திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில், மாசித் திருவிழா இன்று (பிப். 10) காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான வெயிலுகந்தம்மன் கோயிலில், மாசித் திருவிழா இன்று (பிப். 10) காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன. தொடர்ந்து, திருவிழாக் கொடிப் பட்டமானது கோயிலிலிருந்து புறப்பட்டு ரத வீதிகள் மற்றும் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
பின்னர் கோயிலை வந்தடைந்த கொடிப் பட்டத்திற்குப் பூஜைகள் செய்யப்பட்டு, காலை 5.30 மணியளவில் காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நிறைவு நாளான பிப்ரவரி 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


