ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் தரமற்ற முறையில் சீரமைப்பு பணியினை மேற்கொண்ட நிறுவனங்கள் மீதும் துணைபோன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு, தெற்க மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அனுப்பியுள்ள மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட ஆற்றுப் பாலமானது கடந்த 2023 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் பலத்த சேதத்தை சந்தித்தது. அதனை தொடர்ந்து இந்த பாலத்தை சீரமைக்கும் பணியானது கடந்த ஓராண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வந்த நிலையில், சீரமைப்பு பணிகள் முழுமையடைந்ததாக கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பெய்துவரும் சாதாரண பருவமழைக்கு பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அந்த பாலமானது சேதமடைந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவமானது பாலத்தின் உறுதித்தன்மை மீதான பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதோடு இந்த பாலத்தின் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ஏரல் பாலத்திற்கான பராமரிப்பு மற்றும் கட்டுமான பணியானது தரமான முறையில் மேற்கொள்ளப்பட வில்லை என்பது தெளிவாகிறது. மேலும் நேற்றய தினம் இந்த பாலத்தில் சேதமான பகுதிகளை அவசர அவசரமாக மூடிமறைக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது மேலும் பல சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்து தரமற்ற முறையில் சீரமைப்பு பணியினை மேற்கொண்ட நிறுவனங்கள் மீதும் அவர்களுக்கு துணைபோன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் மேலும் இந்த பாலத்தை தரமான முறிையில் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


