முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து நெல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு சிவகளை, கொற்கை ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட 2017 பழங்கால பொருட்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றும் நெல்லையில் இந்த ஆண்டு துலுக்கர்பட்டி உள்பட கூடுதல் இடங்களில் அகழாய்வு நடத்தபடும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் பொருநை நாகரிகம் எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையான சிவகளை, கொற்கை,மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார் . அதை தொடர்ந்து நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி இரட்டை மலை பகுதியில் இந்த பொருநை அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர் . இந்த நிலையில் இந்த இடத்தை சபாநாயகர் அப்பாவு , தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான மாதிரி வரைபடத்தை ஆய்வு செய்தனர்.
அதைதொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 15 கோடி ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 13 ஏக்கர் பரப்பளவில் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க இந்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது கொற்கை அகழாய்வில் 812 பொருட்களுப் ஆதிச்சநல்லூரில் 1020 பொருட்கள் சிவகளையில் 185 பொருட்கள் என மொத்தம் 2017 பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 106 முதுமக்கள் தாழிகள், வளையல்கள், பாசி மணிகள் சுடுமண் பொம்மைகள் இரும்பு மற்றும் காப்பாரால் செய்யப்பட்ட பொருட்கள் நாணயங்கள், பானை ஓடுகள் போன்ற பல்வேறு பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. நெல்லையில் வசிக்கும் மக்கள் இங்கு வந்து சென்று சுற்றுலா தளமாக பயன்படுத்தபட கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. மேலும் இங்கே மூலிகை செடிகளும், கலை கலாச்சார பொருட்கள் வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் மாதிரி, குகையில் வாழ்ந்த மனிதர்கள் மாதிரி என நமது கலை கலாச்சாரத்தையும் கட்டிடக்கலையும் பிரதிபலிக்கக்கூடிய பல்வேறு பொருட்களுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கபடும். நெல்லை மாநகரின் முக்கிய அடையாளமாக இது திகழும் தமிழர் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மக்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அருங்காட்சியகம் உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் கனவை நிறைவேற்றும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் .இந்த மலையின் உச்சியில் மாநகரின் மொத்த அழகையும் பார்த்து ரசிக்கும் வகையில் வியூ பாயின்ட் ஒன்றும் அமைக்கப்படும். அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது, தாமிரபரணி நாகரிகத்தில் இந்த ஆண்டு துலுக்கர்பட்டியில் அகழ்வாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கூடுதலாக தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் உரிய அனுமதி வாங்கிய பிறகு அகழ்வாய்வு நடத்தப்படும். ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்படும் இடத்தில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர் எனவே மாநில அரசு சார்பில் அங்கே கூடுதலாக அருங்காட்சியகம் அமைக்க முடியாது அதனால்தான் இங்கு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
முன்னதாக நெல்லை அரசு மருத்துவமனையில் டி.வி.எஸ் குழுமம் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது இதன் செயல்பாட்டை சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் நிமிடத்திற்கு 600 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும், தொடர்ந்து கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


