
53. முத்து கிளி
தொடர் கதை- முத்தாலங்குறிச்சி காமராசு
முன்கதை சுருக்கம்
சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கிடையில் பனையில் இருந்து விழுந்து இறந்த லிங்க நாடாருக்கு ஏதாவது அரசு மூலம் நிதி உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்து வரதன் என்பவரை பார்க்க வந்தான். அவர் இறந்து விடவே அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தவிக்கிறான். இதற்கிடையில் முத்துகிளி தனது அப்பா ரத்தினத்தினை நெஞ்சுவலி என 108ல் பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறாள். அப்போது சந்திரன் ரத்தினத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறான். இதற்கிடையில் சந்திரனின் பூர்வீக கதையை ஆசிரியர் அகஸ்தீஸ்வரன் அவனுக்கு சொல்ல ஆரம்பிக்கிறார். ஆர்வத்துடன் கேட்கிறான் சந்திரன். அப்போது அவனின் தாத்தா ராஜதுரை தனது சொந்த ஊருக்கு செய்த உதவிகள் கூறித்த தகவல்களை தெரிந்து கொண்டான்.
ராஜதுரையின் ஊரில் எதிரிகள் தீ வைத்தனர். இதனால் 100 வீடுகள் தீக்கிரையானது.
இனி.
53. மாம்பழச்சங்கம் உருவாக்கிய ரேணியஸ்
அந்தக் காலத்தில் கப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க ரேனியஸ் அய்யர் ஓடிச்செல்வார். இவர் தீக்கரையாக்கப்பட்ட வீடுகளை எல்லாம் விட்டு விட்டுத் தனிக் குடியிருப்புகளை உருவாக்குவார். அதற்காக ஒரு குழுவினரை வைத்திருந்தார். அந்த குழுவினர்தான் கொங்கராயகுறிச்சியில் ஆலயம் கட்டிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் தான் தற்போது இந்த ஊருக்கு வந்திருக்கிறார். அவர்கள் கொடுத்த தகவலை கேட்டு உடனே பாளையங்கோட்டையில் இருந்து ரேணியஸ் அய்யரும் வந்து விட்டார். அவருடன் மருத்துவ குழுவினரும் வந்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் உணவு வழங்கும் குழுவினரும் கூடவே வந்து விட்டனர். ஏற்கனவே நடந்து கொண்டிருந்த சமையல் பணியோடு அவர்களும் கலந்துகொண்டார்கள்.
மக்கள் பரிதவித்து கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
ராஜ துரை அமைதியாக போய் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டான். “என்ன செய்வது. இது போல் அடிக்கடி தீ வித்து நடக்கிறது. இனிமேல் இதுபோன்ற விபத்தில் நம் மக்கள் சிக்க கூடாது. எனவே நிரந்தர தீர்வு காணவேண்டும்”. என்று நினைத்தான். அதற்காக என்ன செய்யலாம் என தனது மண்டையை குடைந்து திட்டம் தயாரிக்க தொடங்கினான்.
ஓடி ஓடி வந்து நமது வீடுகளை தீ கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். கூரை வீடு கட்டியிருப்பதால் தானே இப்படி அநியாயம் செய்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டும்.
என்ன செய்யலாம்.
யோசித்தான்.
6 மாத காலம் பனை தொழில் நடைபெறுகிறது. மற்ற காலங்கள் விவசாய வேலை இருந்தால் விவசாயம் பார்ப்பார்கள் . மற்ற படி எடு பிடி வேலைகள் தான் இருக்கும். யாராவது கட்டில் பிண்ண கூப்பிட்டால் செல்வார்கள். பாய் மூடைவது ஓலைப்பெட்டி முடைவது போன்ற வேலைகள் மட்டும் தான் நடைபெறும். அதுவும் பெரிய வருமானம் கொண்ட தொழில் என்று கூறி விட முடியாது. நிறைய பேரு ஏதோ பேருக்கு அரிசி கொடுத்து விட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு செல்வார்கள்.
அடுத்தக்கட்டம் என்ன செய்வது. அவன் யோசனை மிகவும் தீவிரமானது.
உலக்க நாடார் வந்தார், “ஏலே ராஜத்துரை நம்ம பயலுவ பனை ஏறிக்கொடுக்கிற பயினியை கொண்டு போய், ஆசாரிமாரு கடுக்காய் போட்டு, அதப்பதப்படுத்தி, அதுக்கப்புறம் சுண்ணாம்பு வைத்துத்தான் காரை வீடு கட்டுறானுவ. அவனுவ சொகுசா வாழுதானுவ. நாம தீக்குள்ள வெந்து சாவுதோம்”. என்றார்.
நம்ம பயினியை வைத்துத்தான் என்று அவர் சொல்லிய சொல் ராஜ துரை மனதில் ஒரு சபலத்தை ஏற்படுத்தியது. . “காரை வீடு கட்டவே நம்ம ஆளுக உதவி தேவைப்படுதா?. பொறவு ஏன் நாமா மட்டும கூரை வீட்டுல வாழுதோம்”. ராஜ துரை மனது கேட்டது.
“உனக்கு தெரியாதா? காரை வீடு கட்டும் போது , கட்டை குத்தி வீடு கட்டுறானுவலே, பாத்திருக்கீயா?. அந்த பனை மரக்கட்டை யாரு மரத்தில இருந்து வருது தெரியுமா? நம் ம பனை மரத்தில இருந்து தானே வருது”. பொன்னு நாடார் கூறி விட்டு தலையை சொரிந்தார்.
ராஜ துரை மேலும் யோசித்தான். “உண்மைதானே பெரிய வீடு கட்டவே நாமதானே பொருள் கொடுக்கோம். ஆனால் நாம மட்டும் கூரை வீட்டில வாழுதோம்”. அவன் மனது மிகவும் அழுத்தமாக கேட்டது.
“ஏடேய் நம்ம பயலுவ பலம் நமக்கே தெரியாது. சரி ஒரு ஓலை வீடு கட்டுதவான்னு வச்சிக்க. அதுக்கு ஓலை யாரு தாரா. கட்ட நாறு யாரு தாரா. சரி. அதை கட்டித்தான் யாரு கொடுக்கா. எல்லாமே நாம தாண்டே”. உலக்க நாடார் அடித்துச் சொன்னார்.
அதற்குள் பொன்னு நாடார் , “ஆமாம் எல்லாம் கொடுக்கியடே. ஆனா நம்மள நிம்மதியா வாழ விடமாட்டானுவ. ஆன்னா ஊன்னா ஓடி வந்து பொட்டை பயலுவ மாரி நடு ராத்திரியில, யாரும் இல்லாத நேரத்தில தீயை வச்சிட்டு ஓடிப்போயிடுவானுவ செத்த பயலுவ”.
ராஜ துரைக்கு மேலும் மேலும் யோசனை வந்தது. “எல்லாப்பெருளுமே நம்மத்தான் கொடுக்கோம். ஆனால் நாம மட்டும் ஏன் குடிச வீட்டுல இருக்கோம்”.
அதற்கு உலக்க நாடாரே பதில் சொன்னார். “நாம முயற்சி செய்ய மாட்டோமுடே. ஓலை வீட்டை தீ வைக்க வைக்க, நாம புதுசா வீடு ஓலையில கட்டிக்கிட்டே இப்போம். ஏன்னா. பன மட்டை நம்மக்கிட்ட இருக்கு, பனை ஓலையும் இருக்கு. மட்டையில இருந்து நாரையும் கிழிச்சி வைச்சிருக்கோம். உடல் உழைப்பு கொடுக்க நாம தாயரா இருக்கோம். அதனால 1 வாரத்தில் வீட்டை கட்டி குடியேறிடுதோம். அப்புறம் பழசையெல்லாம் மறந்து போயிடுதோம். தீ வைச்சவன் இளிச்சிக்கிட்டு வந்தா. அவனுக்கே தரும பதனீ ஊத்துறோம். மனுசன்னா ரோசம் , மானம் , வெட்கம், சூடு , சொரணை இதெல்லாம் இருக்கணும். அது கொஞ்சம் கூட நம்மக் கிட்டே கிடையாது”.
“நம்மள யாரு பாதுகாக்கா, அதான் சகிச்சிகிட்டே போறோம்”.
உலக்கநாடார் தான் சொன்னார், “ இங்க பாரு நமக்கு ஒரு பாதிப்புன்னு சொன்னவுடனே வேதக்காரங்க வைந்து கிடக்காவ. நமக்கு பாதுகாப்பு கொடுக்கவ”
“உண்மைதான் . நாமளும் பேசாமல் வேதத்துக்கு போயிடலாமுடே. வேதத்துக்கு போய் புதுசா குடியிருப்பு ஏற்படுத்தின பொறவு எந்த பயலும் அவங்க குடியிருப்பு மேலே கை வைக்கல. கை வச்சா வெளிநாட்டு அய்யா மாருவ கையை உடைச்சு புடுவாங்கன்னு பயந்து போயிருவானுவ . ஆமா” பொன்னு நாடார்.
உலக்கநாடாருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “சரிதாண்டே அதுக்காக பெத்த அப்பனை விட்டுட்டு இன்னொரு அப்பனை தகப்பனுன்னு சொல்ல முடியமா?”
“என்ன செய்ய அங்க பாதுகாப்பு கிடைக்கே”
“அதுக்காக மானம் இழந்து மண்டி போட்டு நிக்கமுடியுமா?”
“ஆமா இங்க மட்டும் மானம் மரியாதையோட வாழ்ந்து கிழிச்சிட்டோம். அட போய்யா நீ.யும் உன் பேச்சும்”
“ஏடேய் நீ அப்படியெல்லாம் சொல்லதை. நம்ம பாளை அருவாவ திருப்பி பிடிச்சா எத்தனை தலை உருளும் தெரியுமா?”
“ஆமாம் . ஆனா நம்ம பலம் நமக்கே தெரியாமலே இருக்கோம்”
அப்படியெல்லாம் இல்லை. நமக்கு கோபம் வரும் நம்ம பலத்தை வச்சி நாப்பது பேரை தாக்க முடியும். ஆனா நம்ம வளர்ப்பு அப்படியில்லை. நம்ம தாய் சிறப்பா வளத்திருக்கா. நம்ம பாளையருவா சீவினா பதனீதான் வரும். ரத்தம் வராது. அதுக்கு நம்ம மக்க பயன்படுத்தவும் மாட்டாவ. ஏன்னா. இது பத்திரகாளி தாயி நமக்கு சொல்லி தந்தது”.
இருவர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தான் ராஜ துரை.
“காளின்னா உனக்கு என்னன்னு தெரியுமாடே. அதர்மத்தை தட்டி கேட்கிறவா தான் காளி, பத்ரகாளி. அவ சூரசம்ஹாரம் பண்ண ஆரம்பிச்சா எத்தனை தலை உருளுமுன்னு தெரியாது. ஆனா நாம அதுக்கு லாயக்கத்தவனுவடே”.
“சும்மா இரும் மச்சான். நீர் இளம்புள்ளையளே வேறே மாதிரி துண்டிப்புடாதேயும். நல்ல விஜயத்தை விதைக்கணும். நல்லதை தான் அறுக்கணும். சண்டைபோட்டு வீணா போயிடக்கூடாது ஆமாம். நாம சான்றோர் குலத்து காரவிய”
இரண்டு பேர் சண்டையையும் அடை மறித்தான் ராஜதுரை.
இரண்டு பேரும் சண்டைபோடாதீங்க. நான் நம்ம முன்னேத்தத்துக்கு என்ன செய்யணுமுன்னு பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க இரண்டு பேரும் இப்படி இடக்-கு மடக்கா பேசிக்கிட்டு சண்டை போடுதீய”.
“இல்லைடே ராஜ துரை இன்னையோட இந்த தீ கொளுத்துற சம்பவத்தை நிறுத்தணும். அதுக்கு நாம ஒரு முடிவு கட்டணும்.” உலக்க நாடார் உறுதியாக நின்றார்.
“அதைத்தான் நானும் சொல்றேன். நான் அதுக்குத்தான் ஏற்பாடு செய்யப்போறேன்”.
“என்ன செய்யப்போறே”
“இனிமேல் நாமா ஓலை வீடு கட்டினாத்தானே இவனுவ நம்மளை அடிக்கடி தீ வைத்து கொளுத்துவானுவ. நாமளே காரை வீடு கட்டிட்டா எவன் நம்மளை என்ன செய்ய முடியும். பாத்திருவோம்”. ராஜதுரை தீர்க்கமான முடிவுடன் எழுந்தான்.
“என்னது காரை வீடா?” பொன்-னு நாடார் விக்கித்து போய் நின்றார்.
“ஆமா காரை வீடுதான். நாம கட்டுவோம்” ராஜதுரை உறுதியாக சொன்னான்.
“ ஏலே நாளைக்கு சோத்துக்கு வழியில்லாம கெடக்கோம். நாம காரை வீடு கட்டபோறோமா?” உலக்க நாடாருக்கு சிரிப்பு வந்தது.
“ஏன் கட்ட முடியாதா?” தீர்க்கமாக சொன்னான் ராஜதுரை.
“ஏலே உனக்கு புத்தி கித்தி பேதலிச்சு போச்சா?”
“இல்லை தாத்தா இப்போ தான் தெளிவாயிருக்கு”.
உலக்க நாடார், பொன்னு நாடார் இரண்டு பேரும் யோசித்தார்கள். ராஜ துரை நல்லவன் தான். சுறுசுறுப்பான இளைஞன். நிறைய திட்டம் வச்சிருப்பான். ஆனா இப்போ என்ன திட்டம் வச்சிருக்கானோ. தெரியலையே?. அவன் முகத்தை உற்றுப்பார்த்தனர்.
“ஏடே ராஜ துரை என்னலே திட்டம் வச்சிருக்க” என்று கேட்டார் உலக்க நாடார்.
“சொல்றேன்” என ராஜ துரை அந்த திட்டம் குறித்து சொல்ல ஆரம்பித்தான்.
அதைக்கேட்ட அடுத்த நிமிடம் இரண்டு பேரும் அசந்து போய் விட்டார்கள்.
*****
பண்டார விளை.
பரம்பரை வைத்தியர் கந்தசாமி நாடாரிடம் அந்த காவலாளியை கூட்டி வந்தனர்.
கூட்டி வந்தார்கள் என்று சொல்வதை விட கட்டில் கட்டி தூக்கி வந்து அவர் வீட்டு முன்பு இறக்கினர் என்று தான் சொல்ல வேண்டும்.
வலி தாங்க முடியாமல் அந்த காவலாளி அலறிக்கொண்டிருந்தான். அவனின் தோரணை கூட வலியால் குனி குறுகி போய் விட்டது..
கந்தசாமி நாடார் வெளியேவந்தார். முறுக்கிய மீசையை தடவியப்படியே அவனை பார்த்தார். உருண்ட கண்கள், ஒரு நிமிடத்தில் நோயாளியின் நிலையை உணர்ந்தது. தினவெடுத்த தோள்களுக்கு சொந்தகாரான அவர், வெள்ளை வேஷ்டி, மார்பில் துண்டு, சிறிதே பருத்த மார்பு, சுமார் 7 அடி உயரத்தில் கம்பீரமாய் இருந்தார். அவரை பார்த்தவுடன் எல்லா காவலாளியும் கையெடுத்து கும்பிட்டனர். “அய்யா எப்படியும் இவனை காப்பாத்துங்க” என்று ஒப்பாரி வைத்தனர்.
கந்தசாமி நாடார் களரி வித்தை தெரிந்தவர். அவர் கை சுவடி படித்தவர். சிலம்பு சுற்றவர். அதோடு மட்டுமல்லாமல் களிரியின் பண்பான மருத்துவ நன்கு கற்றவர். அதுவும் எலும்பு முறிவுக்கு சிறந்த வைத்தியராக விளங்கியவர். பரம்பரையாக இந்த ஊரில் உள்ள பல குடும்பங்கள் எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார்கள். இவர்கள் கை பட்டாலே எலும்பு முறிவு தீர்ந்து விடும் என்பது சுற்று பட்டியில் உள்ள அனைத்து மக்களின் நம்பிக்கை.
இந்த இடத்தில் நாம் பண்டார விளை நாடார்களின் பூர்வீகம் குறித்து பேச வேண்டும்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து ஒரு காலகட்டத்தில் தமிழர்களின் பலன் குறைந்து அவர்கள் அங்கிருந்து மறைந்து வாழத்துவங்கினர். அது போலவே களரி ஆசான்கள் ஒரு காலத்தில் மறைந்து வாழ்ந்து உள்ளார்கள். ஒரு காலத்தில் டச்சு படை வீரர் டிலெனாயை வீழ்த்தியதை 108 களரி வீரர்களை கொண்டு போர் நடத்தி அனந்த பத்பநாபன் நாடார். இவர் கொடிக்கட்டி பறந்த காலம் போய் பிற்காலத்தில் திருவிதாங்கூர் அரசவையில் நாடார்கள் முக்கியத்துவம் குறைந்தது. அந்த காலத்தில் அங்கு ஆண்ட பரம்பரையாகவும், ஆண்ட பரம்பரையினர் போருக்கு சென்று காயமுற்றால் அவர்களை காப்பாற்றும் பரம்பரையாகவும் விளங்கியவர்கள் தான் பண்டாரவிளை ஊர் காரர்களின் முன்னோர்கள்.
இது மறுக்க முடியாத உண்மைத்தான். கை கால் உடைந்தால் கட்டுவதற்கு வைத்தியர்களை நிறையக் கொண்ட ஊர் இது தான். மிகவும் சேட்டை செய்யும் ஒருவரை “இவனை பண்டாரவிளைக்கு அனுப்பினால் தான் சரிப்படுவான்” என்று கூறுவது வழக்கம். இதற்கு என்ன அர்த்தம் என்றால் “அந்த ஆளைக் கையையோ அல்லது காலையோ உடைத்தால் தான் சரிப்படுவான்” என அர்த்தம்.
இவர்களுக்கு கை கால்களை உடைக்கவும் தெரியும் அதை சரிசெய்யவும் தெரியும்.
பரம்பரை பரம்பரையாக இங்கு எலும்பு முறிவிற்கு மருத்துவம் பார்க்கும் நாட்டு வைத்தியர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களை பண்டுவர்கள் என அழைப்பார்கள். விளை என்றால் நிலம் எனப் பொருள் கொள்ளலாம். பண்டுவர் விளை தான் தற்போது மருவி பண்டார விளையாக உருவெடுத்துள்ளது . பண்டுவர் என்பது சாதி சார்ந்த சொல் இல்லை மாறாக மருத்துவத் தொழில் சார்ந்த சொல். பண்டாரம் என்பது சிவபெருமானை குறிக்கும் சொல். எனவே பண்டார விளை என்று குறிப்பிட இறைவன் பெயரும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இங்கு எலும்பு முறிவு வைத்தியத் தொழில் நெடுங்காலமாக நடந்து வருகிறது.
இவ்வூர் அருகே கொற்கை துறைமுகம் உள்ளது. கொற்கையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய மன்னன் ஆண்டுள்ளான். சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு இது மிகச்சிறந்த துறைமுகப்பட்டிணமாக இருந்துள்ளது. கண்ணகிக்கு பாண்டிய நெடுஞ்செழியனுக்கு பிரச்சனை ஏற்பட்டு நெடுஞ்செழியன் உயிர் விட்ட போது, கொற்கையை ஆண்ட அவனது தம்பி வெற்றிவேல் செழியன் தான் மதுரை சென்று பாண்டிய நாட்டை கைப்பற்றி ஆண்டுள்ளான்.
தற்போதும் கண்ணகிக்காக வெற்றி வேல் செழியன் கட்டிய கோயில் கொற்கையில் வெற்றிவேல்செழிய நங்கை கோயிலாக உள்ளது. பாண்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் பயிற்சியின் போதோ அல்லது போரின் போதோ வீரர்களின் கை அல்லது கால் உடைந்தால் பண்டார விளையில் உள்ள வைத்தியர்கள் மருத்துவம் பார்த்திருப்பார்கள். அதற்காக பாண்டிய மன்னர்கள் விவரமாகப் படைகள் இருக்கும் இடத்திற்கு அருகில் இந்த வைத்தியர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் இந்த ஊர் அருகே நட்டாத்தி உள்ளது. ஒரு காலத்தில் நட்டாத்தி ஜமீன்தாரும் நாடாண்டு உள்ளார்கள். இவர்கள் நாடார் இனத்தவர்கள்தான். நட்டாத்தி ஜமீன்தாரும் படையில் போரிட்டு காயமுற்றால், அவர்களுக்கு மருத்துவம் பார்க்க இண்டிகள் என்ற பிரிவில் வைத்தியர்கள் உண்டு. அவர்களில் கண்டக்டரு, ஆவத்துக்கிரி ஆகிய இரண்டு இண்டிகள் இருந்தனர். இவர்கள் இதுபோன்று வைத்தியம் பார்க்க நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் படையில் வீரர்கள் காயமுற்றால் அவர்களை பராமரிக்க நட்டாத்தி ஜமீனிலேயே பணிபுரிந்தார்கள். ஆனாலும் கால் கை உடைந்தால் அவர்களுக்கு பண்டார விளை வைத்தியர்தான் வைத்தியம் பார்க்கவேண்டும். ஆகவே தான் நட்டாத்தி அருகிலேயே பண்டார விளை உள்ளது.
பண்டார விளை கிராமத்தின் நுழைவாயில் ஒரு கோயில் உண்டு. அந்தக்கோயிலை கிழவி அம்மன் கோயில் என அழைக்கின்றனர்.
உவரியில் நூறு வயதைத் தாண்டிய ஒரு கிழவி ஒருத்தி இருந்திருக்கிறாள். இவளுக்கு நான்கு பிள்ளைகள். முதல் மூன்றும் பையன்கள். கடைசியில் பிறந்தது ஒரு பெண் குழந்தை. இந்த நான்கு பேரும் வாலிபப் பருவம் வரை கிழவியுடன் சந்தோசமான வாழ்ந்து வந்துள்ளனர். வயது முதிர்வு காரணமாகக் கிழவி கூன் விழுந்து, உடல் சிறுத்து, எலும்பும் தோலுமாய் நடக்கமுடியாத நிலையை அடைகிறாள்.
உவரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் இவர்கள் வீடு அழிந்து விட்டது. அதனால் அங்கிருந்து இவர்கள் கிழவியைத் தாழியில் வைத்துச் சுமந்தபடியே பண்டார விளை வந்து சேர்ந்தனர்.
குற்றுயிரும் குறையுயிருமாய் தாழியிலிருந்த கிழவியை உயிருடன் அப்படியே புதைத்ததாகச் சிலர் கூறுகின்றனர். சிலர் இறந்த கிழவியைத் தாழியுடன் அங்குப் புதைத்ததாகக் கூறுகின்றனர். அந்த இடத்தில் தான் கிழவி அம்மன் கோயில் தற்போதும் உள்ளது.
கிழவியின் மூத்த மகன் எலும்பு முறிவு வைத்தியராகவும் மற்ற இரண்டு மகன்களும் விவசாயம் செய்தும் வந்துள்ளனர். ஊரின் தெற்குப் பகுதியில் கடைசி மகனின் வாரிசுகளும்; கிழவி அம்மன் கோயில் அருகில் இரண்டாவது மகனின் வாரிசும்; ஊரின் கீழ் பக்கம் மூத்தவரின் வாரிசுகளும் குடியேறினர். மூத்தவர்களின் வாரிசுகள் இன்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் எலும்பு முறிவு வைத்தியம் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகின்றனர். பண்டார விளை வைத்தியர்கள் என்றால் எலும்பு முறிவு வைத்தியத்தில் கைதேர்ந்தவர்கள்.
இந்த கிழவி குடும்பம் குடியிருந்த இடமான உவரி ஊரில் சுயம்புலிங்க சுவாமி கோயில் மிகப்பிரமாண்டமாக உள்ளது. இந்த கோயிலை பொறுத்தவரை இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் அதிகமான பேர் வந்து வணங்கி வருகிறார்கள். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களரி ஆசானின் ஒரு குடும்பம் தான் உவரியில் வந்து குடியிருந்திருக்க வேண்டும். அந்த குடும்பத்தின் வாரிசு தான் இன்று பண்டார வேளையில் அமர்ந்து எலும்பு முறிவு மருத்துவம் செய்திருக்கிறார்கள். அப்படியென்றால் திருவிதாங்கூரில் இருந்து வந்தவர்கள் தான் பண்டாரவிளையின் முன்னோர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.ஆனாலும் வரலாற்றில் மிக முக்கியமானவர்கள்.
2500 வருடங்களுக்கு முந்தைய கொற்கை பாண்டியன் துறை முகம் அருகே இவர்கள் வாழ்ந்து வந்த காரணத்தினால் இவர்கள் பாண்டியனின் படை வீரர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வீரர்களாகவும், பாண்டியனின் படை வீரர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அதற்கு உதராணமாக மிகவும் பழமையான செங்கோல் மட ஆதினம் பண்டார விளை அருகில் உள்ள பெருங்குளத்தில் உள்ளது. இங்குள்ள ஆதின கர்த்தா பாண்டிய மன்னருக்கு செங்கோல் அளித்து மீண்டும் அரியணை ஏற வைத்துள்ளார்கள். எனவே தான் அந்த மடத்துக்கு செங்கோல் மட ஆதினம் என்று பெயர்.
ஆக. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே களரி வீரர்களான எலும்பு முறிவு வைத்தியர்கள், பாண்டியனின் தலைநகராகவும் இரண்டாம் தமிழ்சங்கமாக விளங்கிய கொற்கையில் இருந்துள்ளனர். அதற்கு பண்டாரவிளையே சாட்சியாகும்.
பரம்பரை பரம்பரையாக சிறப்புற்ற இந்த பண்டார விளையில்தான் தற்போது அந்த காவலர்கள் கால் முறிந்தவனை கொண்டு கிடத்தியிருந்தார்கள்.
வைத்தியர் கந்தசாமி நாடார் கேட்டார், “எங்க போய் இழவை இழுத்திய. இப்படி காலை மொறிச்சி விட்டுருக்கானுவ”.
அனைவரும் பேந்த பேந்த விழித்தனர்.
“எப்படி சொல்வார்கள். நாடார் குடி மனைக்கு தீ வைத்து விட்டு வந்தோம் என்று இன்னொரு நாடாரிடம் சொல்ல முடியுமா?”
அப்படியே தெரிந்தாலும் வைத்தியர் என்ற முறையில் கந்தசாமி நாடார் இவர்களுக்கு தீங்கு செய்யப்போவதில்லை . நல்லதே தான் செய்வார். ஏன் என்றால் பலிவாங்கும் பரம்பரையெல்லாம் இதுவல்ல? எதிரிக்கும் நல்ல செயல் செய்யும் பரம்பரை. அதனால் தான் நாடார் வீட்டுக்குபோனால் நல்ல கையாக ஆகுமுன்னு பழமொழியே சொல்வார்கள்.
அதில் ஒருவன் அசடு வடிந்த படி சொன்னான்.
“இல்லே நாடாரே. இவன் ராத்திரி நடந்து வரும் போது ஆத்துக்குள்ள குழி கிடக்கது தெரியாம விழுந்துட்டான்” ஹி ஹி. என்றான்.
“அது எப்படி? காலை முறிஞ்சவன் திறமையான ஆளு. நல்லா தொழில் தெரிஞ்சவன். அவன் கிட்ட ஒத்தைக்கு ஒத்தை உங்களால நிக்க முடியாது. அவன் ஓடிப்போன இவனை இழுத்து பிடிச்சிலா காலை முறிஞ்சி இருக்கான்”. கந்தசாமி நாடார் அவர்களை முறைத்து பார்த்தார்.
என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.
“ஓய். வைத்தியர்கிட்டேயும், வக்கீல் கிட்டேயும் பொய் சொல்லக்கூடாது வோய். கரெக்டா சொல்லும் வைத்தியம் பாப்போம்”. கந்தசாமி நாடார் அசட்டினார்.
அடிப்பட்டவன். அலறினான். “ஆத்தே வலி தாங்க முடியலை. நடந்ததை சொல்லுங்க. என்னை காப்பாத்துங்க என அலறினான்.
முழுங்கி முழுங்கி மீதி மூன்று பேரும் நடந்த சம்பவத்தினை சொன்னார்கள்.
கந்தசாமி நாடார் கண்கள் சிவந்தது. “அடப்பாவிகளா அப்பாவி குடும்பம் 100யை பரிதவிக்க விட்டுட்டியளே” என கோபத்துடன் ஏறிடார்.
அரண்டு போனார்கள் அந்த நால்வரும்.
*****
ரேணியஸ் அய்யர் வந்தார்.
உபதேசியார் வேதமாணிக்கத்தினை கூப்பிட்டார்.
“வேதமாணிக்கம். ஊருக்கு யாரு தீ வச்சா விசாரியும்”.
“சாமி விசாரிச்சி பாத்தேன். யாரும் சொல்ல மாட்டுக்காவ”. வேதமாணிக்கம் வேதனையோடு சொன்னார்.
“ஏன் வந்தவனுவ வெளியூர் காரனுவளா?”
“இல்லை சாமி . நிச்சயம் உள்ளூர் மக்கத்தான். ஆனால இவிய காட்டிக்கொடுக்க மாட்டுக்குவ?”
“ம். பயமா?”
“அப்படியும் தெரியலை சாமி. இவிய பயந்த மாரியும் தெரியலை?”
“இவுகளுக்கும் வேறு யாருக்கும் பகை இருந்ததா?” ரேணியஸ் விடவில்லை. எப்படியாவது இவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார்.
“ஆமாம் சாமி விசாரிச்சேன். பக்கத்தில இருக்கிற அய்யமாருக்கும் இவியலுக்கும் பகை இருந்திருக்கு. ஒரு இந்து கோயில் பிரச்சனை நடந்து இருக்கு”. வேதமாணிக்கமும் எப்படியும் ரேணியஸ் இதைப்பற்றி விசாரிப்பார் என்று அத்தனை பிரச்சனையையும் விசாரித்து வைத்திருந்தார்.
“ம். யாரு பிரச்சனை தெரியுமா?”
“தெரியும். ஆனால இவிய சொல்ல மாட்டுக்காவ”.
“ஏன். இல்லை இங்க இருக்கிற குடும்பக்க மாருவ ஒரு கோயிலை கேட்டு இருக்காவ. அதுக்காக பிடிமண் எடுத்து போவும் போது சண்டை வந்திருக்கு”.
“அப்போ அந்த குடும்பக்க மாருத்தான் தீ வச்சாவுளா?”
“இல்லை சாமி அவிய எல்லோரும் ஒண்ணாத்தான் இருக்காவ. இப்போ பாதிக்கப்பட்டிருக்கும் போது அவுக வந்து இந்த மக்களுக்கு எங்க கூட உதவிக்கிட்டு இருக்காவ. ஆனால எனக்கு பாக்க அய்ய மாரு அடியாளுவளை வச்சி செஞ்சிருப்பாவளோ என்னமோ தெரியலை”.
“இருக்கும் . இருக்கும். சரி. போலிசை விட்டு விசாரிப்போம். நானும் கலெக்டர் கிட்டே பேசுறேன்”.
“சரி . சாமி”.
“இவுகளுக்கு என்ன உதவினாலும் செய்யலாம். என்ன உதவி செய்யணும். எப்படி என்னன்னு விசாரிச்சிட்டு, நாலு பேரை கூட்டிட்டு நாளைக்கு காலையில என்னை பாளையங்கோட்டையில வந்து பாருங்க”.
என கூறிய ரேணியஸ் அய்யர். அங்குள்ள மக்களை பார்த்து விட்டு, சோகத்தோடு அங்கிருந்து குதிரையில் ஏறி ஊரை விட்டு கிளம்பினார்.
எங்கும் கிளம்பிய புகை. இவர் மனதிலும் வேதனையை வரவைத்தது.
உபதேசியார் வேதமாணிக்கம் அவரை வழியனுப்பி விட்டு நேராக ராஜ துரை இருக்கும் இடத்துக்கு வந்தார்.
ராஜத்துரையிடம் பேசிக்கொண்டிருந்த உலக்கநாடாரும், பொன்னு நாடாரும் தங்களது பேச்சை நிறுத்தி விட்டார்கள்.
ராஜதுரையிடம் வந்த வேதமாணிக்கம், “தம்பி ராஜதுரை ரேணியஸ் சாமி போயிட்டாரு. அவரு உங்களுக்கு என்ன உதவினாலும் செய்ய தயா£ரா இருக்காரு. உங்களை இந்த கதிக்கு ஆளாக்கினவங்க யாருன்னு சொல்லுங்க. அவியளை போலிசு மூலமா உண்டு இல்லைன்னு ஆக்கிப்புடுவாரு”. என்றார்.
வேதமாணிக்கத்தின் உண்மையான பெயர் வேல்சாமி. இவர் சுடலைமாடசாமி கொண்டாடி. ஒரு சமயம் இவரோட மூத்த மகனுக்கு பாம்பு கடித்து விட்டது. அவரும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தாரு. தனக்கு தெரிந்த மாதிரி கத்தியை வைச்சு பார்வை பார்த்தார். வேப்பிலை அடித்தார். ஆனால் எதுவும் நடக்கலை. அதற்குள் அவரது மகன் வாயில் நுரை தள்ளி விட்டது. உடனே தான் வணங்கிற சுடலைமாட சாமி கோயிலில் தன்னோட மகனை கொண்டு போட்டு விட்டார். இதை கேள்விப்பட்டு அந்த வழியாக வந்த ரேணியஸ் அய்யர் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தார். பாம்பு கடிச்ச இடத்தில கத்தியால கீறி , அந்த விஷ ரத்தத்தை வெளியே எடுத்து காப்பாத்தி இருக்கார். வேல்சாமியோட மகன் உயிர் பிழைத்து விட்டான். அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் சந்தோசம்.
ஆகா. மரணப்பிடியில்இருந்து காப்பாற்றிய இவர் எவ்வளவு பெரிய ஆளு. என சந்தோசப்பட்டனர். அதன் பிறகு வேல்சாமியோட உறவினர்கள் அனைவரும் ரேணியஸ் அய்யர் பின்னாலேயே கிறிஸ்தவ மதத்துக்கு வந்துட்டாங்க. அவரும் அடிக்கடி இவர்களை சந்தித்தான். அவங்க ஊருல பெரிய ஆலயம் கட்டி, பள்ளி கூடம் கட்டி தற்போது வாழ்ந்துக்கிட்டு இருங்காங்க. வேல்சாமி தன் பெயரை வேதமாணிக்கமுன்னு மாற்றி கிட்டார். இப்போது அந்த ஆலயத்தில இவர்தான் உபதேசியார். அதோட மட்டுமல்லாமல் இதுபோல எங்க பிரச்சனை நடந்தாலும் இவர் போய் முதல் ஆளா நிற்பார். இப்போது கொங்கராயகுறிச்சியில் ஆலயம் கட்ட ஊழியம் செய்ய வந்தவர், இந்த ஊருக்கு வந்து விட்டார்.
சொல்லப் போனால் நாடார் மக்களுக்கு நிறைய பாதுகாப்பு கொடுத்தவர் ரேணியஸ் அய்யர்தான்.
எந்தெந்த ஊருல எல்லாம் பிரச்சனை நடக்கிறதோ, அங்கெல்லாம் போய் நிப்பாரு. அடிக்கடி சண்டை பூசல் நடந்த ஒவ்வொரு இடத்திலும் இருந்து மக்கள் சமாதான படுத்த உருவாக்கின இடம் சமாதானபுரம். ஒவ்வொரு பிரச்சனையில மாட்டி மனது அமைதியே இல்லாம அதாவது மன சாந்தியே யில்லாம அலைஞ்ச மக்களை ஒரு இடத்தில கூட்டிக்கொண்டு வந்து குடியமர வைத்த இடம் தான் சாந்தி நகர்.
ஏற்கனவே மெஞ்ஞான புரம், அன்பின் நகரம், நல்லூர், ஆசீர்வாத புரம் , கடாட்சபுரம் என பல ஊர்களை உருவாக்கி இருக்கிறாரு.
ரேனியஸ் அடிகளார் தான் மட்டுமா இந்த மக்கள் முன்னேற்றத்துக்கு உழைத்தார். அவர் குடும்பமே இந்த ஊர் அடிமைகளை மீட்டெடுக்க ஊழியம் செய்தார்கள்.
ரேணியஸ் அய்யரின் மகன் சார்லஸ் ரேனியஸ் 1845-ல் குருப் பட்டம் பெற்றவர். அவர் சுவிசேஷ புரம் மற்றும் டோனாவூரில் பணியாற்றினார். சார்லஸ் அடிகளார் ரேனியஸ் அடிகளாரைப் போலவே மிகவும் வேகத்துடன் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பி வந்தார். இவர் டோனாவூரிலிருந்து சுவிசேஷ புரத்திற்குக் குதிரையில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் பரப்பாடி என்னும் கிராமத்தில் நடந்த அவலச் செயல் ஒன்றை அவர் கண்ணால் பார்த்தார். பரப்பாடியைச் சேர்ந்த பண்ணையார் கோடை காலத்தில் குளம் வெட்டத் தீர்மானித்தார். இது நடக்கும் காலம் 1849. இந்தக் குளத்தை வெட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் வர வேண்டும் என்று தண்டோரா போடப்பட்டது.
இதற்கு மக்களைத் திரட்ட நிறையக் கூலி ஆட்களை வைத்திருந்தார். அவர் கர்ப்பிணி, முதியவர்கள் நடக்க முடியாத நோயாளி மற்றும் சிறுவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. இவ்வேளைக்கு வராமல் இருப்பவர்கள் மற்றும் வேலை செய்யும் இடத்தில் சோர்வு காட்டுபவர்களை அடியாட்களை வைத்து சவுக்கால் அடித்தார்.
இது போன்று ஒரு நாள் ஒரு கர்ப்பிணி பெண்ணை சவுக்கால் அடித்தனர் அடியாட்கள். அருகில் நின்று அந்த பண்ணையார் கெக்கலிட்டு சிரித்துக்கொண்டிருந்தார். அந்த கர்ப்பிணி பெண் அடி வலி தாங்க முடியாமல் கதறினாள். ஆனாலும் அடியாட்கள் விட வில்லை. அந்த பெண், “தண்ணீர் தண்ணீர்” என்று கத்தினாள். ஆனாலும் தண்ணீர் கொடுக்க வில்லை.
அந்த சமயத்தில் அங்கே வந்தார் சார்லஸ் அய்யர். குதிரையை விட்டு கீழே இறங்கினார். ஓடிப்போய் அந்த அடியாளின் சவுக்கை பிடுங்கி அடியாட்களை அடித்து நொறுக்கிவிட்டார்.
திடீர் தாக்குதலில் நிலை குலைந்து போன அடியாட்கள் அங்கிருந்து ஓடினர். அங்கே கர்ப்பிணி கஷ்டப்படுவதை கண்டு ரசித்த பண்ணையார் அதிர்ந்தார். நமது பகுதியில் வந்து தாக்குவது யார் இந்த இங்கிலிஷ்காரன் என்று யோசித்தவர், வந்து இருப்பது ரேணியஸ் அய்யர் மகன் சார்லஸ் தான் இவர் என புரிந்து கொண்டார் பண்ணையார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவரை எதிர்க்க முடியவில்லை. சார்லஸ் அய்யரிடம் அடிபணிந்தார். “தெரியாமல் செய்து விட்டேன்” என்று தலை கவிழ்ந்து நின்றார். அனைவருக்கும் சந்தோசம். நம்மை காப்பாற்ற ஒருவன் வந்து விட்டான். நம்மை அடித்து துவைத்த பண்ணையாரை கண்டு சந்தோசப்பட்டனர்.
பண்ணையார் நிலையைப் பார்த்த கிராம மக்கள் சார்லஸ் அய்யரைத் தெய்வமாகப் போற்றினர். அதன் பிறகு அங்கிருந்த வேலையாள்களை பண்ணையார் கொடுமைப்படுத்த வில்லை. எனவே சந்தோசப்பட்ட அந்த மக்கள் அடிமைத் தனத்திலிருந்து காப்பாற்றிய அவரின் வழியிலேயே கிறிஸ்துவுக்குத் தேவ சாட்சி ஆனார்கள். சார்லஸ் அய்யர் கால்நடையாக நடந்து போய் குக்கிரமாங்களில் எல்லாம் ஏசு கிறிஸ்து குறித்து அவ்வூர் மக்களுக்குப் போதித்தார். அவர்களுக்கு ஆலயம் கட்டவும் பள்ளிகூடம் கட்டவும் ஏற்பாடு செய்தார்.
இந்த சம்பவம் எல்லாம் உலக்கநாடாருக்கு நன்றாக தெரியும். “தாய் 8 அடி பாய்ந்தார் குட்டி 16 அடி பாய்கிறது” என இந்த பகுதி மக்கள் புகழ்ந்தனர்.
வேதமாணிக்கம் சொன்னார், “இதுபோல இந்த -குடும்பமே நமக்காக உழைக்காங்க. அவங்களுக்கு என்ன பிரதிபலன் நாம செய்துஇருக்கோம்” என்றார்.
உலக்க நாடார் சொன்னார். “அய்யா நாங்க கஷ்டப்படுறோம். ஆனால் நீங்க எங்களுக்கு உதவி செய்றீங்கன்னு நாங்க எந்த காலத்திலும் மதம் மாற மாட்டோம்”.
“அய்யோ நான் அப்படி சொல்லவே இல்லை. நீங்க மதம் மாற வேண்டாம்”.
“பொறகு எப்படி சொல்றீங்க”. பொன்னு நாடார் கேட்டார்.
“அய்யா எனக்கு எல்லா விஜயமும் தெரியும். எந்த காரியத்தை கொண்டும் எங்களோட இயல்பை மாத்த முடியாது”.
வேதமாணிக்கம் அதிர்ந்தார். என்னடா இந்த மக்கள் பிடிவாதம் வித்தியாசமாக இருக்கிறது.
“நாங்க சாமிக்காக சண்டை போடுறோம். என்பதை மனதில் வைத்துக்கொண்டு, எங்க மதத்துக்கு வாங்கன்னு மட்டும் நீங்க சொல்லவே கூடாது”. ராஜதுரை அவரை பார்த்து பேசினான்.
வேதமாணிக்கம் யோசித்தார். உண்மைத்தான் இந்த மக்கள் மனநிலையை மாற்றுவது மிகவும் கஷ்டம் தான். இப்படி பல முறை ரேணியஸ் அய்யர் இந்த பனைதொழிலாளிகளை மதம் மாற்றியும், அதன் பிறகு கோயில் கொடை என்றால் ஓடி வந்து தங்கள் உறவினர்களோடு ஒட்டிக்கொள்வார்கள். இதை நாம் கண் கூட த்தான் பார்க்கிறோமே. மதம் மாறினாலும் நாடார்கள் இதுவரை சாமி மாறியது இல்லையே. இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்று பேசினாலும் அவர்களை விட்டு சாதி மறையவில்லையே.
பாளையங்கோட்டையில் நூற்றாண்டு மண்டபம் அருகே மாம்பழச் சங்கம் என்றொரு பண்டிகை நடைபெறும். இது ஒரு வித்தியாசமான பண்டிகை . இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும். இதை ரேணியஸ்அய்யர் தான் உருவாக்கினார். அது உருவானதே மிகப்பெரிய வரலாறுதான். அந்த வரலாற்றை வேதமாமணிக்கம் அசைப்போட்டார்.
1825 ஆம் வருடம் ரேனியஸ் அய்யரின் போதனையை ஏற்று இந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிறிஸ்தவ மதத்தில் ஐக்கியம் ஆனார்கள். இதனால் இவர்கள் நாகரிகமாக மாறினார்கள். கொத்தடிமை தனத்திலிருந்து விடுபட்டனர். ஆனாலும் மக்கள் தங்களோட தாய் மதத்தை மறக்கவே முடியவில்லை.
இவ்வேளையில் ஆனி மாதம் தோறும் குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் ஆனித் திருவிழா மிக விமர்சையாக நடக்கும். இவ்வூரில் பலர் மாட்டு வண்டி கட்டிக் குடும்பத்துடன் வந்து வீட்டுக்கு ஒரு ஆட்டுக்கடா வெட்டி படைத்து உண்பார்கள். அறுவடை முடிந்து நடைபெறும் இவ்விழாவில் கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்று மணலில் தலை வைத்துப் படுத்து வானத்தைப் பார்த்து மகிழ்வார்கள். பின்பு சந்தோஷமாக உறங்கி போவார்கள். ஆற்றுக்குள் எங்கே பார்த்தாலும் மாட்டு வண்டிகள் காட்சியளிக்கும். மாடுகளுக்கு வைக்கோல் போட கட்டு கட்டாக வைக்கோலையும் கொண்டு வந்து இருப்பார்கள்.
அங்கு கூடும் பல்லாயிரக்கணக்கானோர் பலர் உறவுகார்கள்தான். ஒரே சாதிக்காரர்கள் தான். இதில் பெரும் பாலுமே குரங்கணிக்குச் சந்தோஷமாகச் செல்லுவார்கள். அதுவரை கிறிஸ்தவ மதத்தில் இருந்தாலும் உறவினர்களோடு குரங்கணிக்கு வந்து விடுவார்கள். பனை தொழில் செய்பவர்களில் பலர் பனையில் இருந்து தவறி விழுந்து இறந்து விடுவார்கள்.
இதனால் இளவயதிலேயே பல பெண்கள் கைம் பெண்கள் ஆகி விடுவார்கள். அவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சி பெரும் பாலுமே இந்த ஆற்று மணலில் தான் நடைபெறும்.
மக்களில் புதிதாகக் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் என்ன செய்வார்கள். அவர்களும் இதே போல் ஒரு பண்டிகை வர வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே ரேணியஸ் அய்யரிடம் போய் இது பற்றி கூறினார்கள்.
ஆகவே விதவை நலச்சங்கம் ஒன்றை ரேனியஸ் அய்யர் ஏற்படுத்தினார். அதன் சங்க விழாவை 9.3.1834 புதன்கிழமை அன்று பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடத்தினார்.
இந்த நாளில் அனைத்து பகுதியிலிருந்தும் கிறிஸ்தவர்கள் வில் வண்டி கட்டி பாளையங்கோட்டை வந்து சேர்ந்தனர். சிலர் மாட்டு வண்டியில் குரங்கணிக்குச் செல்வது போலவே கொட்டகை கட்டி வந்தனர். கூட்டத்தில் ஆராதனை நடைபெற்றது. அவ்வேளை மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் வந்து குவிந்தது. கொக்கிரகுளம், தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு மாம்பழச் சங்கத்தில் கலந்து கொள்ள மக்கள் ஆர்வமாக வந்தனர். கூட்டம் அதிகரித்தது. இதனால் இந்த சங்கம் மாம்பழச் சங்கம் என்று அழைக்கப்பட்டது.
பெரும்பாலுமே கோயில் திருவிழா நடைபெற்றால், பெண் மாப்பிள்ளை பார்த்து ஒழுங்கு செய்வது வழக்கம். இது குரங்கணி அம்மன் கோவிலில் தொடர்ந்து நடைபெறும். அதே பணியை மாம்பழச் சங்கத்திலும் நடத்தினார்கள். பெரும்பாலுமே Ôநாடார்Õ சமுதாய மக்களே கிறிஸ்தவ மதத்தில் மிக அதிகமாக மனம் மாறினர். அவர்கள் திருமணத்தை நிச்சயிக்க மாம்பழச் சங்கத்தை நிர்ணயித்தனர். ஆகவே வாலிபப் பெண்களும், வாலிப ஆண்கள் மிக அதிகமாக மாம்பழச் சங்கத்திற்கு வருவார்கள். எனவே இந்த சங்கம் “மாப்பிள்ளை சங்கம்” என்று அழைக்கப்பட்டது.
ரேனியஸ் அடிகளார் கைம்பெண்களின் மறுவாழ்விற்காக இச்சங்கத்தை ஆரம்பித்தார். ஆகவே “கைம்பெண்கள் சங்கம்” எனவும் அழைக்கப்பட்டது. இதனால் இதை பலரும் விரும்பினர். இதனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் அதன் பின் பெண் மாப்பிள்ளை பார்க்க குரங்கணிக்கு செல்வது கிடையாது.
இதே வேளையில் இங்கு வரும் மக்கள் ஏழைகளுக்கு தானம் வழங்கி மகிழ்ந்தனர். இதனால் தானம் பெறுபவர்கள் இங்கு வந்து காத்து கிடந்தனர்.
இவர்களுக்கு வரும் மக்கள் காசு, பணம், அரிசி மற்றும் காய்கறி போட்டு மகிழ்ந்தனர். இதற்காக நேர்ச்சைகளை மக்கள் சேர்த்து எடுத்து வருவார்கள். குரங்கணி கோவிலில் மொட்டை போட்டு நேர்த்தி கடன் செலுத்துவதைப் போல் இங்கே பிச்சைகாரர்களுக்கு தானம் செய்யும் நேர்த்தி கடன் செலுத்துவதற்காகச் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கம் கைம்பெண்கள் சங்கம், மாப்பிள்ளை சங்கம் என அழைக்கப்பட்டு எதிர்காலத்தில் மாம்பழச் சங்கம் என்று நிலைத்து விட்டது.
இதுபோலவே ரேணியஸ் அய்யர் போட்டிக்கு ஒரு சங்கத்தினை ஏற்படுத்தி விட்டார் என இந்து நாடார்களில் பலருக்கு கோபமாக இருந்தது. அதை மனதில் வைத்துக்கொண்டு தான் பேசினார் உலக்கநாடார். இவர்கள் நமது கஷ்டத்தினை வைத்து நம்மை மதம் மாற்ற நினைக்கிறார்கள் என்று நினைத்தார்.
“இங்க பாருங்கய்யா, நீங்க உதவி செய்யறது எல்லாம் சரி. உங்களை எங்க உறவு காரங்களா நினைக்கிறோம். ஆனா நீங்க எங்களை மதம் மாத்த முயற்சி செய்றீங்க” என்றார்.
வேதமாணிக்கம் அமைதியாக இருந்தார்.
“அய்யா தப்பா நினைக்க கூடாது, நாங்க அது எல்லாம் செய்ய மாட்டோம். உங்களுக்கு உதவத்தான் வந்து இருக்கோம்” என்றார்.
ஆனால் இவர்களுக்கு இது போன்ற பிரச்சனை எல்லாம் காதில் ஏற வில்லை. “யாருடைய உதவியும் வேண்டாம். இனிமேல் நமது ஊரில் தீ பிடிக்க கூடாது அந்த அளவுக்கு நிரந்தரமாக ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் . அதற்கு என்ன செய்யலாம்” என்பது மட்டுமே மனதில் ஓடியது.
அங்கே நின்ற வேதமாணிக்கம் யோசித்தார், “இவர்களிடம் வேறு எதுவும் பேச வேண்டாம். நமது கடமை தீ விபத்து பட்டவர்களுக்கு உதவ வந்திருக்கிறோம். இங்கே நாம எது சொன்னாலும் அவர்களிடம் நடக்காது. எனவே நாம் வந்த வேலையை கவனிப்போம்” என நடக்க ஆரம்பித்தார்.
அதற்குள் சாப்பாடு தயராகி இருந்தது. பெரும் பாலுமே ஜெபம் செய்து விட்டுத்தான் சாப்பாடு பரிமாற வேண்டும் . இங்குள்ள சூழ்நிலை ஜெபம் செய்தால் அந்த சாப்பாட்டை சாப்பிடுவார்களோ என்னவோ. ஆகவே மனத்துக்குள் ஜெபம் செய்தார் வேதமாணிக்கம். “இறைவா என்னை மன்னித்துக்கொள் . அனைவரும் பசியாற வேண்டும் அதற்கு மட்டும் ஏற்பாடு செய்” என நினைத்து ஜெபம் செய்தார்.
அதன் பின் அனைத்து சாப்பாடுகளையும் குழந்தைகளுக்கும், மக்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார்.
வயிற்றுக்கு சாப்பிடுவதாக இருந்தாலும் அந்த மக்களுக்கு இழப்பின் தாக்கமும் வலியும் அதிகமாக இருந்தது. எனவே பசி அடங்கவில்லை. ஆனாலும் அமைதியாக சாப்பிட்டனர்.
ஆனால் ராஜதுரையும், உலக்க நாடாரும், பொன்னுநாடாரும் அடுத்த கட்ட நிகழ்வுக்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பசி ஒரு பொருட்டாக தெரியவில்லை.
********
“பண்டாரவிளை கந்தசாமி நாடார், இனிமேல் நமக்கு உதவி எங்கே செய்ய போகிறார்” என விழித்தனர் அந்த நால்வரும்.
ஆனாலும் அவர், “என்னை நம்பி வந்து விட்டீர்கள், நம்பியவர்களை கைவிடமாட்டார்கள் நாடார்கள். உங்களுக்கு உதவுகிறேன்” என்று அவரது காலை எடுத்து வைத்து சிகிச்சையளிக்க ஆரம்பித்தார்.
வலி தாங்க முடியாமல் “ஆத்தே” என்று கத்தினான் அவன்.
“ம். உன் கால் வலி மாதிரி தானே 100 குடும்பத்தோட மனமும் வலிக்கும். அவர்கள் இழப்புக்கு இந்த ஈடு இந்த வலிதான். கொஞ்சம் பொறுத்துக்கொள்” என்று கூறிவிட்டு கந்தசாமி நாடார் உடைந்த காலை பிரித்து அதன் பின் ஒட்ட வைத்தார். அதன் பின் முட்டை பத்து போட்டு கட்டினார்.
கிட்டத்தட்ட 10நிமிட சிகிச்சை. அவனுக்கு வலி நின்றது. “இன்றையிலிருந்து மூன்று நாள் கட்டு போடனும். உனக்கு குணமாகி விடும்” என்று கூறினார்.
பணத்தை வாங்கி கொண்டார்.
நான்கு பேரும் கையெடுத்து கும்பிட்டனர். “அய்யா உங்களை வாழ்க்கையில மறக்கவே முடியாது. எங்களை தூண்டி விட்டவனே எங்களை கைவிரிச்சி விட்டுட்டான். ஆனால் பாதிக்கப்பட்ட நீங்களை எங்களை காப்பாத்தி விட்டுட்டீங்க. நாங்க தெரியமா உங்க மக்களுக்கு தப்பு செஞ்சிட்டோம்”.
என கையெடுத்து கும்பிட்டனர்.
“எங்க மக்களுக்கு மட்டுமில்லை. இனிமே யாருக்கும் தீங்கு செய்யாதீங்க” என்றார்.
ஆனால் இவர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அந்த ஊர் காரர்கள் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்தது.
அவர்கள் அடுத்த கட்ட நிகழ்வுக்கு யார் உதவ போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்தது.
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவாள்)