
சாத்தான்குளம் அருகே மதுபோதையில் தகராறு செய்து தாயை வாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுதா செல்வி (60). இவர்களது மகன் ஆனந்தராஜ்(39). கார் டிரைவர். இவர் சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் சென்னையில் இருந்து மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில், தினமும் அவர் மது குடித்து விட்டு தாய் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை தாயாரும், அவரது மனைவியும் கண்டித்து வந்துள்ளனர். நேற்றும் வழக்கம்போல் மது போதையில் வந்த ஆனந்தராஜ், தாயிடம் தகராறு செய்துள்ளார். அவரை தாய் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த வாளால் தாயை சரமாரியாக வெட்டி உள்ளார்.
பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் அலறியவாறு வீட்டிற்குள் விழுந்துள்ளார். அங்கிருந்து ஆனந்தராஜ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாக குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சென்று பலத்த காயங்களுடன் இருந்த சுதா செல்வியை மீட்டு, சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.