
முத்துக்கிருஷ்ணன் நூலகரிடம் கேட்டாள் கலா ராணி, “அய்யா நான் தேரிக்காட்டுக்கு களப்பணிக்கு சென்றால் என்கூட நீங்க வருவீயளா?”
சிரித்தார் முத்துக்கிருஷ்ணன்.
“கண்டிப்பாக வருகிறேன் அம்மா, நாளைக்கு காலையில் செல்வோம்” என்றார்.
ராணிக்கு சந்தோசமாக இருந்தது. மிகப்பெரிய உதவி கிடைத்தது போல தெரிந்தது.
“சரி” என்று கூறிவிட்டு கலாராணி கிராமத்துக்கு சென்றாள். சாப்பிட்டு விட்டு படுத்தாள். அவளுக்கு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவே வந்தது.
அவளுக்கு தூக்கம் வ்ரவில்லை. அவள் கையில் இருந்த நூலை புரட்டினாள்.
தவசிமுத்து மாறன் அய்யா முனைவர் பட்ட ஆய்வாளர். ஆறுமுகநேரியை சேர்ந்தவர். இவரது தந்தை தங்கவேல் நாடார் சுதந்திரப்பேராட்ட தியாகி. அய்யா கொடுத்த தகவல் ஆறுமுகநேரியிலேயே சுமார் 23 க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அறிய முடிந்தது. அவரின் நூலில் பல்வேறு தகவல்கள் இருந்தது. திருச்செந்தூரில் தியாகிகளுக்கென நினைவு சின்னம் . குலசேகரபட்டணம் லோன் துரை கொலை வழக்கு, குரும்பூர் ரயில் நிலைய போராட்டம், மெஞ்ஞானபுரம் தபால் அலுவலகம் எரிப்பு போர், சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் சூறையாடல், குரங்கணி மரம் வெட்டும் வழக்கு எனச் சுதந்திரப் பேராட்டம் குறித்த பல்வேறு தகவல்கள் விரிந்து கொண்டே போனது. தவசி முத்து மாறன் அய்யா எழுத்தாளர், ஆகவே இதுகுறித்து சிறப்பாக எழுதியிருந்தார்.
நாம் யோசனைசெய்து பார்த்தாள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் நூல் அனைவரின் நூலையும் மூல நூலாக கொண்டு எழுதப்பட்டது. அதில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசு திருச்செந்தூர் ஜெயந்திநாதன், ஆலந்தலை அசோகன் மற்றும் குலசேகரபட்டினம் சிவகுருநாதன் ஆகியோர் உதவி யுடன் பல்வேறு தகவலை குறிப்பிட்டு இருந்தார்கள்.
உடன்குடி சமூக சேவகர் குலசேகரன் மூலமாக எழுத்தாளர் பெருமாள் எழுதிய உடன்குடி சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற நூல் ராணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தியாக சோமயாஜுலு அய்யா எழுதிய நூல், முனைவர் கணபதி ராமன் அய்யா, முனைவர் சிவசுப்பரமணியன் அய்யா, ஆய்வாளர் திவான் அய்யா , முனைவர் போஸ் எழுதிய “பொருநைக்கரை மைந்தர்கள்” உள்பட பல எழுத்தாளர்கள் எழுதிய பல நூல்கள் தொகுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் நூலை தூத்துக்குடி மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டு இருந்தது.
அந்த நூலை புரட்டி புரட்டி பார்த்தபோது பலருடைய பெயர் குறிப்பிடப்பட்டது. அதில் ஒருவரை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டாள் கலாராணி.
அதன் பின் அருகிலேயே அந்த புத்தகத்தினை வைத்து தூங்கி விட்டாள். காலையில் அம்மா சத்தம் கேட்டு எழுந்தாள் காலாராணி.
என்ன ராணி காலையிலேயே தூத்துக்குடி போகணுமுன்னு சொன்னீயே எழுந்திரு என்றார் அம்மா.
ஆகா நேற்று இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருந்து இருக்கிறோம். அதனால் தான் காலை எழுந்திருக்க முடியவில்லை.
எழுந்தாள்.
10 நிமிடங்களில் கிளம்பினாள்.
அம்மா காலை டிபனாக இட்லி கொண்டு வைத்தார். அதை கூட சாப்பிட முடியாமல் வேகமாக கிளம்பினாள்.
அப்பா மோட்டார் பைக்கில் பக்கத்தில் உள்ள நகரத்தில் கொண்டு விட , அங்கே தூத்துக்குடி செல்ல பேருந்து தயாரான நிலையில் நின்றது.
அதில் ஏறி அமர்ந்தாள். அப்பா ராணிக்கு கையசைத்து வழி அனுப்பி வைத்தார். பஸ் கிளம்பியது. ராணிக்கோ சுதந்திரபோராட்ட தியாகிகள் தான் நினைவுக்கு வந்தார்கள். அதை நினைத்துக்கொண்டே இருந்தாள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்புச்சத்தியாகிரகம் -(1930), அகில இந்திய சத்யாகிரகம் (31.11.1931), வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி முனைவர் தவசி முத்து மாறன் தனது நூலில் சிறப்பாக எழுதியுள்ளார். அவர் நூலில் ஒவ்வொரு போராட்டத்திலும் திருச்செந்தூரில் யார் யார் கலந்து கொண்டார்கள் என கூட பட்டியலிட்டுள்ளார்.
அகில இந்திய சத்தியாகிரகம் – 31.11.1931 ல் நடந்த போது, சட்ட மறுப்பு, ஒத்துழையாமை இயக்கம், அந்நிய நாட்டுத் துணிகளும் ஆடைகளும் புறக்கணிக்கப்பட்டு வீதிகளில் போட்டு எரிக்கப்பட்டன. அந்நியர் கடைகளில் பொருட்களை வாங்குவதையும், விற்பதையும் நிறுத்திக் கொண்டனர்.
இந்த சத்தியாகிரகம் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் மக்களால் மேற்கோள்ளப்பட்டது. ஆங்கிலேயர் அரசாங்கம் நெருக்கடி நிலையை அறிவித்தது. இந்தியர்களை ஒடுக்கும் அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் – 1942 ல் நடந்தது. 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடியது தலைவர்கள் ஒன்றாக கூடி ஆங்கிலேயரை இந்திய நாட்டை விட்டு வெளியேறச் சொல்வது என்று முடிவெடுத்து வெள்ளையனே வெளியேறு என்று காந்திஜி முழக்கமிட்டார்.
செய் அல்லது செத்துமடி என்றும் ஆங்கிலேயரை வெளியேற்று என்றும் உறுதிபடக் கூறிய காந்திஜியின் அறைகூவல் நாடெங்கும் பரவியது. தேசபக்தர்கள் கொதித் தெழுந்தனர். மறுநாள் காந்திஜியும் ஏனைய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் போராட்டங்கள் மலர்ந்தன. அகிம்சை முறையும், தீவிரவாத முறையும் களத்தில் இயல்பாக உருவாயின. ஆங்கிலேயரின் போலீசு. கூட்டங்கள் நடத்துவதற்கும், மக்கள் கூடுவதற்கும் தடைவிதித்தது.
அடக்குமுறை போர்க்களமானது. விடுதலைப் போராட்ட வீரர்கள், அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என எவரையும் விடாமல் தாக்குதல் நடத்தப் பட்டது. மண்டை உடைந்தவர்களும், காயம் ஏற்பட்டவர்களும், கை, கால் முறிந்தவர்களும் கணக்கிலடங்காது. துப்பாக்கியால் குருவியைச் சுடுவது போல மனித உயிர்கள் சுட்டுப் பொசுக்கப்பட்டன.
இந்த மண்ணில் விடுதலைக்காக இரத்தம் ஆறாக ஓடியது. தொப்புள் கொடி தாமிரபரணி உறவான அப்போதைய திருநெல்வேலி ஜில்லா தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட வீர இளைஞர்கள் தேச பக்தர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். செக்கிழுத்தும், கல் உடைத்தும் சுதேசி இயக்கத்திற்கு வலு சேர்த்த வ.உ.சிதம்பரனார் ஏற்றிவைத்த விடுதலை வேள்வி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
1942 செப்டம்பர் 12 இல் தூத்துக்குடியில் இரண்டு கள்ளுக்கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. கள்ளுக்கடை காவலரும். அவரது மனைவியும் தீயில் சிக்கி இறந்தனர். மில் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபட்டு எழுச்சியை ஏற்படுத்தினார்கள். திருச்செந்தூர் தாலுகா பூச்சிக்காடு கிராமத்திலும் கள்ளுக்கடை, விடுதலைப் போராட்ட இளைஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
1942 செப்டம்பர் 29 இல் அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்த புறப்பட்டது இளைஞர் படை. ஏரல் அருகே உள்ள குரங்கணி, மாவடிப்பண்ணை, மஞ்சிவிளை, பூச்சிக்காடு பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான மரங்களை வெட்டிச் சாய்த்தனர். இந்த செயல் மூலமாக ஆங்கிலேயரின் அரசாங்கத்தைச் சாய்ப்பது என வீரர்கள் கருதினர்.
1942 ஆகஸ்ட் 15, 16 இல் திருச்செந்தூரிலும், 25 ஆம் தேதி எட்டையாபுரத்திலும், நாசரேத்திலும், 26 ஆம் தேதி ஆறுமுகநேரி, நல்லூர் ஊர்வழியாகச் சென்ற தந்திக் கம்பிகள் வெட்டி எறியப்பட்டன. தகவல் தொடர்புகளை முடக்கி அரசாங்கத்தை இயங்க விடாமல் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கிராமங்கள் தாக்குதல் களுக்கு உள்ளானது. தடியடி. வீட்டுப் பொருட் களைச் சேதப்படுத்தினர்.
திருச்செந்தூர் தாலுகாவில் மிகக் கடுமையான போராட்டம் நடந்தது.
உப்பு உற்பத்தியில் தலை சிறந்து விளங்கும் ஆறுமுகனேரி அருகே கீரனூரில் உப்புத் சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது. பலர் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். ஆறுமுகநேரியை சேர்ந்த அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிக்கு இவையெல்லாம் நினைவுக்கு வந்தது. நேற்று இரவு படித்த வரலாற்று நூல்கள் அவர் நினைவுக்கு வந்து சென்றது.
இதற்குள் அவள் பயணம் செய்த பேருந்து தூத்துக்குடி பஸ் நிலையத்தினை அடைந்தது. அடுத்தக் கட்டமாக இறங்கி திருச்செந்தூர் பேருந்து ஏற வேண்டும். நூ-லகர் முத்துகிருஷ்ணன் அவர்களும் சரியாக பஸ் நிலையத்துக்கு வந்து விட்டார். இருவரும் திருச்செந்தூர் நோக்கி பயணம் செய்தார்கள். யாரை சந்திக்கலாம். இருவரும் ஆலோசனை செய்தார்கள்.
புத்தகத்திலேயே பலரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அவர்கள் பெயரை தேடுவோம். முதலில் தேரிக்காட்டுக்கு விடுதலை போராட்டத்துக்கு உள்ள சம்பந்தத்தினை கண்டு பிடிக்க வேண்டும். அதன் பிறகு லோன் துரை கொலை வழக்கு, குலசேகரபட்டினத்தில் நடந்த இடத்துக்கு செல்ல வேண்டும். அதைப்பற்றி அங்கே தகவலை சேகரிக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்தனர்.
முத்துக் கிருஷ்ணன் கூறினார், “ராணி முதலில் நான் திருச்செந்தூரில் போய் இறங்குவோம். அங்கே நாதன் கிணற்றை சேர்ந்த அய்யா என்.ஏ. ராஜகண்ணன் இருக்கிறார். அவர் சுதந்திரப்போராட்ட தியாகி குடும்பத்தினை சேர்ந்தவர். அவரிடம் விசாரித்தால் தேரிக்காட்டுக்கு சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு உள்ள சம்பந்தத்தினை அறிந்து கொள்ளலாம்”. என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் வரலாறு நூலில் என்.ஏ. ராஜகண்ணன் அண்ணாச்சியை பற்றி எழுதியிருக்கிறது. எனவே அவரை காண வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர் வந்து இறங்கினார்கள்.
இவர்கள் எதிர்பார்த்த மாதிரியே திருச்செந்தூரில் ஒரு அலுவலகத்தில் வைத்து ராஜகண்ணன்னை சந்தித்தார்கள்.
உயரமான தோற்றம். பார்த்தோரை கவரும் தோற்றம். மற்றவர்கள் இவரிடம் எளிமையாக சென்று பேசலாம். இருவரையும் வரவேற்று, இருவருக்கு தேனீர் வரவழைத்து விட்டு பேச ஆரம்பித்தார் ராஜ கண்ணன்.
மிக அதிகமான சுதந்திர போராட்ட வீரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கள் பஞ்சாயத்தை சேர்ந்த செங்குழி, நாதன்கிணறு, பூச்சிகாடு பகுதி வீரர்கள் இருந்தனர் என கூறிவிட்டு நிறைய பேச ஆரம்பித்தார்.
“எங்கள் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளிப்பத்து பகுதியைச் சேர்ந்த நாதன்கிணறு ஆகும். இதன் அருகே பூச்சிக்காடு, செங்குழி என்ற இரண்டு குக்கிராமங்கள் உள்ளன. இந்த மூன்று கிராமங்களும் குதிரைமொழி தேரி பகுதியில் உள்ளதால் இந்த தேரி பகுதியில் சுதந்திர போராட்ட வீரர்கள் வந்து செல்லும் கிராமமாக எங்கள¢ ஊர¢ இருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உணவு கொடுக்கும் பகுதியாக எங்கள் கிராமங்கள் அமைந்து இருந்தன. எனது தாத்தா நாராயண நாடார் பரம்பரை கிராம முன்சீப்பாக பணியாற்றியவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 100க்கணக்கானவர்கள் பாரத் மாதாகி ஜே. வந்தேமாதரம் என்ற கோஷத்துடன் மாலை நேரத்தில் ஊர்வலமாக எங்கள் ஊர் வழியாக செல்வது வழக்கமாக இருந்தது”.
அவர் சுதந்திரப்போராட்ட வீரர்களை பற்றி பேசும் போதே அவர் மனதில் கௌரவம் வந்தது. இந்த நாட்டை காக்க பாடுபட்டவர்கள் என சிலர் பெயர்களை நமது நாட்டில் முன்னிலை படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி இதோ அறியப்படாத தியாகிகள் நிறைய பேர் உள்ளார்கள். அதைப்பற்றி அவர் தொடர ஆரம்பித்தார்.
ராணிக்கு சந்தோசமாக இருந்தது சரியான இடத்தில் சரியாக வந்து அமர்ந்திருக்கிறோம். நமக்கு நிறைய தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.
“1942ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் “செய் அல்லது செத்துமடி” என்ற மகாத்மா காந்தியின் கோஷம் இவர்களை உத்வேகப் படுத்தியது. இப்பகுதி இளைஞர்களுக்கு உற்சாகமாக இருந்தது. அந்த உற்சாகத்தின் காரணமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், எங்கள் ஊரில் உணவு வழங்குபவர்களும் சுதந்திர போராட்டத்தில் வீறுகொண்டு எழுந்தனர். அந்த சமயத்தில் கிராம முன்சீப் நாராயண நாடார் தலைமையில் கள்ளுக்கடை மறியல், கள்ளுக்கடை தீ வைத்து எரித்தல் போன்ற போராட்டம் நடந்தது. தொடர்ந்து கள்ளு குடித்து விட்டு கிராமத்திற்குள் வருபவர்களை மொட்டை அடித்து “க” என எழுதி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி ஊர்களில் ஊர்வலமாக வர வைப்பார்கள். இதனால் கள்ளுக்கடை உரிமையாளர் அப்பாத்துரை நாடார் போலீசில் புகார் அளித்தார். இதற்கு காரணமானவர்களை கைது செய்தனர் போலீஸ். இந்த ஊரில் கள்ளுக்கடை மறியலில் இரண்டு மூன்றுபேர் போலீசாருக்கு சாதகமாக இருந்தார்கள். அதில் ஒருவர் ஜெபமணி நாடார். அவருடன் இன்னும் ரெண்டு பேர் இருந்தார்கள். இவர்களின் ரகசிய கூட்டம் தேரிக்காடு பகுதியில் அருஞ்சுணை காத்த அய்யனார் கோவிலில் நள்ளிரவில் நடக்கும்.
அந்த மாதிரி கூட்டம் நடக்கும்போது, கிராம முனுசீப் நாராயண நாடாருக்கு ஆதரவாக சிலர் திரண்டனர். கள்ளுக்கடை மறியலில் போலீசுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வேண்டும் என்ற நபர்களை இரவு 2 மணிக்கு மேல் அவர்கள் வீட்டில் தட்டி எழுப்பி சாட்சி சொல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர். அதையும் மீறி ஜெபமணி நாடார் நீதிமன்றத்திற்கு செல்கிறார். ஊரே அவருக்கு எதிராக திரண்டு மிரட்டல் விட்டுள்ளனர். இதனால் பயந்து போன அவர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊருக்கு கட்டுப்பட்டு திரும்பி வந்து விடுகிறார். அந்த அளவுக்கு ஊர் முழுக்க சுதந்திர போரட்டத்துக்கு ஆதரவாக இருந்தனர் இவ்வூர் மக்கள்.
லோன்துரை கொலை வழக்கில் இந்த மூன்று ஊர்களைச் சேர்ந்தவர்களை ஊருக்குள் புகுந்து அடாவடியாக கைது செய்கிறார்கள் ஆங்கியேல போலீசார். அதோடு மட்டுமல்லாமல் அவர்களை கொடுமையாக நடத்துகிறார்கள். அந்த சமயத்தில் இந்த மூன்று ஊர்களிலும் அனைவரின் வீடுகளிலும் கருப்பட்டி இருக்கும். எதிரிகளை கருப்பட்டை கொண்டு குறி பார்த்து எறிந்து தாக்குவார்கள். அனைத்து பகுதிகளிலும் ஓலைக்குடிசைகள் தான் அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஆங்கிலேய ஆதரவாளர்கள் அதையெல்லாம் பிரித்து எரிந்தார்கள். பனைநார் கட்டிலை கிழித்து எரிந்து நாசம் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஆள் ஒளிவது போல் உள்ள மண்பாண்ட குலுக்கை எனும் நெல் சேகரிக்கும் பானை இருந்தது. அந்த குலுக்கையை உடைத்து எரிந்தனர். அதனுள் இருந்த நெல்மணிகளை வீதியில் வீசி துவேசம் செய்தனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதனால் மிகவும் சின்னாப்பின்னமாக்கப்பட்ட ஊர் நாதன்கிணறு”. ராஜகண்ணன் அய்யா கூறும்போதே அந்த காலத்தில் அங்கே சுதந்திர போராட்டம் எப்படி கொழுந்து விட்டு எரிந்து இருக்கும் என்பது தெரியவந்தது. அய்யா தொடர்ந்து வரலாற்றை கூற ஆரம்பித்தார்.
“குரும்பூர் ரயில் நிலையம் போராட்ட காரர்களால் தாக்கப்படுகிறது. அந்த நேரத்தில் சர்க்கார் காடுகளை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அழிக்கிறார்கள். அதற்கு யார் மேல் குற்றம் சுமத்த வேண்டும் என்று தெரியாமல் போலீஸ் திணறியது. நாலுமாவடி, அங்கமங்கலம், புறையூர், ஆறுமுகநேரி, பூச்சிக்காடு, நாதன்கிணறு, செங்குழி, குரங்கணி ஆகிய எட்டு ஊர்களை சேர்த்து ஒட்டு மொத்தமாக 14 ஆயிரத்து 500 ரூபாய் அபராத தொகை வசூலிக்கிறார்கள். இந்த தொகையை ஊர் ஒட்டு மொத்தமாக கட்டாயப்படுத்தி வசூலிக்கிறார்கள். இந்த தொகை சுதந்திரத்திற்கு பின்னர் திருப்பி கொடுக்கப்படுகிறது. இந்த செய்தி மிகவும் முக்கிய மானதாகும்”.
என்ற தகவலை கூறிவிட்டு பெரும் மூச்சி விட்டார். அதற்குள் டீ வந்தது. இருவரையும் டீ குடிக்க சொன்னார்.
ராணிக்கு டீ குடிக்க மனமில்லை. ஆனாலும் பெரியவர் வருத்தப்பட்டு விடக்கூடாது என்று டீ குடித்தாள்.
இருவரும் டீ குடிக்கட்டும் என சிறிது நேரம் அமைதியாக இருந்தார் ராஜகண்ணன்.
சுதந்திர போராட்டம் குறித்து பேசினாலே அவர் அதன் மீது ரொம்ப ஈடுபாடாக மாறி விடுகிறார். காரணம், சிறு வயதிலேயே இதைப்பற்றி வீட்டில் உள்ளவர்கள் பேச கேட்டு இருக்கிறார்.
டீ குடித்து முடித்தார்கள். தொடர்ந்து பேச ஆரம்பித்தார் ராஜ கண்ணப்பன்.
“லோன்துரை கொலை சம்பவத்தில் மங்களா பொன்னம்பலம் கைதாகி சிறையில் இருக்கிறார். மேலும் கொலை வழக்கில் முக்கியமாக இருந்தவர்கள் அதிகமானோரை சிறைக்கு அனுப்பி உள்ளனர். இதில் கிராம முன்சீப்பும் அனுப்பப்படுகிறார். இதில் மூன்று பேர் அரசு பணியில் இருந்தவர்கள். காயல்பட்டிணத்தில் கர்ணமாக இருந்தவரும் இதில் அடங்குவார்.
மங்களா பொன்னம்பலம் சிறையில் இருந்த நேரத்தில் மலம் ஜலம் கழிப்பதற்காக ஒரு டிரம் இருந்திருக்கிறது. அந்த டிரம் மேல் ஒரு கட்டை போடப்பட்டிருக்கும். அதன் மேல் இருந்துதான் மலம் ஜலம் கழிக்க வேண்டும். இவர் ஒரு நாள் மலம் கழிக்கும் போது டிரம் உள்ளே விழுந்து விடுகிறார். இவர் உடல் முழுவதும் மலமாகி விட்டது. அந்த நாற்றத்தோடு, மலத்தை கழுவ வேண்டும் என தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால் போலீசார் கொடுக்க மறுத்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் அவர் மல நாத்தத்துடன் இருந்துள்ளார். அந்த மாதிரியான கொடுமைகள் பல ஆங்கிலேய அரசால் இப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது”.
அவர் சொல்வதை கேள்விப்பட்டவுடனே அதிர்ந்து விட்டாள் ராணி. இப்படியெல்லாம் சம்பவம் நடந்து இருக்கிறதே. என்ன கொடுமை. இன்று சுதந்திரம் அடைந்து விட்டோம். கிட்டத்தட்ட 75 வருடத்தில் அவர்கள் பட்ட பாடுகளையெல்லாம் மறந்து விட்டோம். ஆனால் இந்த சுதந்திரம் அடைய எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
நூலகர் தொடர்ந்தார். “இந்த இடத்தில் நான் மங்களா பொன்னம்பலம் பற்றி கூறலாம் என நினைக்கிறேன்” என்றார்.
“சரி சொல்லுங்கள்” என்று ராஜ கண்ணப்பன் அவருக்கு இடம் விட்டார்.
நூலகர் முத்துக்கிருஷ்ணன் தியாகி மங்களா பொன்னம்பலம் குறித்து பேச ஆரம்பித்தார்.
“படுக்கப்பத்தைச் சார்ந்த கந்தசாமி நாடாருக்கும் பாலம்மை அம்மையாருக்கும் மூத்த மகனாகப் பிறந்தவர் தியாகி மங்களா பொன்னம்பலம் ஆவார். இவர் ஆரம்பக் சுல்வியை மெஞ்ஞானபுரம் அம்ரோஸ் பள்ளியில் படித்தார் இவருக்கு பத்து வயது ஆகும்போது இவரது தந்தை இறந்து விட்டார். தந்தை இறந்ததால் குடும்பப் பொறுப்பை கவனிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தும் 10ம் வகுப்பு வரை படித்து முடித்தார்.
பள்ளியில் படிக்கும் போதே பத்திரிகைகள் வாயிலாக விடுதலையின் அவசியத்தை உணர்ந்து கொண்டதால் உடன்குடி மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொண்டார். இந்நிலையில் தன் 19ஆம் வயதில் சீர்காட்சியைச் சார்ந்த பூங்கனியம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவருக்கு மங்களா சற்குணம் என்ற மகன் பிறந்தார். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
அதற்குப் பின்னால் பிறந்த குழந்தைகளுக்குத் தேசியத் தலைவர்களின் பெயரான மங்களா காந்தி, மங்களா வினோபா. விஜயலெட்சுமி கமலா என்ற பெயர்களைச் சூட்டினார்.
தியாகி மங்களா பொன்னம்பலம் இறந்துவிட்டார். இவருடைய மகன் மங்களா வினோபா ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். அவர் தந்தையை பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதை நான் படித்து இருக்கிறேன்”.
அவரின் மகள் அய்யாவை பற்றி என்ன கூறியிருக்கிறார். ராணியின் ஆர்வம் அதிகமானது.
மகள் கூறியதை நூலகர் முத்துக்கிருஷ்ணன் பேச ஆரம்பித்தார்.
“அவருடைய தந்தை மங்களா பொன்னம்பலம், காந்தியடிகள் நடத்திய தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது போலீஸார் உடன்குடியில் மங்களா பொன்னம்பலத்தினை கைது செய்துள்ளனர். ரூபாய் 50 செலுத்தி வெளியில் வந்துள்ளார். மேலும் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டை ராஜினாமா செய்யச்சொல்லி நடைபெற்ற போராட்டத்தை அவரது தந்தை மங்களாபொன்னம்பலம் நடத்தியதால் அவர் மீது பாதுகாப்புச் சட்டம் 34(6)ஙி, 38(5)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகளும் 38(1) சட்டப்படி மற்றோரு வழக்கும் என் தந்தை மீது தொடர்ந்துள்ளனர்.
இதைப் போலவே மூக்குப்பேறி தந்திக் கம்பி வெட்டு வழக்கு, குரும்பூர் ரெயில் நிலையம் தீ கொளுத்திய வழக்கு, மெஞ்ஞானபுரம் போஸ்ட் ஆபிஸை தாக்கிய வழக்கு ஆகியவை உட்பட இவர் தந்தை மீது பல வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக மங்களா பொன்னம்பலத்தினை 1942 செப்டம்பரில் கைது செய்து திருச்செந்தூர் சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின்னர் 17.-10-.1942& இல் தூத்துக்குடி மாஜிஸ்திரேட் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளார்.
அதன் பின்னர் மங்களா பொன்னம்பலம் பல சிறைகளில் துன்பங்களை அனுபவித்துள்ளார். அப்போது தான் இந்த மல டிரம்முக்குள் விழுந்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. 3 ஆண்டுகள் கழித்து விடுதலையான போது சிறை வாசலில் வைத்தே இவரை பாதுகாப்புக் கைதியாக கைது செய்துள்ளனர். பின்னர் பொது விடுதலையின்போது மங்களா பொன்னம்பலம் வெளியில் வந்துள்ளார். ஆனாலும் இவர் போராட்டத்துக்கு பிற்காலத்தில் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்திய விடுதலைக்குப்பின்னர் சாத்தான்குளம் யூனியன் சேர்மனாக ஓர் ஆண்டு காலமும், படுக்கப்பத்து பஞ்சாயத்துத் தலைவராக 10ஆண்டு காலமும் மங்களா பொன்னம்பலம் பணியாற்றியுள்ளார். சோஸலிஸ்ட், சமுதாய நலன் என்ற இரண்டு பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
படுக்கப்பத்து கிராமத்தில் இவரது முயற்சியால் அரசு ஆரம்பப் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. சாலைகள் விரிவாக்கப்பட்டன. தபால், தந்தி, தொலைபேசி நிலையங்கள் சீரமைக்கப்பட்டன. துணைமின்பொறியாளர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் நிறுவப்பட்டன. அரசு மருத்துமனையும் மத்திய நூலகமும்(கிளை) கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர் மங்களா பொன்னம்பலம் திருநெல்வேலியில் குடியேறினார். திருநெல்வேலியில் துப்புரவு தொழிலாளர்களை ஒருங்கிணைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தை நிறுவி அவர்களுக்கும் பேருதவி ஆற்றியுள்ளார்”. என்று பேராசிரியர் வினோபா மங்களா அவர்கள் தனது தந்தை பற்றி கூறியதை நூலகர் முத்துக்கிருஷ்ணன் கூறினார்.
ராஜகண்ணன் இதையெல்லாம் அமோதித்தார். அதோடு மட்டுமல்லாமல் மேலும் திருச்செந்தூர் பகுதியில் நடந்த பல போராட்டம் குறித்து அவர் ராணியிடம் பேசினார்.
“ஆறுமுகநேரியில் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேரை உப்பு மேல் முழங்கால் போட வைத்து தண்டனை கொடுத்துள்ளனர். காலை 8 மணி முதல் முழங்கால் போட்டு ரத்தம் சொட்ட சொட்ட சுதந்திரபோராட்ட வீரர்கள் பல துயரை அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் சிறைச்சாலையில் உடலுக்கு பின்னால் கையையும், காலையும் கட்டி படுக்க வைத்து விட்டு, புறங்கையில் செங்கலை கட்டி வைத்து மிக கொடுமை செய்துள்ளனர். நகக்கண்ணில் ஊசியை குத்தி கொடுமை படுத்தியுள்ளனர். இதை பார்த்த இளைஞர்கள் தாலுகா அலுவலகத்தில் புகுந்து காவலர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்களையும் கைது செய்து மிகக் கொடூரமான தண்டனைக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் திருச்செந்தூர் தாலுகா இளைஞர்களின் பங்கு மிகவும் பாராட்டப்படவேண்டியது”.
“பள்ளிப் பத்து பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாதன்கிணறு, செங்குழி, பூச்சிகாடு பகுதியில் மட்டும் சிறை சென்றவர்களாக 41 பேர் இருந்துள்ளனர். நான் இதுவரை 50க்கும் மேற்பட்ட தியாகிகளை நேரில் பார்த்துள்ளேன்”. என்று சந்தோசப்பட்டார் ராஜ கண்ணன்.
“எம்.எஸ்.செல்வராஜ், மேகநாதன், காயாமொழி ஆறுமுகப்பாண்டியன், உடன்குடி பூவலிங்கம், உள்பட எங்கள் ஊர் தியாகிகளுடன் பழகியுள்ளேன். அவர்களோடு பழகிய காலம் பொற்காலம். என்னுடைய தாயார் விஜயா. எங்கப்பாவுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார். அது மட்டுமில்லாமல் சுதந்திர போராட்ட தியாகிகளை மதித்துள்ளார். அம்மாவுக்கு இப்போது வயது 85. இப்போதும் தியாகிகள் வாரிசுகள் வந்தால் அவர்களை ஆதரவோடு பேசுவார். எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் தியாகி, எனது தாயாரை பொறுத்தவரை கிராமத்தில் சுதந்திரபோராட்டம் நடந்த போது தியாகிகள் தப்பி வந்தால் அவர்களுக்கு வயிறு நிறைய சோறு போட்டுத்தான் அனுப்புவார். தினமும் இரவு எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு தேவையான சாப்பாடு செய்து வைத்து இருப்பார்கள். அதே போல எங்கள் வீட்டில் அன்றில் இருந்து இன்று வரை இரவு கூடுதலாக 5 பேர் சாப்பிடுவதற்கு உணவு எப்போதும் தயாராக வைத்து இருப்போம். நான் கடந்த வருடம் (2021) எங்கள் கிராமத்தில் சுதந்திர விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்டத்தில் எங்கள் பகுதியில் பங்கேற்ற தியாகிகள் புகைப்படத்தை வைத்து திருச்செந்தூரில் விழா நடத்தினேன். முதலில் இந்த தியாகிகள் குறித்து கிராம மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடுகளை செய்தேன்”.
என்று கூறினார்.
நூலகர் முத்துக்கிருஷ்ணன் கூறினார். “ராணி, இதோ இருக்கிறாரே ராஜகண்ணன். இவரது தாயாரை பற்றி கூறினார். தந்தை ஆறுமுகப்பாண்டியன் மிகப்பெரிய தியாகி அவரை பற்றி நான் சொல்லுகிறேன் கேள்” என்றார்.
ராணிக்கு மிக்க சந்தோசம். நிறைய தகவல்கள் நம்மை தேடி வருகிறது. தகவலை தான் கொண்டு வந்த நோட்டில் எழுதி கொண்டும், பேசுபவர் குரலை¬ போனில் பதிவு செய்து கொண்டும் ஆர்வத்தோடு கேட்டாள்.
நாதன்கிணறு நாராயணன் நாடாரின் மூன்றாவது மகன் நான் ஆறுமுகபாண்டியன். இவருக்கு சிதம்பரபாண்டியன் என்ற அண்ணனும் கனியம்மாள் என்ற அக்காவும் சவுந்திரபாண்டியன், பால்ராஜ், மகாராஜன் என்ற தம்பிகளும் உள்ளனர். இவர் குடும்பத்தினர் பரம்பரை, பரம்பரையாக கிராம முன்சீப் வேலை செய்து வந்தனர். அந்தக் காலத்தில் நாளிதழ்கள் எதுவும் கிராமங்களுக்கு வருவதில்லை. ஆனால் இந்திய விடுதலைக்கு ஆதரவாகப் பல கட்டுரைகளை எழுதி வந்த ஆனந்த விகடன் வார இதழ் இவர்கள் வீட்டிற்கு வந்து விடும். அதன் மூலம் இவர்கள் குடும்பமே விடுதலை போராட்ட வீரர்களாக மாறும் நிலை எழுந்தது. இவர் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே ஆனந்த விகடன் படித்தார். அதன் மூலம் இவருக்கும் இந்திய விடுதலைக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
இந்நிலையில் படுக்கப்பத்து மேகநாதன் அவர்களின் தூண்டுதலால் , நாதன்கிணறு ஊரைச்சார்ந்த கருத்தபார்வதி நாடார், தங்க நாடார், மகாராஜ நாடார், சண்முகசுந்தர நாடார், நடேச நாடார், தங்கவேல் நாடார், பூச்சிக்காட்டைச் சார்ந்த பால்நாடார், ஆறுமுக நயினார் நாடார், நாராயண நாடார், தங்கவேல் நாடார், சங்கர நாடார், சாமி நாடார், கந்தசாமி நாடார், பொன்சாமி நாடார், சண்முக நாடார், செல்லத்துரை நாடார், ஆறுமுகசாமி நாடார், சுந்தரலிங்கத்தேவர் செங்குளியைச் சார்ந்த ரெத்தினகுருசாமி நாடார், பெரியசாமி நாடார், தங்கபாண்டியன் நாடார் மற்றும் நாதன் கிணறு பகுதியைச் சார்ந்த பலர் பூச்சிக்காட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளை வெட்டியழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர் சிறுவனாக இருந்த போதிலும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். தகவல் அறிந்த போலீஸார் தீவிரமாகத் தேடி இவர்களை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். நீதிபதி இவர்களுக்குத் தலா ரூ.30 அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினர். பணத்தைக் கட்டிவிட்டு அனைவரும் விடுதலையானார்கள்.
இந்நிலையில் காந்தியடிகள் “கள் குடிப்பதால் நம் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. எனவே கள் குடிப்பவர்களிடம் சென்று கள் குடிக்காதீர்கள் என அறிவுரை கூறுங்கள்” என்ற ஆணையைப் பிறப்பித்திருந்தார். இது குறித்து நாதன்கிணறு ஊரிலும் விவாதம் நடந்தது. அப்போது பல பெரியவர்கள் கள் குடிப்பவர்களிடம் சென்று ‘கள் குடிக்காதே’ எனக் கூறினால் நம்முடைய வார்த்தையை யாரும் கேட்க மாட்டார்கள். எனவே ‘கள்’ குடித்து விட்டு யாரும் ஊருக்குள் வரக்கூடாது என கட்டுபாடு வைப்போம். எனக் கூறினார்கள். அதனடிப்படையில் நாதன்கிணறு, பூச்சிக்காடு, செங்குளி ஆகிய மூன்று ஊர்களிலும் ‘கள்’ குடித்துவிட்டு ஊருக்குள் வரக்கூடாது” எனத் தண்டோரா போடப்பட்டது.
தண்டோராவையும் மீறி சிலர் ‘கள்’ குடித்துவிட்டு ஊருக்குள் வந்தனர். எனவே ‘கள்’ குடித்துவிட்டு ஊருக்கு வந்தால் மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையின் மேல் ஏற்றி ஊரை வலம் விடுவோம் என இரண்டாவது முறையாகத் தண்டோரா போடப்பட்டது. அதையும் மீறி சிலர் ‘கள்’ குடித்துவிட்டு ஊருக்குள் வந்தனர் எனவே நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து ‘கள்’ குடித்துவிட்டு வந்தவர்களைப் பிடித்து வைத்து விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்ட சிவலிங்கபண்டிதர் என்ற நாவிதர் மூலம் தலையில் “க” என்று தெரியுமாறு முடியை வைத்துவிட்டு மீதி முடியை எல்லாம் வழித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையின் மேல் ஏற்றி ஊரை வலம் வந்தனர் சிறுவனாக இருந்த ஆறுமுகபாண்டியன் அதில் கலந்து கொண்டார்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னர் பலர் கள்ளுக்கடை பக்கம் செல்வதற்கே அஞ்சினர். இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளுக்கடை உரிமையாளர் ஜெருசலேம் அப்பாத்துரை நாடார் போலீசில் புகார் செய்தார். போலீசார் பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் இவர்கள் வீட்டில் ஆறுமுகபாண்டியன், அவரது தந்தை, அவரது அண்ணன் ஆகிய மூவரும் ஒழிந்து கொள்வார்கள்.
சிலரைக் கழுதைமேல் ஏற்றி ஊர்வலமாக கொண்டுவந்ததை நேரில் பார்த்த சாட்சிகளாக ஆத்திமுத்துநாடார், ஒத்தைவீரன் நாடார், ஜெபமணிநாடார் ஆகிய மூன்று நபர்களை போலீசார் நியமித்திருந்தனர். இந்த மூன்று நபர்களும் சாட்சி சொன்னால் வழக்கு தொடர்ந்தவர்க்கு சாதகமாகிவிடும் என நம்வர்கள் கருதியதால் அவர்களை மிரட்டவேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர்.
சாட்சிகளை மிரட்டுவதற்கு 30-.8.-1942 அன்று வாழவெல்லான் பச்சைப்பெருமாள் நாடார். செங்குளி ரெத்தினகுருசாமி நாடார், ஆலந்தலை பெஞ்சமின் உட்பட சிலர் ஆத்திமுத்து நாடாரைச் சந்தித்து ‘கோர்ட்டுக்குச் சென்று சாட்சி சொல்ல மாட்டேன் என எழுதிக் கொடு” எனக் கேட்டனர். எழுதிக் கொடுக்க மறுத்தால் ஏதாவது விபரீதம் நடக்கப்போகிறது என்பதைப் புரிந்து கொண்ட அவர் “சாட்சி சொல்ல நீதி மன்றம் செல்லமாட்டேன்” என எழுதிக் கொடுத்துவிட்டார்.
அதன் பின்னர் ஒத்தைவீரன் நாடார் வீட்டிற்கு வந்தனர். இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கதவைத்தட்டியும் கதவை திறக்கவில்லை எனவே பச்சைப்பெருமாள் நாடார், ரெத்தினகுருசாமி நாடார் ஆகியோர் ஓட்டைப்பிரித்து உள்ளே சென்று ஒத்தைவீரன் நாடாரை தரதரவென இழுத்துக் கொண்டு வெளியில் வந்து “சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்ல மாட்டேன்” என எழுதி வாங்கினர்.
தகவல் அறிந்ததும் ஜெபமணி நாடார் வீட்டிலிருந்து ஓடி தலைமறைவாகிவிட்டார் எனவே அவரின் வீட்டில் இருந்தவர்களிடம் “சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்தால் தலை இருக்காது” என மிரட்டி விட்டு பச்சைப்பெருமாள் நாடார். பெஞ்சமின் ஆகிய இருவரும் வீட்டிற்கு திரும்பும்போது அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக பூச்சிக்காடு, செங்குளி, நாதன்கிணறு போன்ற ஊர்களிலிருந்து பலர் உடன் சென்றனர்.
தப்பி ஓடிய ஜெபமணி நாடார் கிடைத்தாரா? இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னாரா?. என்ன நடந்தது.
( அறியப்படாத தியாகிகளை நோக்கி பயணம் செய்வோம்)