தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 16ஆம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வினை 280பேர் எழுத உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை-II) (கணினி வழித் தேர்வுகள்) 16.11.2025 அன்று மு.ப. மற்றும் பி.ப. ஆகிய இருவேளைகளிலும் நடைபெறவுள்ளது.
இத்தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மற்றும் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி தேர்வினை 280 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.
தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு தேர்வு நாளான 16.11.2025 அன்று முற்பகல் 9.00 மணிக்கும் பிற்பகல் 2.00 மணிக்கு முன்னரே தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும். உரிய நேரமான முற்பகல் 09.00 மணிக்கும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் வருகை தரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன். கால்குலேட்டர், Smart Watch, தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


