
இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை, திருச்சி மண்டலம் சார்பில் பன்னாட்டு அருங்காட்சியக தினவிழா ஆதிச்சநல்லூரில் நடைபெறுகிறது. புதிதாக அருங்காட்சியகம் அமையவுள்ள ஆதிச்சநல்லூர் திருச்செந்தூர் பிரதானச்சாலை அருணா உணவகம் எதிரில் உள்ள இடத்தில் மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருச்சி மண்டல இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் முனைவர் அருண் ராஜ் வரவேற்றுப் பேசுகிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் சு. இராஜவேலு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு,ஸ்ரீ வைகுண்டம் கே.ஜி.எஸ் வரலாற்றுத் துறை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களை கவுரவ படுத்துதல் மற்றும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்திற்கான மூலப்பத்திரம் பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வைகுண்டம் கே.ஜி.எஸ் கல்லூரி , பாளை ஜான்ஸ் கல்லூரி, பாளை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களும், பாளை சேவியர் கல்லூரி, சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
திருச்சி மண்டல உதவி தொல்லியல் கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன் நன்றி கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சி மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.