
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச்சேர்ந்தவர் பெருமர். இவருடைய மகள் பேச்சியம்மாள்(வயது 15). இவர் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுபபு படித்து வந்தார்.
அரையாண்டு தேர்வில் பேச்சியம்மாள் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியைகள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பேச்சியம்மாள் கடந்த 29ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க முயன்றனர்.
ஆனால் உறவினர்கள் மாணவியை திட்டிய ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். நேற்று 3வது நாளாக மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பாகவும் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, நெல்லை சரக டிஐஜி பிரவின் குமார் அபிநவ் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அதில் மாணவி சம்பவம் நடந்த அன்று பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை என்றும், மாணவி மரணம் தொடர்பாக பள்ளி ஆசிரியைகள், அருட்சகோதரிகள் போன்றவர்களை அவதூறாகப்பேசி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாணவியின் உறவினர்களை செய்துங்கநல்லூர் போலிசார் அழைத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரனை நடத்தி இன்று மாணவி தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றினர். மாணவி பேச்சியம்மாளை தற்கொலைக்கு தூண்டியதாக 2 ஆசரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று மாணவியின் உடலை உறவினர்கள் வாங்கினர். அதன்பின்னர் மருத்துவமனையில் இருந்து பேச்சியம்மாளின் உடலை ஊர்வலமாக வேனில் எடுத்து வந்தனர். அதன்பின்னர் அவரின் வீட்டின் முன்பு அனைவரும் மாணவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாணவி பேச்சியம்மாளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.