
ராசுக்குட்டி யோசித்தான். “ஆகா. மடையன் என்றால் இப்படியரு வரலாறு இருக்கா?” என நினைத்தான்.
ஆச்சி இன்றைக்கு மிகவும் சோர்வாக இருந்தாள்.
“என்ன ஆச்சி சோர்வா இருக்க”.
“ஒண்ணுமில்லேடே லேசா காய்சல் அடிச்ச மாரி இருக்குடே”.
“அப்பும் என்ன செய்ய போறே. வயித்திச்சிக்கிட்ட போவுமா?”.
“பெரிய மனுசன் நீ. என்னை எந்த வயித்திச்சிக்கிட்ட கூட்டிட்டு போவ?”
சிரித்தாள் ஆச்சி. ராசுக்குட்டி திருதிருவென முழித்தான்.
“வீட்டுக்கு போய் நல்லா வெஷகுடிநீர் கசாயம் போட்டு குடிச்சா எல்லாம் சரியா போயிடும்”. ஆச்சி தெளிவாக சொன்னாள்.
ராசுக்குட்டிக்கு வருத்தம். “ஆச்சி இன்னைக்-கு காய்ச்சலுன்னு சொல்லி கதை சொல்லமா போயிருவாளோ?”.
சிரித்தாள் ஆச்சி. “ஏடே ராசுக்குட்டி ஆச்சிக்கு இந்த காய்ச்சல் கறுப்பு எல்லாம் ஒண்ணும் செய்யாது. கவலை படாதே. இன்னைக்கு ராத்திரிக்குள்ள எல்லாம் சரியாயிடும்”.
ராசுக்குட்டிக்கு சந்தோசம் தாங்க முடியலை. “அப்படின்னா இன்னைக்கு ஆச்சி கதை சொல்லிருவா”.
வேகமாக ஓடினான். ஊர் ஆற்றில் வீரபாண்டிய கசம் அருகில் நிறைய பேரு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவன் அங்குள்ள பாறையில் இருந்து டைவ் அடித்து தண்ணீருக்குள் குதித்தான்.
“அடிச்சாம் பாதர் வெள்ளை” என்றார் சுப்பு குட்டி தாத்தா.
“என்னலே இந்த தாத்தா சொல்லுதாரு”. ராசுக்குட்டி தாத்தாவை பார்த்தான்.
“அடிச்சாம் பாதர் வெள்ளைன்னா ஒரு பழமொழி” நம்ம ஊருல வீரதீர செயல் செய்யறவியள இப்படித்தான் சொல்லுவாவ. இந்த பையனை பாத்தியா. பாறை மேலே நின்னு மூனு சுத்து சுத்தி டைவ் அடிக்கிறான். அதான் சுப்புகுட்டி தாத்தா இப்படி சொல்றாரு”
“பழமொழியா. அப்படின்னா என்னடே”.
உடன் இருந்த திருப்பதி பரபரக்க விழித்தான்.
ஆச்சி கிட்ட கேட்டுற வேண்டியது தான் என நினைத்தபடியே வீட்டுக்கு வந்தான். காலையில் பள்ளிகூடம் சென்றார். மதியம் முழுவதும் அடிச்சார் பாதர் வெள்ளை நினைப்புத்தான். பள்ளி கூடம் முடிந்தது. சாயந்திரமும் வந்தது.
தாமிரபரணி ஆற்று மணலில் எல்லோரும் கூடினார்கள். ஓடி பிடித்து விளையாட்டினார்கள். குச்சி கம்பு விளையாட்டு, கிலியான் தட்டு விளையாட்டு என சிறுவர்கள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒருபக்கம், தாய்மார்கள் ஆற்று மணலில் ஊற்றுத்தோண்டி குடிதண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் பெண் குழந்தைகள் “பூப்பறிக்க வாறீயளா பூப்பறிக்க வாறியளா?”, “எந்தப் பூவை பறிக்கீறீர்கள். எந்தப்பூவை பறிக்கீறீர்கள்.” என்ற பாடல் பாடி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
தமிழர்கள் பண்பாடு தான் எத்தனை கலாச்சாரம் கொண்டது. விளையாட்டில் கூட பராம்பரியம். தமிழர்களிடம் விரவி கிடக்கிறது.
தாமிரபரணி ஆற்றுக்குள் சூரியன் சிவப்பு கலரில் எதிரொளியை காட்டி மேற்கே பொதிகை மலையில் ஒளிந்து மறைந்தான்.
இருட்ட ஆரம்பித்து விட்டது. எனவே அவசர அவசரமாக எல்லோரும் ஆற்றுமணலை விட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள்.
வீட்டுக்கு வந்தான் ராசுககுட்டி.
“ஏலே ராசுககுட்டி அம்ம துவையல் அறைச்சு வைச்சிருக்கா. சுடுசோறு மிளகு ரசம் இருக்கு சாப்பிட வா” என ஆச்சி கூப்பிட்டாள்.
ஓடிப்போய் தார்சாவில் அமர்ந்தான்.
வெண்கல கும்பாவில் சுடுசோறு வந்தது. ரசத்தினை நன்றாக விட்டு, வறுத்த காணத் துவையலை வைத்து ஒரு பிடி பிடித்தான் ராசுக்குட்டி.
இதற்குள் வெள்ளி நிலவு மேககூட்டத்தில் முண்டியடித்துகொண்டு வானத்தினை சிறைப்பிடித்து, ஓளியை பூமிக்கு தந்துக்கொண்டிருந்தது.
ஆச்சி, சாப்பிட்டு விட்டு வெற்றிலை இடிக்க ஆரம்பித்தாள். அதன் பின் கோரம்பாயை தூக்கி கொண்டு மொட்டை மாடிக்கு எல்லோரும் கிளம்பினார்கள். ராசுக்குட்டியும் பின்னாலேயே கிளம்பினான்.
மொட்டை மாடியில் ஆச்சி அமர்ந்த படியே பேச ஆரம்பித்தாள்.
“ஏலே ராசுக்குட்டி இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ணின”.
“நான் எங்கே பிரச்சனை பண்ணினேன்”.
“திருப்பதி தான் வீரபாண்டிய கசத்தில டைவ் அடிச்ச பயலை பாத்து அடிச்சான் பாரு வெள்ளைன்னான். டைவ் அடிச்சவனே கறுப்பு அவனை போய் வெள்ளைங்கான்”.
சிரித்தான் ராசுக்குட்டி.
ஆச்சிக்கும் சிரிப்பு வந்தது.
“இங்க பாருடே. நீ பாட்டுக்கு அதை அசால்டுன்னு நினைக்காதே. வெள்ளைன்னா யாரு தெரியுமா?”
“யாரு ஆச்சி”.
“வெள்ளையத்தேவன்”.
“ம். இந்த வீரபாண்டிய கட்டபொம்மனுல வாருவாவலே. அவுகளா?”
“ஆமாம். ஆன்னா ஊன்ன சினிமாகாரவியளைத் தேடித்தான் போவ”.
“வேறே எதைப்பாத்து சொல்ல அவுகத்தானே நல்லா காட்டுதாவ”
உண்மைத்தான் சினிமா இல்லாட்டி நிறைய பேரு நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.
“ஆமா. வெள்ளைத்தேவனை உனக்கு தெரியுமுலா”.
“நல்லா தெரியும் பகதூர் வெள்ளைத்தேவன். வெள்ளையம்மா காளையை அடக்குவாவ? பெரிய வீரனாச்சே”.
“ம். அவுக வாழ்கையில இருந்துதான் இந்த பழமொழி வந்துச்சு”. ஆச்சி சிரித்தாள்.
“ஆச்சி. ஆச்சி. அந்த வரலாறை சொல்லு ஆச்சி”.
“சொல்லுதேன். சொல்லலைன்னா விடவா போறே”
“ வல்லநாடுன்னு ஒரு ஊரு இருக்கு. அந்த ஊருதான் இவுகளுக்கு சொந்த ஊரு. இவுக பொறந்த தெருவு கூட விசேசமானதுதான். எப்படி தெரியுமா?”
“எப்படி ஆச்சி?”
“கோழி குஞ்சு பொறிக்கலைன்னா. இந்த தெருவில இருந்து பிடிமண் எடுத்துட்டு போயி. அதுல வைச்சு அடைகாக்க வைப்பாவ. அதுக்கப்பறம். கோழி அடைகாக்க வைச்ச முட்டையெல்லாம் கூ முட்டையில்லாம அப்படியே குஞ்சு பொறிச்சிடும்”.
“ம். அப்படியா?”
“ஆமாம் அவரு பொறந்த தெரு மண்ணுக்கே அந்த அளவுக்கு வீரம் இருக்குமுன்னா பாத்துக்கோயேன்”
“ஆச்சி. வல்லநாடு எங்க கிடககு. வீரபாண்டிய கட்டபொம்மன ராஜா எங்க கிடக்காவ. இவுக ரெண்டு பேரும் எப்படி சேர்ந்தாவ?”.
“ம். அந்த கதையை தான் சொல்ல போறேன். அந்த கதையை சொல்லும் போது, அப்படியே அடிச்சான் பாதர் வெள்ளைக்கும் அர்த்தம் புரிஞ்சுடும்” என்று சொல்லி விட்டு சிரித்தாள் பார்வதி ஆச்சி.
“சரி. ஆச்சி சொல்லு ஆச்சி”.
கதை சொல்ல ஆரம்பித்தாள் ஆச்சி.
“அந்த காலத்தில தாமிரபரணி ஆற்றங்கரையில இருந்த முத்தாலங்குறிச்சி கவிராயருக்கும் கட்டபொம்மனுக்கு நட்பு இருந்துச்சு. கட்டபொம்மன் கவிராயரை பார்க்க முத்தாலங்குறிச்சிக்கு அடிக்கடி வருவாவ. அவுக குதிரையை குளிப்பாட்டின இடம் தான் வீரபாண்டிய கசம். இந்தகசத்தில அவுக குதிரையை நீச்சலில உட்டு குளிப்பாட்டுவாவ”.
ஆச்சி நிறுத்தி மூச்சி விட்டாள்.
“ஒரு நாளு கவிராயரை பாத்துட்டு வல்லநாட்டு வழியா பாஞ்சாலங்குறிச்சிக்கு கட்டபொம்மன் போயிருக்காவ. அவுக கூட வீரன் சுந்தரலிங்கநாரும், படைவீரர்களும் போயிருக்காவ. வல்லநாடு மலை சரிவில போயிட்டு இருக்கும் போது ஒரு ஊரணியில சிறுவன் குரல் கேட்டுருக்கு. அந்த சத்தத்தை கேட்டு கட்டபொம்மன் பக்கத்தில போயிருக்காவ. அப்போ அந்த ஊரணியில முழ்கிய மாரி ஒரு சிறுவன் கிடந்திருக்கான். அதை பாத்து பதறி போயிட்டாவ கட்டபொம்மு ராஜா. “நான் மாடு மேய்க்க வரும் போது தவறி விழுந்துட்டேன். பெரிய அகழியா இருக்கு. சவதி என் காலை பிடிச்சி இழுக்கு. கரைக்கு வர முடியலை. ஆனால நான் எப்படியும் வந்திருவேன்னு நம்பிக்கையா இருக்கேன்”னு சொல்லிட்டு முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கான். அவனை பாத்து அசந்து போயிட்டாவ கட்டபொம்மு ராஜா. “என்னா நம்பிக்கையா இருக்கான் இந்த பய”ன்னு நினைச்சாவ. “ஏடே நான் உனக்கு உதவுதேன். நான் போடுத சாட்டை கயிறை பிடிச்சிகிட்டு நீ மேலே வந்தீரு”ன்னு சொல்லியிருக்காவ. ஆனா அந்த சிறுவன் “எனக்கு உங்க உதவி தேவையில்லை எப்படியும் வெளியே வந்திருவேன். எதுக்கும் நீங்க கேட்கிறதால அந்த சாட்டையை வீசுங்க. நான் பிடிச்சிட்டு வெளியே வந்திருதே”ன்னு நம்பிக்கையா சொல்லியிருக்கான். கட்டபொம்மன் அவன் தைரியத்தயும் நம்பிக்கையையும் எண்ணி வியந்து போயிட்டாவ. “உன் பேரு என்னடே”ன்னு கேட்டுருக்காவ. அவனும் “எம்பேரு வெள்ளையன். எம் ஊரு வல்லநாடு”ன்னு சொல்லியிருக்கான்.
உடனே தன் கையில இருந்த சாட்டையை வீசியிருக்காவ கட்டபொம்மு ராஜா. உடனே அதை பிடிச்சிக்கிட்டு, ஒரே துள்ளா துள்ளி வெளியே வந்து விழுந்துட்டடான் அந்த வெள்ளையன். அவனோட வீரதீர செயலை எண்ணி வியந்து போய் “அடிச்சான் பார் வெள்ளை”ன்னு சொல்லியிருக்காவ கட்டபொம்மு ராஜா. அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் யாராவது வீரதீர செயலை செஞ்சா “அடிச்சான் பாரு வெள்ளை”ன்னு சொல்றது நிலைச்சு போச்சு. அது மட்டுமா பிற்காலத்தில அதுவே மருவி போய் “அடிச்சான் பாதர் வெள்ளை”ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாவ”. என சொல்லி முடித்தான் ஆச்சி.
“அம்மாடியோவ். இதுதான் கதையா. வெள்ளையத்தேவன் கிடந்த ஊரணி இன்னும் இரு க்காக ஆச்சி”. என ஆர்வத்துடன் கேட்டான் ராசுக்குட்டி.
“கிடக்குன்னுதான் சொல்லுதாவ. வல்லநாட்டு மலையில தூத்துக்குடி க்கு போறே ரோட்டு பக்கம் அந்த ஊரணி இருக்குமுன்னு சொல்லுவாவ”. ஆச்சி சந்தேகத்துடனே சொன்னாள். இவள் எங்கே ஊரை விட்டு போயிருககா. ஆனால் கேள்வி ஞானம் ரொம்ப அதிகம். அதுதான் எதை பத்தி கேட்டாலும் அதுக்கு ஒரு கதை வைச்சிருக்கா.
“ஆச்சி வெள்ளையத்தேவன் காளையை அடக்குனாவ, வெள்ளைகாரத்துரையை அடிச்சி விரட்டினாவன்னு சொல்லுவாவலே. அதை பத்தி சொல்லு ஆச்சி”. ராசுக்குட்டி விடுவதாக இல்லை.
“வெள்ளைத்தேவன் சாதரண ஆளா. வீரபாண்டிய கட்டபொம்மு ராஜ வுக்குப் பிள்ளையே இல்லாததால வெள்ளையத் தேவனை தத்து எடுத்து வளர்த்து இருக்கவான்னு சொல்லுவாவ. வெள்ளையத் தேவன் நிகரற்ற வீரனா இருந்து இருக்காவ. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதுலே மகாசூரன். போர்களம் என்றால் அவுகளுக்கு கொள்ளை பிரியம். வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவின் வலது கரமா இருந்து இருக்காவ. வெள்ளையர் கள் வீரப்பாண்டி கட்டபொம்மு ராஜாவிடம் கப்பம் கேட்டு வந்த போது முதலில் சீறிப் பாய்ஞ்சு சண்டைப்போட்டது வெள்ளை யத்தேவன் தான். அடங்காத காளை யை வெள்ளையம்மாள் வளத்து வந்தா. காளையை அடக்கிறவியளை தான் நான் கல்யாணம் பண்ணுவேன்னு வீரசபதம் போட்டிருந்தா. ஆனால் காளை யை யாரும் அடக்க முடியலை. வெள்ளையைத் தேவன் அக்காளையை அடக்கி வெள்ளையம் மாளை கல்யாணம் பண்ணிகிட்டாவ. இவுகளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சது, வீரபாண்டிய கட்ட பொம்முவும், அவரது தம்பி ஊமைத்துரையும்தான். இப்போ தான் இங்கீலிஷ் காரங்க, இந்த மண்கோட்டை யை வைத்துக்கொண்டுதானா கட்டபொம் மன் மனக்கோட்டை கட்டுகிறான்? என்று எக்காளமிட்டுச் சிரித்து போர் செய்ய வந்தாவனுவ. சமரசப் பேச்சு க்கு இடமில்லாம போர்தான் முடிவுன்னு கட்டபொம்மன் முழக்கமிட்டவா. போர் தொடங்கிச்சு. இதுக்கு வெள்ளத்தேவன் முககிய பங்கு வகிச்சாவ. போருக்குப் புறப்படும்போது வெள் ளையத்தேவனும் வெள்ளையம்மாளும் புதுமணத் தம்பதிகளா இருந்தாவ. வெள்ளையம்மா பிள்ளத்தாச்சியா இருந்தாவ?. போருக்கு முதல்நாள் தீய செப்பனம் இவ கண்ணுக்கு தெரிஞ்சுது. “போகாதே போகாதே என் கணவனா, பொல்லாத செப்பனம் நானும் கண்டேனு”ன்னு எவ்வளவோ சொல்லி பாத்தாவ. வெள்ளையத் தேவன் பிடிவாதமா போர் செய்ய போனாவ.
கோட்டையின் தெற்கு வாயில் வழியாகக் கோட்டைக்குள் நுழைந்த இங்கிலிஷ்கார துரையை வெள்ளையத் தேவன் தனது ஈட்டியால் குத்திக் கொன்னாவ. இதனால இங்கிலிஷ் கார துரை மாருக்கு கோபம் வந்துட்டு. வெள்ளைத்தேவனைக் காட்டிக் கொடுத்தா 5 ஆயிரம் தாரேன்னு சொன்னான். போர் உக்கிரமாக நடந்துச்சு. வெள்ளையத் தேவன் சுழன்று சுழன்று இங்கிலிஷ்காரனுவளை வேட்டையாடிக் கொன்னாவ. கோட்டையை பலமாக காவல் காத்தாவ. இனிமே நேருக்கு நேர் நின்னு வெள்ளையத்தேவனை கொல்ல முடியாதுன்னு இங்கிலிஷ் காரவிய முடிவு செஞ்சாவ. போர் முடிஞ்சிட்டுன்னு அறிவிச்சாவ. போர்தான் முடிஞ்சிட்டேன்னு அசால்டா நின்னுகிட்டு இருந்து வெள்ளையத்தேவனை சுட்டு கொன்னானுவ இங்கிலிஷ் துரைமாருவ. இதை எதிர்பார்க்காத வெள்ளைத்தேவன் இந்த மண்ணுக்காக மடிஞ்சாவ”.
ராசுக்குட்டி அதை கேட்டு அதிர்ந்து நின்றான்.
“வீரபாண்டிய கட்டபொம்மு ராஜா ஓடி வந்து இறந்த வெள்ளைத்தேவன் உடலை மடியில் போட்டுக்கிட்டு அழுதாவ. “மகனே என்னை விட்டு விட்டுப் போயிட்டாயே என் வலக்கரத்தை இழந்திருந்தால் கூட நான் கலங்கி இருக்க மாட்டேனே ஆனால் இப்போது என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாயே”ன்னு புலம்பினாவ.
கணவன் இறந்த செய்தி கேட்டு ஓடி வந்து போர்களத்தில் தலைவிரி கோல மாக ஒப்பாரி வைச்சாவ வெள்ளையம்மாள். கணவன் உடலைப் பார்த்துக் கதறி அழுதாவ. போர் முறைக்கு மாறாகத் தன் கணவனைக் கொன்று விட்ட கயவனைத் தேடிப்போனாவ. ஆங்கிலேயச் சிப்பாய்கள் குடிபோதையில் உளறிக் கொண்டிருந்தாவ. அதில வெள்ளைத்தேவனை சுட்டு கொன்னவன் இருந்தான். அவனை கோபம் தீர மட்டும் கத்தியால சதக் சதக் குன்னு குத்தி கொன்னாவ. பழித்தீர்த்த அவுக அங்கிருந்து வெற்றியோட திரும்புனாவ”.
ஆச்சி சொல்லும் போதே அவளுடைய நாவும் தழுதழுத்தது. ராசுக்குட்டிக்கு கண்ணீர் வந்தது.
வெள்ளைத்தேவன் கதை அவன் மனதை விட்டு நீங்க பல நிமிடங்கள் பிடித்தது. ஆனாலும் வெள்ளைத்தேவன் சோகத்தினை தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். அதோட மட்டுமல்லாமல் ஆச்சி மடியில் தலை வைத்து படுத்த அவன் அப்படியே தூங்கியும் போய் விட்டான்.
இந்த நாட்டுக்காக உயிர் விட்ட வெள்ளைத்தேவனைமறக்க முடியுமா?
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)