திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையிலான ரயில்வே வழித்தடத்தை இரட்டைப் பாதையாக மாற்றி, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மாநில பயணிகள் நலச் சங்கத் தலைவர் சாந்தகுமார் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திருச்செந்தூர் திருநெல்வேலி ரயில்வே வழித்தடத்தை இரட்டை வழித்தடம் ஆக மாற்றி கூடுதல் லோக்கல் டிரெயின்கள் இயக்கப்பட வேண்டும். ஒற்றை வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்றினால் மட்டுமே கூடுதல் லோக்கல் ரயில்களை இயக்க முடியும். திருச்செந்தூர் ரயில் நிலையத்தைப் போர்க்கால அடிப்படையில் நவீனப்படுத்த வேண்டும்.
உடன்குடி அனல்மின் நிலையம் மற்றும் குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் தேவைக்கேற்ப தற்போதைய பேருந்து மற்றும் ரயில் வசதிகள் போதுமானதாக இல்லை.
ரயில்களைப் பராமரிப்பதற்கான வசதிகளை அங்கேயே ஏற்படுத்த வேண்டும். ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவதற்குப் போதிய இடவசதி இருந்தும், ரயில்வே துறை பணிகளைத் தாமதப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.
திருநெல்வேலியிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில்களுக்குப் பொருத்தமான இணைப்பு ரயில்களைத் திருச்செந்தூரிலிருந்து இயக்க வேண்டும். திருநெல்வேலியிலிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களைத் திருச்செந்தூரிலிருந்து இயக்கினால் தொழிலாளர்களுக்கும் பக்தர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும்.
புதிதாக அறிவிக்கப்படும் ரயில்கள் அனைத்தும் நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரத்தை மையமாக வைத்தே இயக்கப்படுகின்றன. அங்கு ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், இனி வரும் புதிய ரயில்களைத் திருச்செந்தூரிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக வருவாய் ஈட்டித் தரும் திருச்செந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன்? மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு இரட்டை வழித்தடம் மற்றும் கூடுதல் ரயில் சேவைகளுக்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


