
தூத்துக்குடியில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தனிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் வெப்ப சலனம் காரணமாக இன்று அதிகாலை 4 மணி முதல் திடீர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து நகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.
மேலும் தெருக்கள், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், ஜெயராஜ் ரோடு, பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, புது கிராமம் உள்ளிட்ட சில பகுதிகள் மற்றும் திருச்செந்தூர் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேடநத்தம் மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கழுகுமலையில் 7 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 6.5 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டு தோறும் இந்த காலகட்டமானது உப்பு உற்பத்தி சீசன் காலமாகும். இந்த சமயத்தில் பெய்த திடீர் மழையால் உற்பத்தியாளர்கள் சற்று கலக்கம் அடைந்தபோதிலும், உப்பு உற்பத்திக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.