தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி பற்றிய ஓருவார கால உள்வளாகப் பயிற்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் மூலம், நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது நவ.13 முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவானது தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 8 விசைப்படகு மீனவர்கள் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டனர். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ச.மாரியப்பன் வரவேற்புரை வழங்கினர்.
மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் த.ரவிக்குமார் பயிற்சி குறித்து விளக்கவுரையாற்றினார். மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் (பொ), கோ.அருள்ஒளி, தலைமையேற்றார். அவர் தம் தலைமையுரையில் மீனவர்கள் மீன்பிடிப்புத் தொழிலில் உள்ள கணிணி சார் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு தகவல் தொடர்பு அணுகல் திறனை வளர்த்துக் கொண்டு மீன்பிடித் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவ்விழாவில் தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழகத்தின் முதல்வர், கேப்டன் ஜே. மோகன் குமார், மற்றும் மரியவிவின், மீன்வள ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை சின்னமுட்டம், கன்னியாகுமரி வாழ்த்துரை வழங்கினர். உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரபாகர், நன்றியுரை ஆற்றினார்.


