சென்னையில் இன்று குடியுரிமைச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்னோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இன்று இரவு சுமார் 10.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் திருநெல்வேலி&திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மற்றும் பெண்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்துங்கநல்லூர் போலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.