
2019 ல் திருச்சியில் சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த போது குழந்தை உயிருடன் மீட்கப்படுமா என்று நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. அதுபோன்று தற்போது நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னிர் பள்ளம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட இடத்தில் மனதை உலுக்கும் சம்பவம்ஒன்று நடந்தது. அதாவது முன்னீர்பள்ளம் காவல்நிலையத்துக்கு உள்பட்ட அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் மே 14 2022 அன்று நள்ளிரவு 11.30 மணிக்கு நடந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள்.
நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில், வெங்கடேஸ்வரா கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு (மே 14&2022) இரவு கற்களை ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அன்றைய தினம் இரவு 11.30 மணி அளவில் மிகப்பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்து இருக்கிறது.
அப்போது இரண்டு லாரிகள் மற்றும் மூன்று ஹிட்டாச்சி இயந்திர வாகனங்கள் குவாரிக்குள் சிக்கி மேலும் ஆழத்துக்குச் சென்றன.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிளீனர் முருகேசன் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தின் ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய், ஆகியோர் குவாரிக்குள் மாட்டிக்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து நாங்குநேரி பாளையங் கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சுமார் 300 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் மீட்பு பணியில் அன்றைய தினம் இரவு சிக்கல் நீடித்தது. மழை பெய்ததாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், முருகன், விஜய் ஆகிய இருவர் மட்டும் தொடர் முயற்சியால் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சூழலில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 30 பேர் கொண்ட குழு நெல்லைக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
இதையடுத்து மூன்றாவது நபராக செல்வம் என்பவர் நேற்று மாலை மீட்கப்பட்டார். பொக்லைன் இயந்திரத்தின் அடியில் கல் குவியலில் சிக்கியிருந்த அவரை விபத்து ஏற்பட்டு 17 மணி நேரத்திற்குப் பிறகு மீட்புக்குழுவினர் மீட்டனர். அவருக்கு முதற் கட்டமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார்.
பாறைக்குள் இன்னும் மூன்று பேர் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்நிலையில் இரவு இருள் சூழ்ந்த காரணத்தாலும், கல்குவாரி ஆழமாக இருந்த காரணத்தாலும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மீண்டும் மீட்பு பணி தொடங்கியது.
விபத்து ஏற்பட்ட கல்குவாரியைச் சுற்றி பொதுமக்கள் சூழ்ந்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த மீட்பு பணியில் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரும் பயன் படுத்தப்பட்டது. ஆனால் பாறை களில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகளைத் தொடர முடியவில்லை என்று திரும்பி சென்றுவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், தனியார் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள வர்களை மீட்கும் பணி நடந்தது. கல்குவாரி உரிமம் பெற்ற சங்கரநாராயணன் கைது செய்தனர். மேலும் குத்தகைக்கு எடுத்து நடத்தும் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கல்குவாரியில் அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டப்பட்டுள்ளதா? விதி மீறல் நடந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் விபத்து நடந்த பகுதியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் மற்றும் விஜய் ஆகியோரை சந்தித்து முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறுகையில், “2018ஆம் ஆண்டு இந்த குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர். தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வரும் சூழலில் விபத்து பகுதியில் மீட்பு பணி நடத்துவது சவாலான காரியம். இவ்விவகாரத்தில் அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் கூறினர். நெல்லை கல்குவாரி விபத்து – வருவாய்த்துறை செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குனர் குமார் ஜெயந்த் நேரில் ஆய்வு செய்தார்.
நெஞ்சை உலுக்கிய இந்த சம்பவம் தாமிரபரணி கரையில் முன்னீர்பள்ளம் கால்நிலைய எல்கைக்குள் நடந்த மனதை உருக்கும் சம்பவமாக கருதப்படுகிறது.
(நதி வற்றாமல் ஓடும்)