Description
திருநெல்வேலி சீமைச் சரித்திரம் எழுதிய குருகுதாஸ் பிள்ளையின் நூல் பாளையக்காரர்களைப் பற்றிப் பேசும். அதைத் தொடர்ந்து நீண்ட நாள்களாக நெல்லைச் சீமை வரலாறு பிரம்மாண்டமாக வெளிவரவில்லை. 1967-இல் சோ.மலே எழுதிய திருநெல்வேலி மாவட்டம் நூல் அனைவராலும் கவனம் பெற்ற நூல். நெல்லைச் சீமைகாரர்கள் பேச்சை அவர் அந்த நூலில் பட்டியலிட்டிருப்பார். அந்தப் பதிவு தூத்துக்குடி அரசிதழிலும் பதிவானது. அது போலவே நான் எழுதிய தலைத் தாமிரபரணி நூலிலும் அவர் எழுதிய பல வரலாற்றைப் பதிவு செய்திருப்பேன். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இவரது பதிவை வைத்துக் கொண்டுதான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்.
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் நிமிர வைக்கும் நெல்லையைப் பற்றி எழுதினார்கள். இந்த நூல் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் பெருமைகளை எடுத்துரைத்தது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் நெல்லைச் சீமை நூல்கள் வந்து கொண்டே இருந்தது. தொ.ப (தொ.பரமசிவன்) அவர்களின் “பாளையங்கோட்டை : ஒரு மூதூரின் வரலாறு” என்ற நூலில் பாளையங்கோட்டையின் வரலாற்றைக் கூறியுள்ளது. எழுத்தாளர் நாறும்பூநாதர் அவர்களின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள், ப.இசக்கிராஜன் எழுதிய பாளையங்கோட்டை நினைவலைகள், பேரா.சௌந்திரராஜன் எழுதிய திருநெல்வேலி நினைவுகள் போன்ற நூல்கள் நெல்லையின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தது.






