
எங்கள் மகன், எங்களின் சொத்தை அபகரித்துக் கொண்டு எங்களை விரட்டியடிக்கிறான். அவனிடமிருந்து எங்கள் சொத்தை மீட்டுத்தரவேண்டும் என்று வயதான பெற்றோர் தூத்துக்குடி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர்கள் வியாபாரி சங்கர் – பொன்னுத்தாய் தம்பதியர். இன்று சங்கர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ‘’எங்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
நான், எனது மனைவி மற்றும் மனைவியின் உடன்பிறந்த தங்கையான கை, கால்கள் செயல்படாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிந்தாமணி ஆகியோர் சிவஞானபுரத்தில் குடியிருத்து வருகிறோம். எனது வீட்டின் அருகிலேயே நான் மளிகை கடை நடத்தி வருகிறேன்.
இந்நிலையில், கடந்த ஆண்டு எனது கடைசி மகன் சசிக்குமார் எனக்கு சொந்தமான வீடு மற்றும் கடையை அவரது பெயருக்கு எழுதித்தரவேண்டும் என்றும் இல்லையெனில் தான் தற்கொலை செய்திடுவேன் என்றும் எனது மனைவியிடம் கூறினார். இதனால், பயந்துபோன எனது மனைவியின் வேண்டுகோளை ஏற்று அந்த சொத்துக்களை நான் அவருக்கு எழுதி கொடுத்தேன்.
அப்போது எனது மகன் கடைசி காலம் வரை எங்கள் மூவரையும் காப்பாற்றுவதாகவும், எங்களது காலத்திற்கு பிறகே கடை மற்றும் வீட்டு சொத்தை தான் முழுமையாக எடுத்துக்கொள்வதாகவும், அதுவரை நான் மளிகை கடையை நடத்தலாம் என்றும் உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தார்.
இப்படிப்பட்ட சூழலில் எனது மகன் தற்போது எங்களை வீட்டை விட்டு விரட்டியதுடன், மளிகை கடையை நடத்தக்கூடாது என்று சொல்லி எங்களுக்கு பெரும் இடையூறு செய்து வருகிறார். சொத்தை வாங்கி கொண்டு எங்களை விரட்டி விட்ட கடைசி மகனிடம் இருந்து அந்த சொத்துக்களை மீட்டு தந்திடுவதுடன், இடையூறு இன்றி கடை நடத்திடவும் தகுந்த நடவடிக்கை எடுத்திடவேண்டும்’’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.