தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் கடந்த இரண்டு வருடங்காக தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. கடந்த வருடம் நடந்த அகழாய்வு பணியில் வட்டசில்கள், காதணிகள், சதுரங்க காய்கள், நூல்பிரிக்க பயன்படும் தக்களி, சுடுமண் முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், நுண்கற்கால கருவிகள், பட்டைதீட்டும் கற்கள், எலும்பால் ஆன கூர்முனை கருவிகள், அம்மி, குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள் உள்பட 700க்கும் மேற்பட்ட தொல் பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் சிவகளையில் நடைபெறும் என்றும் இந்த அகழாய்வு பணிகள் பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்திருந்தது.
இந்த நிலையில் சிவகளை பரம்பு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிக்காக முதல்கட்டமாக இடத்தினை சீர்செய்யும் பணிகளும், அளவீடு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளது. இந்த அகழாய்வு பணியில் அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் அகழாய்வு இணை இயக்குநர் விக்டர் ஞானராஜ், சுதாகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்த அகழாய்வு பணியை பொறுத்தவரை சிவகளை பரம்பு, ஸ்ரீமூலக்கரை, பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்போட்டை திரடு, பேரூர் திரடு ஆகிய பகுதியில் இந்தாண்டு அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.