தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்றைய தினம் விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் குளிக்க வந்தனர். அவர்களில் தூத்துக்குடி டவுணை சேர்ந்த அமலன் என்பவர் தனது 30 ஆயிரம் மதிப்புள்ள மோதிரத்தை தவறவிட்டு விட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிசாரிடம் தகவல் தெரிவித்தனர். அனைவரும் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை. எனவே அமலன் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் முத்துக்கிருஷ்ணனிடம் அந்த மோதிரம் கிடைத்தது. உடனே முத்துக்கிருஷ்ணன் அந்த மோதிரத்தை முறப்பநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
உடனே இதுகுறித்து பாதிக்கப்பட்ட அமலனுக்கு போலிசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர் இன்னோஸ் குமார் ஆகியோர் மோதிரத்தை தவற விட்டவரிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மோதிரத்தை பெற்றுக் கொண்டதுடன் காவலருக்கு நன்றி தெரிவித்தனர்.
தொலைந்த மோதிரத்தை கண்டெடுத்துக் கொடுத்த தலைமை காவலருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


