குளத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி குமரி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற தென்னிந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டியில் ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கபடி அணிகளுக்கு லீக் ஆட்டம் முறையில் இப்போட்டியானது சிறப்பாக நடைபெற்றது.
இறுதி ஆட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆற்றங்கரை கபடி அணியினரும் – தமிழ் தலைவாஸ் கபடி அணியினரும் மோதினர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் 38-35 என்று 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் கபடி அணியினரை வீழ்த்தி கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றங்கரை அணியினர் சாம்பியன் கோப்பையை வென்றனர்.
இதைத் தொடர்ந்து தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி அணியினருக்கு ரூ.1,25,122 பரிசுத் தொகை மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மேலும் குளத்தூரில் நடைபெற்ற இந்த மாபெரும் கபடி போட்டியானது கபடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


