக்கும் திறனுக்கு ஏற்ற படிப்புகளைப் பெறுவதற்கு தனித்தனி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் மதிப்பெண்கள், தகுதி மற்றும் வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் பல்வேறு வகையாக வகைப்படுத்தப்பட்டு உயர்கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பு மாணவர்கள் அழைக்கப்பட்டு தனித்தனியான வழிகாட்டுதல் நிகழ்வுகளும் நடைபெற்றது.
உயர்கல்வி பயிலுவதற்காக, 18,855 மாணவர்களில் தேசிய உணவு மேலாண்மை மற்றும் தேசிய கலை வடிவமைப்பு படிப்பு, பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், மீன்வளம், கலைக் கல்லூரி, கடல் சார் படிப்பு, சான்றிதழ் படிப்பு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட இன்னும் பல உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 18130. தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் விழுக்காடு 96.15% ஆகும். நமது மாவட்டத்தில் 20 அரசு பள்ளிகள், 17 அரசு உதவி பெறும் பள்ளிகள், 29 தனியார் பள்ளிகள் என மொத்தம் 66 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் உயர்கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் நிறைந்த மனதுடன் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.


