
“மடையன்னு சொன்னா தியாகியா?” ராசுக்குட்டிக்கு வித்தியாசமாக இருந்தது.
“ஆச்சி நீ என்ன சொல்லுத”
“ஆமாண்டே ராசுக்குட்டி”.
“மடையன்னு சொல்லுதமே அவுக யாரு தெரியுமா-?” ஆச்சி கேட்டவுடன்
ராசுக்குட்டி ஆச்சரியத்தோடு ஆச்சி அருகில் வந்து உட்கார்ந்தான்.
இதற்குள் தாய் சொர்ணம்மாள் சூடாக பனையோலையில் செய்யப்பட்ட கொழுகட்டையை கொண்டு வைத்தாள்.
ராசுக்குட்டி சம்பணம் போட்டு உட்கார்ந்தான்.
பனை யோலை கொழுக்கட்டையை எடுத்தான். அதன் மேலே கட்டியிருந்த பனை ஓலை கயிறை பிரித்து எடுத்தான். அதன் பின் கொழுக்கட்டையை ஓலையில் இருந்து பிரித்து எடுத்தான்.
“ஆச்சி ரொம்ப ஆர்வமா இருக்கு மடையர் கதையை சொல்லு” என்றான்.
ஆச்சி சிரித்தாள்.
“ஒரு காலத்தில இப்போ இருக்கிற மாறி மடை, அணை யெல்லாம் கிடையாது. மழை பெய்சா தண்ணீ கொட்டோ கொட்டுன்னு அருவியில கொட்டும், ஒரு நிமிசத்துல ஆத்தில தண்ணீ ஓடி வரும்.
ஆத்து கரையில இருக்கிற வைக்கப்படப்பு, அதுமேலே மேஞ்சுகிட்டு இருக்க கோழி முதக்கொண்டு எல்லாத்தையும் ஆத்து வெள்ளம் அடிச்சிக்கிட்டு வந்திரும்.
நம்ம ஊரு பொம்பளைய எதித்த கரைக்கு மலையில விறகு பொறுக்க போயிருப்பாவ. மத்தியானம் வெள்ளம் வந்துரும். உடனே அவுக விறகுகட்டு கட்டி ஆத்துல போட்டுட்டு, அது மேலே ஏறி நீஞ்சியே நம்ம ஊருக்கு வந்துருவாவ.
நம்ம ஊரு இளவட்டங்க வெள்ளத்தில நீஞ்சி போய் வைக்கப்படப்பு மேலே இருக்கிற கோழியை தூக்கிட்டு வந்திருவாவ.
ஒரு நாள் உங்க தாத்தா வெள்ளதில வந்த கடிகாரம் ஒன்னை நம்ம வீட்டுக்கு தூககிட்டு வந்தாவ. அந்த கடிகாரம் இன்னைக்கும் ஓடிக்கிட்டு இருக்கு.
இந்த வெள்ளதை எல்லாம் கட்டு படுத்தணுமுன்னு நம்ம முன்னவங்க ஆசைப்பட்டாவ”. ஆச்சி மூச்சு விட்டார்.
ராசுக்குட்டி அமைதியாக அமர்ந்து கதை கேட்டான்.
ஆச்சி கதையை தொடர்ந்தார்.
“தாமிரபரணி. வற்றாத ஜீவநதி. உயிரோட்ட மான நதி. சுமார் 1000 ஆண்டுகளுக்கும் முன்பு ஆர்பரித்து ஓடிய நதி. எங்கு ஓடியது. எப்படி ஓடியது என்பது தெரியாமல் ஒடிய நதி. பல இடங்களில் பல பிரிவாக ஓடிய நதி தாமிரபரணி. இது உண்மை என்பதை இப்பவும் உணர்த்த கடலில் கலக்கும் இடத்தில் கூட 6 பிரிவாக தாமிரபரணி ஓடும்.
நம்ம தாத்தா கோயிலுக்கு தீர்த்தம் எடுக்க சங்கு முகம் போவாரு. அங்க பல பிரிவா ஒடுத தாமிரபரணியை பாத்து இருககாரு. போவும் போது தண்ணீ இருக்காதாம். போவும் போது தண்ணீ ஆளை முக்குத மாரி வந்துருமாம். சுமார் மூனு நாலு கிலோ மீட்டருக்கு நடந்தே போயி கோயிலுக்கு தீர்த்தம் எடுப்பாவ.
வெள்ளம் வந்தா கேட்கவே வேண்டாம். இதனால் நம்ம முன்னோர்கள் மடையை கட்டி தேக்கி வைக்க முடிவு செஞ்சாவ பனை மரங்களையும், தழைகளையும் வெட்டி போட்டு அடைச்சு வைச்சவா. முதலிலு அப்படி வச்சவிய காலம் மாற மாற அணை கட்ட முயற்சி செஞ்சாவ. அப்படியே வெள்ளாமை விளைய வைக்கவும் முடிவு செஞ்சாவ. இதுக்காக கல்லை பொறுக்கி கொண்டு வந்து அடுககினாவ. அப்புறம் அதுல மடை வைச்சாவ. அந்த இடத்தில இருந்து கால்வாய் வெட்டி வெள்ளாமை செஞ்சாவ”.
கதை யை கேட்ட ராசுக்குட்டி கண்கள் விரிந்தது.
“ஏரியை திட்டம் போட்டு உருவாக்கினாவ. அதிலே இருந்து தண்ணீரை வெளிக்கொண்டுவர பயன்படுத்திய தொழில் நுட்பம் தான் மடை. அதுக்காக பல மக்களை அரசன் பயன்படுத்தினான். பெரிய பெரிய பனை மரங்களை முழுசா கொண்டு வந்து தண்ணீர் நீரோட்டத்தை முறைப்படுத்தினாவ. மரம் வெட்டுபடாமல் , உழியை போட்டு வெட்டினால் நெருப்பு பொறி பறக்கணும். இதுதான் மடைக்கு ஏத்த மரம். வைரம் பாய்ந்த கட்டை. இப்படித்தான பனை மரங்களைத்தேர்வு செய்வவா. அப்புறம் வாய்ச்சுன்னு ஒரு பனை மரம் வெட்டும் கருவி. இதை கொண்டு பனை மரத்தை வெட்டுவாவ. அப்புறம் உள்ளே உள்ள தண்டை புறாவும் நீக்கிட்டு உறுதியா நீண்ட குழாய் மாரி தாயாரிப்பாவ. இப்போ மடை தாயாராயிட்டு. இந்த பனையை துண்டு துண்டா வெட்டி வரிசையா பொதைப்பாவ. அதுக்கும் மேலே கோரை, நாணல் , களிமண் கலந்து அடைச்சு வைச்சிருவாவ. இந்த குழாய் வழியா தண்ணீர் போவ முடியாது”.
ராசுக்குட்டிக்கு வித்தியாசமாக இருந்தது.
“இப்படித்தான் ஆரம்ப காலத்தில மடையை உருவாக்குனாவ.
ராசுக்குட்டிக்கு ஆச்சி சொன்ன கதை வித்தியாசமா இருந்தது. “இப்போ பெரிய வெள்ளம் எதுவும் வரலை. அப்படியே வந்தாலும் வைக்கப்படப்பு எல்லாம் அடிச்சிட்டு வரலை. அப்படியே மருதூர் அணைப்பக்கம், ஸ்ரீவைகுண்டம் அணைப்பக்கம் போன அங்க கற்களால கட்டின மடைதான் இருந்துச்சு. ஆனால் ஆச்சி பனை மரமுன்னு சொல்லுதா. ஆச்சரியமா இருக்கு”.
“ஆச்சி அப்புறம் சொல்லு” என்றான்.
“ஆனால் வெள்ளம் வந்துட்டா, இந்த பனை மரத்து மடையை சுலபமாக திறக்க முடியாது. அதுக்காகவே ஒவ்வொரு ஊரிலேயும் சில ஆள்கள் இருப்பவா. இவுக மடையர் குடும்பமுன்னு பேரு. அவுக ஊருக்கு ஊர், ஒரு குடும்பம் இருப்பவா. அவுகளுக்கும் பொண்டாட்டி பிள்ளைகுட்டி எல்லாம் இருக்கும்.
மழைக்காலங்களில மடை நிறைஞ்சு போயிரும். அந்த சமயத்தில தண்ணீரை திறக்கணும். இல்லாட்டி ஊருக்குள்ள தண்ணீர்போயிரும். அப்புறம் ஊரை அழிஞ்சிரும். பல ஆயிரம் உசுரு போயிரும். அதனால ஊருல உள்ளவிய பல பேரு தண்ணீக்கிட்ட போவவே மாட்டாவ”.
ராசுக்குட்டி அமைதியாக இருந்தான்.
“சும்மாவ சொல்லியிருக்காவ. உள்ளூரு காரணணுக்கு பேயின்னா பயம், வெளியூரு காரனுக்கு தண்ணீனால பயமுன்னு. அப்படித்தான் வெள்ளக்காலத்தில் சுழி போட்டு தண்ணீ இழுத்துட்டு போயிரும். அதனால அந்த மடையர் குடும்பம் தான் மடையை திறக்கணும்.
இது சாதரண விஜயமில்லை. தன்னோட உயிரை பணயம் வைத்து தான் இந்த மக்க தண்ணீ திறப்பாவ”.
“தன்னோட கணவர் மடை திறக்கப்போறாரு. அவர் திரும்பி வந்தாதான் உண்டுன்னு அவரு பெண்டாட்டிக்கும் தெரியும் , குழந்தை குட்டிக்கும் தெரியும். ஆனா அவுக அழுது கொண்டே அவரு கூட ஆற்றுகரைக்கு வருவாவ. ஆனா அந்த மடையர் எதை பததியும் கவலை படாம தன் உயிர் போனலும் சரி. நம்ம ஊரு மக்களை காப்பாத்துணுமுன்னு நினைப்பார்”.
“இப்படித்தான். ஒரு காலத்தில நம்ம ஊருல ஒரு மடையர் இருந்தாரு. பொதிகை மலையில பெய்த அடை மழையில ஊருக்குள்ள வெள்ளம் வந்துட்டு. மடையை திறக்கலைன்னா. ஊரு அழிஞ்சே போயிரும்”.
“கன்னி மாரு பெண்களை கூட்டிட்டு போயி, நதியை வாரியலையா அடிச்சு எங்களுக்கு மழை வேண்டாம், மழை வேண்டாமுன்னு வேண்டி பாத்தாவ. ஆனா வருண பகவான் கேட்கலை. மழை நேரத்துக்கு நேரம் அதிகமாகி கிட்டே இருந்துச்சு. கடைசியில் மடையர் குடும்பத்தோட வந்தாரு. அவர் மனைவி தேம்பி தேம்பி அழுதா. வேண்டாம் . உங்க உயிர் போயிட்டா. உங்க பிள்ளைய அனாதையா போயிடுமுன்னு அழுதா. பிள்ளையளும் அப்பா வேண்டாம். நீங்க வேணுமுப்பா. நல்லா இருப்பிய மடைக்குள்ள போவதீங்கன்னு என்று அழுதனர்”.
“ஊர் மக்க கண்களிலும் கண்ணீர் வடிஞ்சி கிட்டே இருந்துச்சு”.
ஆச்சி சொன்னா கதை யில் ஒரு அர்த்தம் இருந்தது. எல்லோரும் அழுவதற்கு காரணமும் இருந்துச்சு.
மடையை நீரில் மூழுகி திறப்பவர்கள். தனது மூச்சை தம் பிடித்து அடைத்துக்கொண்டு திறப்பார்கள். சில சமயம் மடை வழியாக இவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரையும் இழப்பர். சில நேரம் மடைக்குள் இவர்கள் உடல் இழுத்து உள்ளே போய் செருகி விடும். 100 ல் 5 விழுக்காடு பேர் தான் மடையை திறந்து விட்டு வெளியே வருவார்கள்.
ஊர் அழிந்து விடக்கூடாது என்று இந்த காரியத்தில் ஈடுபடுடவே இந்த குடும்பத்தால் வழிவழியாக வாழ்ந்து வருவார்கள்.
இவர்கள்தான் மடையர்கள். மடையை ஆளுபவர்கள்.
இந்த மடையர்கள் மடைதிறக்க போகும் போது, அவர்களின் குடும்பத்தார் கண்ணீர் மல்க வழியனுப்பி வைப்பார்கள். அவர்கள் திரும்ப வந்தாலும் தான் வருவார்கள்.
மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்கள் உயிரை துச்சமாக மதித்தவர்கள் மடையர்கள். ஆனால் இந்த மடையர் என்ற வார்த்தை தற்போது வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது.
மடையைத் திறக்க ஒருவர் உளே மூழ்கும் போதே உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக்கொண்டுதான் அனுப்புவார்கள். மூழ்குபவர் மனைவி, குழந்தைகளிடம் எல்லர்ம ஆற்றாமையுடன் விடைப் பெற்றுக் கொண்டு தான் ஏரிக்குள் இறங்குவார். இப்படி மடை திறக்கச் சென்று மீண்டு வந்தவர் பலர் மாண்டு போனவர் பலர்.
அது போலத்தான் இந்த குடுபத்திலும் இந்த மடையர் வந்தார்.
ஆச்சி சொல்லும் போதே அவள் கண்களிலும் கண்ணீர் வந்தது.
“அந்த மடையர் தண்ணீருக்குள் குதித்தார். சிறிது நேரம் மூச்சை அடுக்கி கொண்டு மடைக்குள் சென்றார். அடைத்து வைத்திருந்த கோரை புல்லை பிடுங்கி மடையை திறந்தார்.
மறுநிமிடம் மடையில் மறுவழியில் வெள்ளம் பிய்த்துக்கொண்டு ஓடியது.
மனைவி குழந்தைகள் எல்லாம் மறு வழியில் வந்து நின்று அவர் வந்து விடுவார் வந்து விடுவார் என எதிர்பார்த்தனர்.
அவர் வரவே இல்லை.
இழுத்து சென்ற வெள்ளம் அவர் உடலை கூட காண வில்லை. அவர் தண்ணீரில் சென்னாரா?. இல்லை. மடைக்குள் சென்றாரா? என தெரியவில்லை.
ஆனால் அவர் தெய்வமாகிவிட்டார்.
மடைசாமி என பெயர் வைத்து அவரை நம்ம கிராம மக்கள் வணங்கி வருகிறார்கள். வருடந்தோறும் அவருக்கு பொங்கல் படையல் எல்லாம் வைக்கோம். நாம செத்து போயிருவோமுன்னு தானே போய் மக்களை காப்பாத்த மடையை திறந்து உயிரை விட்ட அந்த தியாகிகள் தான் மடையர்கள். அவர்களை இழந்து தவித்த குடும்பத்தில் வாரிசு. திரும்பவும் தங்கள் குடும்பத்தில் ஊர் மக்களை காப்பாற்ற இன்னொரு மடையரை தயார் செய்து விடுவார்கள். அவரும் மக்களுக்காக தெரிந்தே உயிரை விட்டு மக்களை காப்பாற்ற தயாராகிவிடுவார்”.
இது தான் மடையர் என்னும் தியாகியின் கதை.
ஆச்சி சொன்னவுடன் ராசுக்குட்டிககு கண்ணீர் இருந்து கண்ணீர் வடிந்தது. Êசாப்பிட்டு கொண்டிருந்த கொழுக்கட்டையை கூட தனியே வைத்துவிட்டான்.
மனதை தொட்டுச் சொல்லுங்க , இனியும் யாரையாவது மடையா என்று திட்டு வீர்களா? நீங்கள்.
ராசுக்குட்டி யோசித்தான். “ஆகா. மடையன் என்றால் இப்படியரு வரலாறு இருக்கா?” என நினைத்தான்.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)