
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் சினிமா துணை நடிகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் பேட்டை குளத்தை சேர்ந்தவர் மாசானம் மகன் ராஜ் (45). இவர் கிராக்கி, விதி எண்-3, உயிர் மூச்சு ஆகிய சினிமா படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாய்ஸ். இவர் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ரூபன்ஜான் என்ற மகனும், டைட்டஸ் மேத்திவ் என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த சில வருடங்களாக தூத்துக்குடி கே.டி.சி.நகரில் குடியிருந்து வருகின்றனர். நடிகர் ராஜ் நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் வழியாக ஓசநூத்து நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செவல்குளம் அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது சாலையில் கிடந்த கல் மீது மோதியதால் பலத்த காயமடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்யேசுதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நடிகர் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.