கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்று ஓய்வுபெற்றவர்களுக்கு, கடந்த 4 மாதங்களாக தமிழக அரசு ஓய்வூதியம் வழங்காமல் காலம் கடத்தி வருவதைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தர்மா தலைமை தாங்கினார். தமிழ்நாடு எழுச்சித் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க, மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கெனத் தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாகக் குறைந்தபட்சம் ரூ.3000 வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து, சொந்த வீடுகள் இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும்.
கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு வீடு கட்ட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மானியத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆறுமுககனி, மனோன்மணி, ஆனந்தபாரதி மற்றும் சின்னத்தாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக வீரலட்சுமி நன்றியுரை ஆற்றினார்.


