ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து நான்கு மாதத்திற்கும் மேலாக இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 28க்கும் குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. அகழாய்வு பணியில் இதுவரை 45 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ்விடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3500 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுண்ணாம்பு தளம் மிகவும் வலிமையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இடத்தில் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்துள்ளனர். அடுத்து கட்ட்மாக சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனர். மற்றும் ஆங்கிலேயர்கள் காலத்தில் அதாவது 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆதிச்சநல்லூரில் தற்போது அடுத்து கட்ட நிலமை குறித்து ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனரும், திருச்சி மண்டல இயக்குனருமான அருண் ராஜ் கூறும் போது,
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியில் அடுத்த கட்ட நடவடிக்கையாக அகழாய்வு பணியில் தோண்டப்பட்ட குழிகளை இறுதி செய்து எந்த குழியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கலாம் என இறுதி படுத்தி அதன் மீது கண்ணாடி மூலம் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரமாண்டமாக செட் அமைத்து பாதுகாப்பதற்காக டெண்டர் விடுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆய்வாளர்களை அழைத்து அவர்கள் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்தும் ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
விரைவில் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி அடுத்து கட்டத்திற்கு நகர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.